(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேதினக்கூட்டத்தை கண்டியில் நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேதின கூட்டம் தொடர்பான சந்திப்பொன்று பெற்றோலிய வள அமைச்சில் இன்று நடைபெற்றது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பலம்மிக்க பயணத்தை மேற்கொண்டு செல்லும் நிலையில் எதிர்வரும் மேதினத்தை கண்டி பெட்டம விளையாட்டு மைதானத்தில் நடத்த கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளது. 

அதனடிப்படையில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் தொழில் சங்க அமைப்புகள் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் கட்சி என்றவகையில் பாரிய சிக்கல்களுக்கு மத்தியில் எமக்கு எதிராக விடப்படுகின்ற சவால்களுக்கு பதிலளிக்கும் வகையிலே மேதின கூட்டத்தை கண்டியில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். கட்சியை பிளவுபடுத்த இன்று பல சக்திகள் திட்டமிட்டு வருகின்றன. என்றாலும் அந்த சக்திகள் அனைத்தும் தற்போது பலமிழந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றன.

எனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்கள் மயமான கட்சி என்பதால் கட்சி மக்களின் ஆசிர்வாதத்துடன் பலமான நிலையில் பயணிக்கின்றது. அதனை குழப்புவதற்காக சதித்திட்டம் தீட்டுவோருக்கு கண்டியில் இடம்பெறும் எதிர்வரும் மேதின கூட்டத்திற்கு கட்சி ஆதரவாளர்கள் ஒன்றுபட்டு பதிலளிக்க வேண்டும் என்றார்.