இஸ்ரேலுக்கான உதவிகளை நிறுத்துமாறுகோரி அமெரிக்கத்தூதரகத்தை நோக்கி மக்கள் பேரணி; பாதுகாப்புப்படையினரால் இடைநடுவே தடுத்துநிறுத்தப்பட்டது

Published By: Vishnu

18 May, 2024 | 01:53 AM
image

(நா.தனுஜா)

காஸாவில் போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும், இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா உடன்நிறுத்தவேண்டும் எனக்கோரியும் வெள்ளிக்கிழமை (17) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணி, அமெரிக்கத்தூதரகத்தை சென்றடைவதற்கு முன்பதாக பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப்படையினரால் இடைநடுவே தடுத்துநிறுத்தப்பட்டது.

 காஸாவில் இடம்பெற்றுவரும் படுகொலைகள் மற்றும் அமெரிக்காவினால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டுவரும் இராணுவ உதவிகள் தொடர்பில் எதிர்ப்பை வெளிப்படுத்தியும், இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தலைமை வகிக்கும் போர் எதிர்ப்புக்கான உலகளாவிய கூட்டணியினால் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அண்மையில் பி.ப 2.30 மணியளவில் ஆரம்பமான இப்பேரணி, சேர்.மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தை ஊடாக அமெரிக்கத்தூதரகத்தை நோக்கிப் பயணித்தது.

 'துப்பாக்கிகளுக்கு ஈடாக ரோஜாக்கள்' எனும் மகுடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பேரணியில் போர் எதிர்ப்புக்கான உலகளாவிய கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌஸி, சர்வமதத்தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், தொழிற்சங்கத்தலைவர்கள், சகல இன, மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுமக்கள், சிறுவர்கள் என சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

 அவர்கள் 'பலஸ்தீன விடுதலை', 'யுத்தம் வேண்டாம்', 'போரை நிறுத்துங்கள்', 'இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்குவதை அமெரிக்கா நிறுத்தவேண்டும்' என்பன உள்ளடங்கலாக போர்நிறுத்தத்தையும், பலஸ்தீன விடுதலையையும் வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், பலஸ்தீன மற்றும் இலங்கைக்கொடிகளையும் ஏந்தியிருந்தனர். அதுமாத்திரமன்றி பலர் பலஸ்தீனத்தை அடையாளப்படுத்தும் சால்வையை அணிந்திருந்ததுடன், சிறுமிகள் காஸாவில் கொல்லப்பட்ட அப்பாவி சிறுவர்களைக் அடையாளப்படுத்தும் வகையில் சிவப்புநிறம் தோய்ந்த (இரத்தம்) துணியினால் சுற்றப்பட்ட பொம்மையையும், மேலும் பலர் ரோஜாப்பூக்களையும் கைகளில் ஏந்தியிருந்தார். 

அத்தோடு பேரணியில் கலந்துகொண்டவர்கள் 'எப்போது போர்நிறுத்தம்? - இப்போதே போர்நிறுத்தம்', 'அப்பாவிகளைக் கொல்வதை நிறுத்து', 'அமெரிக்காவே, இஸ்ரேலுக்கு உதவுவதை நிறுத்து', 'சிறுவர்களைக் கொல்லாதே', 'ஐக்கிய நாடுகளை சபையே, வேடிக்கை பார்க்காதே', 'முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய அவலம் பலஸ்தீனத்திலும் நிகழ இடமளிக்காதே' என்பன உள்ளடங்கலாக காஸா மீதான தாக்குதல்கள் தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையிலான கோஷங்களையும் எழுப்பினர்.

மழைக்கு மத்தியில் இவ்வாறு கோஷங்களை எழுப்பியவாறு சென்ற பேரணி சேர்.மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தையை அடைந்தபோது அங்கு பெரும் எண்ணிக்கையான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களைக் கடந்து பேரணியாகச்சென்ற மக்கள் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையை அடைந்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், விமானப்படையினர் உள்ளிட்ட சகலரும் நடுவீதியில் இறங்கி, பேரணி முன்நோக்கி நகராதவண்ணம் மறித்து நின்றனர். திடீரென அவர்களின் பின்னாலிருந்து வந்த பௌத்த பிக்குகள் இடைநடுவே மறிக்கப்பட்டுநின்ற பேரணியுடன் இணைந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து பேரணியின் முன்னரங்கில் நின்ற சர்வமதத்தலைவர்களுக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத்தொடர்ந்து 6 பேரை மாத்திரம் அமெரிக்கத்தூதரகத்துக்கு அழைத்துச்செல்வதற்கு பொலிஸார் உடன்பட்டனர். அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும், பௌத்த பிக்குகள் இருவரும், இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தலா ஒரு மதத்தலைவரும் என மொத்தமாக அறுவர் பொலிஸாரால் ஜீப் ஒன்றில் ஏற்றப்பட்டு அமெரிக்கத்தூதரகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அவ்வாறு அழைத்துச்செல்லப்பட்ட பிரதிநிதிகள் போர்நிறுத்தத்தையும், இஸ்ரேலுக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா உடன்நிறுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தி தூதரக அதிகாரிகளிடம் மகஜரொன்றைக் கையளித்தனர்.

அதேவேளை மக்கள் பேரணி ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் இடைநடுவே நிறுத்தப்பட்டதை அடுத்து, போராட்டக்காரர்கள் சற்றுநேரம் அங்கு தரித்துநின்றவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதன்விளைவாக அவ்வீதியில் சொற்ப நேரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட போதிலும், பொலிஸாரின் தலையீட்டின் மூலம் அந்நெரிசல் சீராக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடிலெய்டில் வணிக வளாகத்தில் பதற்றம் -...

2024-06-23 13:14:36
news-image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்; சென்னையில் பதுங்கி இருந்த...

2024-06-23 12:33:26
news-image

தாய்வானின் சுதந்திரத்துக்காக முயற்சி செய்பவர்களுக்கு மரண...

2024-06-23 12:03:55
news-image

காயமடைந்த பாலஸ்தீனியரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டிப்போட்டு...

2024-06-23 10:11:14
news-image

முதல் தாக்குதல் காரணமாக அச்சமடைந்து கதறியவர்களை...

2024-06-22 12:08:53
news-image

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 3...

2024-06-22 10:40:26
news-image

கடும் வெப்பத்தால் 4 பால்கன் நாடுகளில்...

2024-06-22 10:55:22
news-image

மதநிந்தனை குற்றச்சாட்டில் சுற்றுலாப்பயணி பொதுமக்களால் தாக்கப்பட்டு...

2024-06-21 22:09:05
news-image

வடகொரியாவிற்கு ரஸ்யாவின் ஆயுதங்கள் - அமெரிக்கா...

2024-06-21 15:24:57
news-image

ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்க முடியாது...

2024-06-21 13:18:28
news-image

இந்திய - இலங்கை சர்வதேச கடல்...

2024-06-21 14:09:55
news-image

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின்...

2024-06-21 10:40:21