சிவலிங்கம் சிவகுமாரன்
இறுதி யுத்தத்தின் அழிவுகளையும் துயரங்களையும் சுமந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் ஒரு அங்கமாக கஞ்சி வழங்கும் நிகழ்வை வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு பல வழிகளிலும் தடைகளையும் ஏற்படுத்தி வரும் அரசாங்கம், அந்நிகழ்வில் ஈடுபட்ட பெண்களை நடு இரவில் வீடு புகுந்து அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது.
சில பிரதேசங்களில் கஞ்சி பரிமாறலுக்கு நீதிமன்ற தடையை காரணங்காட்டி வரும் பொலிஸார், இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோர் காணாமல் போனோரை நினைவு கூருவதற்கும் தடை விதித்து வருகின்றனர். 2009ஆம் ஆண்டுக்குப்பின்னர் ஒவ்வொரு வருடமும் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படும் போதெல்லாம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு இந்த நெருக்கடிகள் ஏற்படுவது வழமையாகி விட்டது.
2016 ஆம் ஆண்டு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது, நினைவு கூருதல் உரிமையை உறுதி செய்யுமாறு அப்போதைய அரசாங்கத்துக்கு பரிந்துரைகளை செய்திருந்தமை முக்கிய விடயம். இந்த பொதுவான பரிந்துரைகளை அலட்சியப்படுத்தியுள்ள பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவுகளைப் பெற்று அமைதியான முறையில் இடம்பெறும் இந்த நிகழ்வுகளை நடத்த விடாமல் பல நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர்.
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு தடை விதிக்கும் உலகின் ஒரே நாடாக இலங்கை விளங்குகின்றது. இறந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்பதால் அவர்களை நினைவு கூருவதற்கு அனுமதியில்லையென்பது அரசாங்கத்தின் பதிலாக உள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதாக இந்திய மத்திய அரசு கடந்த 14 ஆம் திகதி அறிவித்திருந்தது.
இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலைச் சம்பவத்துக்குப் பிறகு 1991 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசு விடுதலை புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்தது. பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்த தடை நீடிக்கப்பட்டே வந்தது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு மே மாதம் புலிகள் அமைப்பை ஐந்து வருடங்களுக்கு தடை செய்திருந்தது இந்தியா. தற்போது 2024 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. தடைக்கான காரணங்கள் முக்கியமானவை.
விடுதலை புலிகள் அமைப்பு 2009 ஆம் ஆண்டு தோல்வியடைந்த போதிலும் ‘ஈழம்’ தொடர்பான நோக்கத்தை அந்த அமைப்பு இன்னும் கைவிடவில்லை. குறிப்பாக தமிழ் நாட்டில் ஈழம் கோட்பாட்டுக்கு ஆதரவு தரும் தரப்புகள் உள்ளன. அந்த அமைப்பின் முன்னாள் தலைவர்கள் ,உறுப்பினர்கள், ஈழத்துக்காக நிதி சேகரிப்பிலும் பிரசாரத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் இந்தியாவின் இறையான்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிப்பதாகவே உள்ளது. பிரிவினைவாத கருத்துகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் நிலை காரணமாகவே அமைப்பு ஐந்து வருடங்களுக்கு தடை செய்யப்படுகின்றது என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்த 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்தியா இந்த தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இலங்கையிலுள்ள பேரினவாத அமைப்புகள், கட்சிகளுக்கு மேலதிக போனஸ் கிடைத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழமையாகவே 2009 ஆம் ஆண்டுக்குப்பிறகு முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுகளைப் பற்றி மிக மோசமாக இனவாதத்தை கக்கி வரும் விமல் வீரவன்ச, சரத் வீரசேகர ஆகியோர் இம்முறையும் அதை செய்ய தவறவில்லை. விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்காவிடின் தெற்காசியாவின் இஸ்ரேலாக தமிழீழம் இருந்திருக்கும் என விமல் வீரவன்ச பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் 29 ஆயிரம் இராணுவ வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்தனர். ஆனால் அந்த தியாகத்துக்கு மதிப்பளிக்காமல் யுத்த குற்றங்கள் தொடர்பில் இராணுவத்துக்கு எதிரான சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சர்வதேச நீதிமன்றில் இலங்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து ஐ.நா கலந்துரையாடலை செய்வதாக ஐ.நா உயர்ஸ்தானிகர் கூறுகின்றார். இதை சாதாரண விடயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என அரச தரப்பு எம்.பி சரத் வீரசேகர பாராளுமன்றில் கூறியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பிறகும் அரசாங்கமானது வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு செலவீனங்களுக்கு பல பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை செய்தே வந்தது. இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக நீங்கவில்லையென்பதே இதற்கு அரசாங்கம் கூறும் பதிலாக இருந்தது. நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த விவகாரம் என்பதால் உயர்மட்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இதை கண்டுகொள்ளாமலும் கேள்வி எழுப்பாமலும் கடந்த சென்றனர்.
தற்போது இந்தியாவும் இதே வகையில், ஈழம் கோரிக்கை இன்னும் தொடர்கின்றது என்று கூறியுள்ளதோடு விடுதலை புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் தமிழ்நாட்டில் தொடர்வதாகக் கூறியுள்ளது. இந்தியாவின் தடை அறிவிப்பு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுப்பதற்கு வலு சேர்த்துள்ளது எனலாம். மிகப்பெரிய நாடான இந்தியாவே புலிகளின் செயற்பாடுகள் இன்னும் தொடர்கின்றன எனக் கூறும் போது, நேரடி பாதிப்புக்கு முகங்கொடுத்த சிறிய நாடான இலங்கை தனது இறையாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து ஏன் அக்கறை கொள்ளக் கூடாது என்று கேள்வியெழுப்புவதை தவிர்க்க முடியாது.
யுத்தம் முடிவுற்ற பின்னர் இலங்கையில் இடம்பெற்ற சகல தேர்தல் பிரசாரங்களிலும் யுத்த வெற்றியை முன்வைத்தே ராஜபக்ச குடும்பத்தினர் சிங்கள மக்களை ஈர்த்து அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெல்வதற்கு இவர்கள் பயன்படுத்திய மிக முக்கியமான ஆயுதம் யுத்த வெற்றியும் நாட்டின் இறையாண்மை பாதுகாப்புமே…..ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை இதற்கு சரியாக அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் அதிகாரத்தை கைப்பற்றியதும் அக்குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கைளையும் ராஜபக்ச சகோதரர்கள் முன்னெடுக்கவில்லை. இது அவர்களின் மீதான சந்தேகங்களை மக்கள் மத்தியில் அதிகரித்தது. கோட்டாபய துரத்தப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக விளங்கியது.
இவ்வருடம் ஏதாவதொரு தேர்தல் இடம்பெற்றால், மக்கள் மத்தியில் பிரசார நடவடிக்கைகளுக்குச் செல்வதற்கு ராஜபக்சக்களுக்கு ஒரு தயக்கம் நிச்சயமாக இருக்கும். யுத்த வெற்றி கதைகள் தற்போது மக்கள் மத்தியில் எடுபடாவிட்டாலும் புலிகள் அமைப்பின் மீதான இந்தியாவின் தடையை இவர்கள் ஊதி பெருப்பிக்கலாம். தனி ஈழம் கோரிக்கையை புலி ஆதரவாளர் இன்னும் கைவிடவில்லையென இந்தியா அறிவித்துள்ள நிலையில் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டு வரும் தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்திலும் அது தாக்கம் செலுத்தலாம். வடக்கு கிழக்கு தமிழ் அரசியல்வாதிகளையும் தமிழ் மக்களையும் புலிகளாகவே பார்த்து வரும் அரசாங்கம், சில நேரங்களில் சிங்கள மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு இதை ஒரு பிரசார நடவடிக்கையாக இப்போதிருந்தே ஆரம்பிக்கலாம்.
நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் பொலிஸாரும் இதை நியாயப்படுத்தலாம். இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜுன் 4 ஆம் திகதி வெளியாகவுள்ளன. இலங்கையின் அரசியல் செயற்பாடுகளில் இந்தியாவின் தலையீட்டை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அடுத்த நாட்டில் இடம்பெற வேண்டியது பாராளுமன்றத் தேர்தலா ஜனாதிபதித் தேர்தலா என்பதை தீர்மானிப்பது இந்தியாவாகக் கூட இருக்கலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM