கண்ணோட்டம் : சட்டம் பற்றிய அறிவினை வலுப்படுத்தல்

Published By: Digital Desk 3

21 May, 2024 | 09:16 AM
image

லஹிரு எஸ். திலகரத்ன

எந்தவொரு துறையிலும் ‘எழுத்தறிவு’ என்றால் என்ன என்பதை முதலில் அவதானிப்போம். எழுத்தறிவு என்பது குறித்த விடயத்தைப் பற்றிய தகவல்களைப் புரிந்துகொள்வது மற்றும் விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்வதாகும். மேலும், இந்த அறிவை நடைமுறை அல்லது பொருத்தமான சூழல்களில் பயன்படுத்தும் திறனும் இதற்குள் அடங்கும்.  

இலங்கையின் அடிமட்டத்தில் பொது சட்ட எழுத்தறிவு தொடர்பாக நாம் அவதானம் செலுத்துவதால், பொதுச் சட்ட எழுத்தறிவு என்றால் என்ன என்பதை தெளிவாக வரையறுப்பது அவசியம்.

பொதுச் சட்ட எழுத்தறிவு என்பது சட்டம், சட்ட அமைப்புகள் மற்றும் சட்ட உரிமைகள் பற்றி பொதுமக்களிடம் காணப்படும் புரிதல் மற்றும் விழிப்புணர்வு நிலையைக் குறிக்கின்றது. இது அடிப்படை சட்டக் கோட்பாடுகள், சட்டத்தின் கீழ் உள்ள உரிமைகள் மற்றும் பொறுப்புகள் மற்றும் சட்ட கட்டமைப்பை வழிநடத்தும் திறன் பற்றிய அறிவு ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும், சட்டச் சிக்கல்களை அடையாளம் காணவும், அவர்களின் சட்ட உரிமைகளைப் புரிந்து கொள்ளவும், சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் மக்களுக்கு பொதுச் சட்ட எழுத்தறிவு உதவுகின்றது. 

இலங்கையில் பொது சட்ட எழுத்தறிவின் நிலையை தீர்மானிக்கும் முறை, அதன் அவசியம் மற்றும் சமூகத்தின் மீதான தாக்கங்கள் பற்றிய தீர்மானங்களை  எடுப்பது போன்றன அடுத்து எழும் கேள்விகளாகும். நிபுணர்களின் கருத்துக்கள், தனிப்பட்ட அனுபவங்கள் அல்லது உள்ளுணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் சட்டத்தை மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டுமென ஒரு ஆதாரம் தெரிவிக்கின்றது. இலங்கையில் உள்ள மக்களுக்கு சட்டம் பற்றி எவ்வளவு தெரியும் என்பதை அளவிடும் எந்த ஒழுங்கமைக்கப்பட்ட ஆய்வுகளும் தற்போது இல்லை.

எனவே, கேள்வி என்னவென்றால், ஒருவர் சட்டப்பூர்வமாக எழுத்தறிவு பெற்றவரா என்பதை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது? மேலும், உலக அளவில் சட்ட எழுத்தறிவை மதிப்பிடுவதற்கான பிரத்தியேக நடவடிக்கை இல்லை. மாறாக, அதைப் பற்றிய அனுமானங்களைச் செய்ய நாம் பொதுவான சட்டக் குறியீடுகளை நம்பியிருக்க வேண்டும்.

‘திறந்த அரசாங்கம்’ என்று அழைக்கப்படும் ஒரு காரணியை உள்ளடக்கியுள்ளதால், உலக நீதி செயற்திட்டத்தின் சட்டத்தின் ஆட்சிக் குறியீடு முக்கியமானதாகும். இது அரசாங்கங்கள் எவ்வளவு வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுடன் உள்ளன மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைகளில் மக்களை எந்தளவிற்கு ஈடுபடுத்துகின்றது என்பதை மதிப்பிடுகின்றது.

இது பொதுச் சட்ட எழுத்தறிவை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இந்தக் காரணியின் அதிக மதிப்பெண், அதிக சட்ட எழுத்தறிவு விகிதத்தை பரிந்துரைக்கிறது அல்லது பங்களிக்கக்கூடும். 2023ஆம் ஆண்டில், இலங்கை இந்த சுட்டெண்ணில் 1இற்கு 0.51 புள்ளிகளைப் பெற்று, உலகளவில் 142 நாடுகளில் 67ஆவது இடத்தைப் பிடித்தது. எனவே, இந்த மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் பொதுச் சட்ட எழுத்தறிவை மேம்படுத்தி வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பது தெளிவாகிறது.

எழுத்தறிவின் எந்த வடிவத்தையும் முறையான அல்லது முறைசாரா வகைகள் மூலம் மேம்படுத்தலாம். அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் முறையான வகைகள் என்றும், சிவில் சமூகக் குழுக்கள் அல்லது தனியார் துறையால் வழிநடத்தப்படும் திட்டங்கள் முறைசாரா வகைகள் என்றும் கூறப்படுகின்றது.

முறைசார்ந்த வகை எனும்போது, பாடசாலை பாடத்திட்டத்தின் மூலமான கற்கையே பிரதானமாகும். 6 முதல் 11ஆம் வகுப்பு வரை, மாணவர்கள் சட்டம், ஜனநாயகம், மனித உரிமைகள், நிர்வாகம் மற்றும் சர்வதேச உறவுகளைப் பற்றி குடியியல் கல்வி என்ற பாடத்தில் கற்றுக்கொள்கின்றனர். இது முழுமையான தத்துவார்த்த புரிதலை அவர்களுக்கு வழங்குகின்றது.

சட்ட எழுத்தறிவை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் எந்தவொரு முறையும் சட்டத்தைப் புரிந்துகொள்வதற்கான மக்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இல்லையென்றால், பரீட்சைகள் அல்லது கணக்கெடுப்புகளில் அளவிடப்படும் புள்ளிவிபரமாக மட்டுமே சட்ட எழுத்தறிவு பார்க்கப்படும்.

சராசரி நபர் ஒருவர் எந்தவொரு பாடத்தையும் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு படிக்க விரும்புவது ஏன்? காரணம், கற்றுக்கொண்ட பாடத்தைப் பயன்படுத்துவதன் நடைமுறைப் பலன்கள், அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வதில் செலவழிக்கும் நேரத்தையும் முயற்சியையும் விட அதிகமாகும். செல்வத்தை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் நிதியியல் அறிவைப் பயன்படுத்துவதன் பயனைப் போலவே, சட்ட எழுத்தறிவும் அன்றாட வாழ்வில் அடிமட்ட அளவில் நடைமுறைப் பலன்களைக் கொண்டிருக்க வேண்டும். எனவே, சட்ட எழுத்தறிவுத் திட்டங்கள், ஒரு நாட்டின் சட்டங்களைக் கற்றுக்கொள்வதற்கும், பயிற்சி செய்வதற்கும், அதில் ஈடுபடுவதற்கும் இயல்பாகவே உந்துதல் பெறுவதற்கு நடைமுறைச் சலுகைகளை வழங்க வேண்டும்.

விளையாட்டுக்களில் மக்கள் ஏன் நடைமுறைகளை கற்றுக்கொள்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள் மற்றும் விதிகளை கடைபிடிக்கிறார்கள் என்பதை ஆராய்வதன் மூலம் இந்த நடைமுறை காரணங்களை நாம் கண்டறியலாம். விளையாட்டு என்பது இயல்பாகவே விதிகளை உள்ளடக்கியது. அவை இல்லாவிட்டால்,  விளையாட்டு நிறுத்தப்பட்டு அது குழப்பமாக மாறும். விதிகளின் அடிப்படையில் ஏனைய நிகழ்வுகளை விட விளையாட்டுகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஏனெனில் அவை இயற்கை உலகம் மற்றும் மனிதனால் உருவான சமூகங்களின் இயக்கவியலை மிக நெருக்கமாக பிரதிபலிக்கின்றன.

பூஜ்ஜிய-தொகை பெறுபேறுகளை உருவாக்கும் வகையிலேயே விளையாட்டுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இயற்கை மற்றும் சமூகம் இரண்டிலும் காணப்படும் பல தொடர்புகளைப் போலவே, இது விதிகளால் நிர்வகிக்கப்படுகிறது. இது சமூகத்தை மிகைப்படுத்துவது போல் தோன்றினாலும், விளையாட்டுகளைப் போலவே,  பரோபகாரத்தை மட்டும் காட்டாமல், ஒருவருக்கொருவர் நன்மை செய்ய தமக்குள் ஒத்துழைக்கின்றனர். 

இன்று விளையாட்டுகள் மற்றும் சமூகத்தில் விதிமுறைகளின்  பங்கைப் புரிந்துகொள்வதற்கும், சட்டப்பூர்வமாக எழுத்தறிவினை பெற்றுக்கொள்வதற்கு மக்களை ஊக்குவிக்கும் நடைமுறை காரணங்களைக் கண்டறிவதற்கும், நேர்மறையான கண்ணோட்டத்தினை பயன்படுத்துவது சிறந்தது.

நேர்மறைவாதம் என்பது சட்டத்தில் உள்ள ஒரு சிந்தனைக் கோட்பாடாகும். இது விதிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை விளக்குவதை விட எவ்வாறு செயற்படுகின்றன என்பதை விபரிக்கின்றது. இது விதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை விபரிக்கிறது. எனினும், எந்தவொரு துறையிலும் வழிகாட்டுதல்கள் அல்லது இலக்குகள் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதை அங்கீகரிப்பது முக்கியம். துறையை மேம்படுத்துவதற்கும் முன்னேற்றுவதற்குமான அவர்களது ஆற்றலை பாராட்ட வேண்டும்.

எனவே, நேர்மறைவாத கண்ணோட்டத்தைப் பயன்படுத்தி, விதிகளின் செயற்பாடுகள் மற்றும் அவற்றை எவ்வாறு செயற்படுத்துவது என்பதை மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நடைமுறைக் காரணங்களைப் பற்றிய ஒரு புறநிலை புரிதலைப் பெறலாம். பகுத்தறிவு முகவர் என்று பொருளாதாரம் குறிப்பிடுவதைப் போலவே, தமது சுயநலத்தைத் தொடர வேண்டும் என்பதே மனிதர்களின் உள்ளார்ந்த விருப்பமாகும். எனவே, குழப்பம் மற்றும் அராஜகத்திற்கு உள்ளாகாமல் விரும்பிய தீர்மானத்தை உறுதிசெய்து, தமது அணியில் உள்ளவர்கள் மற்றும் எதிரணியினருடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பது பற்றிய பகிரப்பட்ட புரிதலை ஏற்படுத்த மக்களுக்கு விதிகள் தேவைப்படுகின்றன.

ஜோசப் ராஸின் கூற்றுப்படி, விதிகளைப் பின்பற்றுவதற்கான நடைமுறை காரணங்களை கூறினால் மாத்திரமே விதிகள் அதிகாரப்பூர்வமானவை என மக்கள் நினைக்கிறார்கள். தனிநபர்கள் மற்றும் குழுக்கள் வெற்றிபெறுவதற்கு ஒத்துழைக்க விதிகள் உதவினால், அவை வெளியில் இருந்து திணிக்கப்பட்டதாகக் கருதப்படுவதற்குப் பதிலாக ‘உள்நிலைப்படுத்தப்படும்’ வாய்ப்புகள் அதிகம். விதிகள் உள்வாங்கப்படும்போது, மக்கள் அவ்வாறு செய்யக் கடமைப்பட்டவர்களாக உணராமல், அவற்றைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என சட்ட தத்துவஞானியான எச்.எல்.ஏ.  ஹார்ட் கூறுகின்றார்.

எந்தவொரு பொதுச் சட்டக் கல்வித் திட்டத்தின் முக்கிய நோக்கமும், கற்றல் விதிகள் ஏன் நடைமுறை மற்றும் சுய-விருப்பத்தை  அதிகப்படுத்துவதற்கும், அன்றாட வாழ்வில் விதிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் பயனுள்ளது என்பதை விளக்குவதாக அமைய வேண்டும்.

சட்ட கட்டமைப்பு, உரிமைகள், கடமைகள், அரசியலமைப்பு, அடிப்படை மற்றும் நடைமுறைச் சட்டங்கள் பற்றி மக்களுக்கு நாம் கற்பிக்க முடியும். ஆனால், அந்தத் திட்டம் காரணங்களைக் கூறி, அன்றாட வாழ்வில் சட்டத்தைப் பிரயோகிக்கக் கடமைப்பட்டவர்களாக உணரும் மனப்பான்மையை ஏற்படுத்தினால் ஒழிய அது வெற்றியடையாது.

சட்ட விதிகளை மக்கள் உள்வாங்கி, அவற்றைச் செயலற்ற முறையில் கற்று மறந்துவிடாமல், அவற்றைப் பயன்படுத்தும்போது உண்மையான சட்ட எழுத்தறிவு பெறப்படுகிறது என்பதே இதன் கருத்தாகும்.

லஹிரு எஸ். திலகரத்ன, சர்வதேச பொதுச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சட்டத்தரணியாவார். teandiplomacy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அவரை தொடர்புகொள்ள முடியும்.

Factum என்பது சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றி செயற்படும் ஆசியாவை மையமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவாகும். www.factum.lk என்ற இணையத்தளத்தில் இது தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் இந்தக் கட்டுரையை எழுதியவரின் சொந்தக் கருத்தேயன்றி, அவை எந்தவகையிலும் எமது நிறுவனத்தை பிரதிபலிப்பதாக அமையாது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய அரசாங்கத்தின் நெறிமுறைகளுடன் அரச பொறிமுறைகள்...

2025-01-15 10:08:35
news-image

தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகள் -...

2025-01-12 17:38:39
news-image

உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில்...

2025-01-12 16:35:46
news-image

தாய்வானை சீன மாகாணம் என்பதால் அமெரிக்கா...

2025-01-12 16:26:02
news-image

ஐ.தே.க.வுடன் இணைவதற்கு மனம் இன்றி சம்மதித்த...

2025-01-12 16:19:41
news-image

திணறடிக்கும் பொருளாதாரம்

2025-01-12 15:41:46
news-image

அதிகாரத்தின் வீழ்ச்சி - 2024 இல்...

2025-01-12 15:20:56
news-image

பிடியை இறுக்கும் வெளிவிவகார அமைச்சு

2025-01-12 14:37:42
news-image

மாறி மாறி ஏமாற்றப்படும் ஜெனிவா

2025-01-12 14:18:32
news-image

சீனப் பயணம் அனு­கூலம் தருமா?

2025-01-12 13:48:49
news-image

தடை போடுவாரா சுமந்திரன்?

2025-01-12 13:16:29
news-image

வரலாற்று பாரம்பரியத்தை பறைசாற்றும் ஒடிசா

2025-01-12 12:45:18