சென்னையை வெளியேற்றி ப்ளே  ஓவ் சுற்றில் நுழைந்தது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு

19 May, 2024 | 05:16 AM
image

(நெவில் அன்தனி)

பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின்  68ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை 27 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் நான்காவதும் கடைசியுமான அணியாக ப்ளே ஓவ் சுற்றில் விளையாடும் தகுதியை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு பெற்றுக்கொண்டது.

விராத் கோஹ்லி, பவ் டு ப்ளெசிஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களும் அவர்களது அற்புதமான களத்தடுப்புகளும் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றின.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 219 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இப் போட்டி முடிவுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் தலா 14 புள்ளிகளைப் பெற்றிருந்த போதிலும் நிகர ஓட்ட வேக அடிப்படையில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ப்ளே ஒவ் வாய்ப்பை உறுதிசெய்துகொண்டது.

சென்னை சுப்பர் கிங்ஸின் வெற்றி இலக்கு 219 ஓட்டங்களாக இருந்தபோதிலும் ப்ளே ஒவ் வாய்ப்பை பெறுவதற்கு அவ்வணிக்கு 201 ஓட்டங்களே தேவைப்பட்டது.

ஆனால், சென்னை சுப்பர் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து 3ஆவது ஓவரில் டெரில் மிச்செல் (4) ஆட்டம் இழக்க மொத்த எண்ணிக்கை 19 ஓட்டங்களாக இருந்தது.

அஜின்கியா ரஹானேயும் ரச்சின் ரவிந்த்ராவும் 3ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர்.

நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடிய ரஹானே 33  ஓட்டங்களைப்  பெற்றார்.

அவரைத் தொடர்ந்து அதிரடி வீரர்களான ரச்சின் ரவிந்த்ராவும் ஷிவம் டுபேயும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (119 - 5 விக்.)

இல்லாத இரண்டாவது ஓட்டத்துக்கு ஆசைப்பட்ட டுபே, அநாவசியமாக ரச்சின் ரவிந்த்ராவை ரன் அவுட் ஆக்கினார்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ரச்சின் ரவீந்த்ரா 37 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார்.

டுபே 7 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். அவரைத் தொடர்ந்து பவ் டு ப்ளெசிஸ் எடுத்த கடினமான பிடியுடன் மிச்செல் சென்ட்னர் (3) ஆட்டம் இழந்தார். (129 - 6 விக்.)

எம்.எஸ். தோனி களம் புகுந்தபோது சென்னை சுப்பர் கிங்ஸ் ப்ளே ஓவ் தகுதியைப் பெறுவதற்கு 5 ஓவர்களில் 72 ஓட்டங்களைப் பெற வேண்டி இருந்தது.

ரவீந்த்ர ஜடேஜாவும் தோனியும் 7ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர்.

கடைசி ஓவரில் சென்னையின் ப்ளே ஒவ் வாய்ப்புக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

யாஷ் தயாள் வீசிய முதல் பந்தில் தோனி 6 ஓட்டங்களை விளாசினார். ஆனால் அடுத்த பந்தில் தோனியை யாஷ் தயாள் ஆட்டம் இழக்கச் செய்ததால் சென்னையின் ப்ளே ஒவ் வாய்ப்பு வெகு தொலைவுக்கு சென்று விட்டது.

அடுத்த நான்கு பந்துகளில் 7 ஓட்டங்களே பெறப்பட்டது.

தோனி 25 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரவிந்த்ர ஜடேஜா 43 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் யாஷ் தயாள் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களைக் குவித்தது.

முன்னாள் அணித் தலைவர் விராத் கோஹ்லி, அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தை நிதானத்துடன் ஆரம்பித்து பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 58 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

விராத் கோஹ்லி 29 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 47 ஓட்டங்களைப் பெற்றார்.

மொத்த எண்ணிக்கை 113 ஓட்டங்களாக இருந்தபோது பவ் டு ப்ளெசிஸ் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

சென்ட்னரின் பந்தை ரஜாத் பட்டிடார்   நேராக அடித்தபோது அப் பந்து சென்ட்னிரில் விரலில் உராய்ந்தவாறு பந்துவீச்சு எல்லை விக்கெட்டில் பட்டது. பந்து விக்கெட்டில் பட்டபோது பவ் டு ப்ளெசிஸின் துடுப்பு எல்லைக்குள் தரையில் பட்டிருக்கவில்லை. இதனால் அவர் ஆட்டம் இழந்தார்.

அவர் 39 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 54 ஓட்டங்களைக் குவித்தார்.

ரஜாத் பட்டிடார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 பந்துகளில் 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 41 ஓட்டங்களையும் கெமரன் க்றீன் 17 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 28 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவர்களை விட தினேஷ் கார்த்திக் 14 ஓட்டங்களையும் க்ளென் மெக்ஸ்வெல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நையப்புடைக்கப்பட்ட ஷர்துல் தாகூர் 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: பவ் டு ப்ளெசிஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு...

2024-06-23 18:52:47
news-image

பெட் கமின்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் ஹெட்-ட்ரிக்;...

2024-06-23 10:11:07
news-image

பங்களாதேஷை வீழ்த்தி உலகக் கிண்ண அரை...

2024-06-23 05:39:40
news-image

ரி20 உலகக் கிண்ண அரை இறுதிச்...

2024-06-22 19:31:12
news-image

விதிகளை நடைமுறைப்படுத்துவதில் ஐ.சி.சி. இரட்டை வேடம்...

2024-06-22 16:33:52
news-image

கண்டி ஒலிம்பிக் தின கொண்டாட்டத்தில் ஆயிரத்துக்கும்...

2024-06-22 16:16:27
news-image

சேஸ் பந்துவீச்சிலும் ஹோப் துடுப்பாட்டத்திலும் அசத்தல்;...

2024-06-22 11:11:48
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடிப்புச் செய்த இலங்கை...

2024-06-22 10:19:13
news-image

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் உதவித்...

2024-06-22 00:37:19
news-image

குவின்டன் டி கொக், டேவிட் மில்லரின்...

2024-06-22 00:06:34
news-image

இணை வரவேற்பு நாடுகள் மேற்கிந்தியத் தீவுகள்...

2024-06-21 21:45:08
news-image

அரை இறுதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியுடன்...

2024-06-21 14:03:31