ரொபட் அன்டனி
இலங்கையில் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சி நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டு வந்துகொண்டிருக்கின்ற நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வை வெளியிட்டுள்ள மத்திய வங்கி இலங்கைப் பொருளாதாரமானது முன்னைய ஆண்டில் எதிர்கொண்ட அதன் பாரிய பொருளாதாரப் பேரழிவினைத் தொடர்ந்து, 2023 இல் மீட்சிப் பாதையை நோக்கி நகர்ந்தது என்று அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் அந்த அறிவிப்பு மிக முக்கியமானது. காரணம் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியினால் எந்தளவு தூரம் பொருளாதார சுமையை மக்கள் எதிர்கொண்டனர் என்பது புதிதாக கூற வேண்டியதில்லை.
பேரழிவை தந்த நெருக்கடி
மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை 2022ஆம் ஆண்டில் எதிர்கொண்டது. வாழ்க்கைச் செலவு உயர்வு, மக்களின் வருமான வீழ்ச்சி, டொலரின் பெறுமதி அதிகரிப்பு, பணவீக்கம் உயர்வு, அத்தியாவசியப் பொருட்களுக்குத் திண்டாட்டம், எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு, தொழிற்சாலைகளின் உற்பத்திச் செயற்பாடுகள் பாதிப்பு, மின் வெட்டு என சொல்லொணா பொருளாதார ரீதியான துன்பங்கள் மக்களை வாட்டியெடுத்தன.
கடன் நெருக்கடி காரணமாக இலங்கை சர்வதேச கடன்களை மீள் செலுத்துவதை இடைநிறுத்த வேண்டிய சூழலும் உருவாகியது. இவ்வாறு 2022ஆம் ஆண்டு இந்த நாட்டின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது பல்வெறு கசப்பான அனுபவங்களை நாட்டுக்கு பெற்றுக் கொடுத்தது. அந்தப் பாதிப்பு இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் இலங்கை தற்போது மீண்டு வந்துகொண்டிருந்தாலும் கூட இன்னும் பொருளாதார ரீதியான சவால்கள் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
மீண்டும் வரும் பொருளாதாரம்
இந்நிலையில் 2023ஆம் ஆண்டில் இலங்கை எவ்வாறு குறிப்பிடத்தக்களவில் மீண்டு வந்தது என்பதற்கு பல்வேறு விடயங்களை மத்திய வங்கி கோடிட்டுக்காட்டியுள்ளது. ‘’ மீட்சியானது துரிதமான பணவீக்க வீழ்ச்சி, மேம்படுத்தப்பட்ட வெளிநாட்டுத்துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மை, நிதியியல் முறைமை ஸ்திரத்தன்மை போன்றவற்றின் மூலம்ஏற்பட்டது’’ என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
முக்கியமாகஅரசாங்கத்தினதும் மத்திய வங்கியினதும் கொள்கை நடைமுறைப்படுத்தல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டுடன் இணைந்த கட்டமைப்புசார் சீர்திருத்த நிகழ்ச்சி திட்டம் என்பன ஒட்டுமொத்த பொருளாதார உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது என்றும் மத்திய வங்கி அறிவித்தது.
முன்னேற்ற குறிகாட்டிகள்?
மத்திய வங்கி குறிப்பிடுவதைப் போன்று இலங்கை குறிப்பிடத்தக்களவில் இலங்கை பொருளாதார ரீதியில் மீண்டு வந்துகொண்டிருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. 90 வீதமாக காணப்பட்ட உணவுப் பண வீக்கம் மற்றும் 70 வீதமாக காணப்பட்ட பொதுவான பணவீக்கம் என்பன ஒற்றை இலக்கத்துக்கு வந்துள்ளன.
நாட்டுக்குள் டொலர் உள்வருகை சீராக இடம்பெறுவதால் ரூபாவின் பெறுமதி 380 ரூபாவிலிருந்து 296 ரூபா வரை வலுவடைந்திருக்கிறது. மத்திய வங்கியின் வெளிநாட்டுக் கையிருப்பு 5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது. அரச வருமானம் கிட்டத்தட்ட 12 வீதமளவுக்கு வந்திருக்கிறது. அதேபோன்று எரிபொருள், எரிவாயு என்பன தாராளமாக கிடைக்கின்றன.
அந்த வகையில் ஒரு மீட்சிப் பாதையை நோக்கி இலங்கை பயணிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகின்றது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டு விட்டது. மறுபுறம் சர்வதேச கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
நாணய நிதியத்தின் கடன் தவணைப் பணம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றது. வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டிலிருந்து பொருளாதாரம் நேர் பெறுமானத்தில் வளர்ச்சியடைய ஆரம்பித்திருக்கிறது. தனியார் துறையினர் கடன் பெறும் வீதம் அதிகரித்திருக்கின்றது. இதனூடாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகள் வலுவடைய ஆரம்பித்துள்ளன. சுருங்கியிருந்த பொருளாதாரம் விரிவடைய ஆரம்பித்துள்ளதுடன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி இலங்கை பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது.
இறுதி காலாண்டில் வளர்ச்சி
‘2023 இல்பொருளாதாரமானது வளர்ச்சிப் பாதைக்கு மாற்றமடையத் தொடங்கியது. தொடர்ச்சியாக ஆறு காலாண்டு காலமாகப் பதிவுசெய்யப்பட்ட பொருளாதாரச் வீழ்ச்சியின் பின்னர், பொருளாதாரம், 2023ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் வளர்ச்சியை பதிவுசெய்தது’ என்று மத்திய வங்கியின் 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மத்திய வங்கியின் ஆய்வின் பிரகாரம் பொருளாதாரம் சாதகமான நிலையில் மீண்டு வந்தாலும் கூட வாழ்க்கைச் செலவு உயர்வு இன்னும் மக்களை பாதித்துக் கொண்டுதானிருக்கின்றது. வாழ்க்கைச் செலவு உயர்வினால் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவதை அரசாங்கத் தரப்பினரும் ஏற்றுக்கொண்டுதான் வருகின்றனர்.
பணவீக்கம் குறைவடைந்திருக்கிறது. ஆனால், பொருட்களின் விலைகள், சேவைகளின் கட்டணங்கள் இன்னும் பழைய நிலைமைக்கு செல்லவில்லை. ரூபாவின் பெறுமதி தற்போது 296 ரூபாவாகக் காணப்படுகிறது. அது மேலும் குறைவடையாமல் இருப்பதற்காக மத்திய வங்கிக் கட்டமைப்பில் இருக்கின்ற டொலர்களை மீளப்பெறும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றது. அண்மையில் கூட மத்திய வங்கி கட்டமைப்பில் இருந்து 1200 மில்லியன் டொலர்களை மீளப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாழ்க்கைச் செலவு உயர்வை குறைப்பதற்கும் மக்கள் தமது பொருளாதார தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான சூழல் உருவாக வேண்டியது அவசியமாகும்.
இதேவேளை 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தொழிலின்மை மாற்றமின்றி காணப்பட்டபோதிலும், 2023ஆம் ஆண்டில் தொழிற்படை பங்கேற்பு மேலும் வீழ்ச்சியடைந்தது. 2022இல் எப்பொழுதுமில்லாத வகையில் உயர்ந்தமட்டத்தையடைந்த பணவீக்கம், ஓர் ஆண்டிற்குள் ஒற்றை இலக்க மட்டங்களுக்குத் திரும்பியது. 2023ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து மத்திய வங்கி தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை காரணமாக சந்தை வட்டி வீதங்கள் 2023இல் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்றைப் பதிவுசெய்தன என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மாற்றங்களை ஏற்படுத்திய வட்டி வீதம் குறைப்புகள்
வட்டி வீதம் குறைப்பு என்பது மிக முக்கியமானதொரு பொருளாதார அடைவு மட்டமாக காணப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு வைப்புக்களுக்கான வட்டி வீதம் 15.5 வீதமாகவும் கடன்களுக்கான வட்டி வீதம் 16.5 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதனால் வங்கிக் கடன்களுக்கான வட்டி வீதம் 30 வீதமளவில் உயர்வடைந்தது. இதன் காரணமாக, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் கடன்களைப் பெற்று தமது வர்த்தக செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பொருளாதாரம் சுறுக்கமடைந்தது. வேலைவாய்ப்புக்கள் குறைவடைந்தன. மக்களின் வருமானம் வீழ்ச்சியடைந்தது. இதன் காரணமாக மக்களினால் தமது பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத சூழல் உருவாகியது. எனினும், தற்போது வட்டி வீதங்கள் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளன. வைப்புக்களுக்கான வட்டி வீதம் 8.5 ஆகவும், கடன்களுக்கான வட்டி வீதம் 9.5 வீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன. இதன் பிரதிபலிப்பு சந்தையிலும் தென்பட ஆரம்பித்திருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான நிலைமையாகும்.
வெளிநாட்டு வர்த்தகம்
இதேவேளை வெளிநாட்டு வர்த்தகத்தில் மந்தமான போக்கு நிலவுவதை மத்திய வங்கி அவதானித்துள்ளது. இலங்கை பல வருடங்களாக தொடர்ந்து ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையிலான வித்தியாசம் மறை பெறுமானத்தில் அதிகரித்து வருகின்றது.
‘ 2023 இல் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்தது. இது ஆடை ஏற்றுமதிகளின் வீழ்ச்சியின் மூலம் பதிவானது. அதேவேளை, இறக்குமதிச் செலவினத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டது. குறைவடைந்த பொருளாதார நடவடிக்கைகள், இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் இறுக்கமான நாணய மற்றும் இறை நிலைமைகள் என்பன காரணங்களாயமைந்தன’ என்று மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது.
இலங்கையில் ஏற்றுமதி, இறக்குமதி விடயங்கள் தொடர்ந்தும் சவாலுக்கு உரியனவாகவே காணப்படுகிறது. 2023ஆம் ஆண்டிலும் ஏற்றுமதி, இறக்குமதிக்கிடையில் பாரியதொரு வித்தியாசம் காணப்படுகிறது. கடந்த வருடத்தில் ஏற்றுமதி வருமானம் கிட்டத்தட்ட 12 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றன. மறுபுறம் இறக்குமதியானது 16.8 பில்லியன் டொலர்களாக இருக்கின்றன.
எனவே, வர்த்தக நிலுவையானது 4.9 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளன. எனினும், தற்போது கடன் மீள்செலுத்தல் நிறுத்தப்பட்டுள்ளதால் நிலைமையை சமாளிக்கக் கூடியதாக உள்ளது. கடன் மீள் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதும் ஏற்படும் சவாலான நிலைமையை சமாளிப்பதற்கு திட்டங்கள் அவசியமாக இருக்கின்றன.
தொடரும் சவால்கள்
மத்திய வங்கி இந்த வளர்ச்சி தொடர்பாக பல்வேறு விடயங்களை கோடிட்டுக் காட்டியிருக்கின்றது. ஆனாலும், இன்னும் சவால்கள் நீடிக்கின்றன என்பதை மறுக்க முடியாது. மக்களின் வாழ்க்கைச் செலவு குறைக்கப்பட வேண்டும். அதேபோன்று மக்களுக்கு சுமையின்றி அரசாங்க வருமானத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. வறுமை அதிகரித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம் வறுமை 25.9 வீதமாக உயர்வடைந்துள்ளது. 2019ஆம் ஆண்டில் வறுமை வீதம் 14 ஆக காணப்பட்டது. லேர்ன் ஏசியா நிறுவனத்தின் ஆய்வின் பிரகாரம் 30 இலட்சமாக காணப்பட்ட வறிய மக்களின் எண்ணிக்கை 2023 இல் 70 இலட்சமாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வறுமையை நிலையை கையாள அஸ்வெசும திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஆனாலும் வறுமையை போக்க திட்டங்கள் அவசியமாகவுள்ளன.
ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைய வேண்டும். அதுவும் பொருளாதாரத்தில் பங்கெடுக்கின்ற தரப்பினருக்கு பாதிப்பில்லாத வகையில் செய்யப்படுவது அவசியமாகும். அதேபோன்று சர்வதேச கடன் மறுசீரமைப்பை செய்ய வேண்டியிருக்கிறது. இருதரப்பு கடன்மறுசீரமைப்பு சாதகமான நிலைமையில் காணப்பட்டாலும் தனியார் பிணைமுறை கடன் வழங்குனர்களுடன் மறுசீரமைப்பை செய்துகொள்வது சவாலாகவே நீடித்துக்கொண்டிருக்கின்றது.
அதேபோன்று அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாட்டிலும் சவாலான நிலைமை நீடிக்கின்றது. மேலும் நீண்டகால பொருளாதார திட்டங்களை வகுக்க வேண்டிய தேவையும் காணப்படுகிறது. எனவே, இன்னும் சவால்கள் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தச் சவால்களை சரியான முறையில் எதிர்கொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டியிருக்கிறது. மத்திய வங்கி அறிவித்துள்ளதைப் போன்று குறிப்பிடத்தக்களவில் பொருளாதாரம் சரிவிலிருந்து மேலே வந்துகொண்டிருக்கின்றது. அதனை சரியான முறையில் தூக்கியெடுக்க வேண்டியது சகல தரப்பினரதும் பொறுப்பாகும் இதில் பொதுமக்களுக்கு பாரிய சுமைகள் ஏற்படாத வகையில் நகர்வுகள் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது. தற்போது தேர்தல் காய்ச்சல் அடிக்க ஆரம்பித்துள்ளது. கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. எனவே, தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மறுசீரமைப்புகள் மற்றும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது சகல பங்குதாரர்களினதும் பொறுப்பாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM