(நெவில் அன்தனி)
மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 67ஆவது போட்டியில் மும்பை இண்டியன்ஸை 18 ஓட்டங்களால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது.
இம்முறை ப்ளே ஓவ் வாய்ப்பை ஏற்கனவே இழந்திருந்த இந்த இரண்டு அணிகளும் புகழ்ச்சிக்காக மாத்திரமே ஒன்றையொன்று எதிர்த்தாடிய நிலையில் அணித் தலைவர் கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகியோரின் அதிரடிகள், வீரர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகள் என்பன லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெற்றியுடன் விடைபெறவைத்தது.
அதேவேளை, 5 தடவைகள் சம்பியனான மும்பைக்கு கடைசிக் கட்டத்தில் நாமன் திர் வெளிப்படுத்திய அதிரடி உற்சாகத்தைக் கொடுத்த போதிலும் இறுதியில் இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இந்தப் போட்டியில் மும்பை இண்டியன்ஸுக்காக விளையாடிய இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷார மிகத் திறமையாக பந்துவீசி டெத் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக பந்துவீசத் தயாராக இருப்பதை நுவன் துஷார வெளிப்படுத்தினார்.
இது இவ்வாறிருக்க, மும்பை இண்டியன்ஸ், லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகளிலும் இடம்பெற்ற பல வீரர்களுக்கு இந்தப் போட்டி அவரவர் அணிகளிடம் இருந்து பிரியாவிடை பெறும் போட்டியாக அமைந்தது.
இந்த இரண்டு அணிகளிலும் 3 வருட சுழற்சி காலத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களது ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக இரவுப் பொழுது அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது.
கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 44 பந்துகளில் பகிர்ந்த 109 ஓட்டங்கள் லக்னோவின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது.
நிக்கலஸ் பூரண் 29 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களையும் கே.எல் ராகுல் 41 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களைவிட மாக்கஸ் ஸ்டொய்னிஸ் (28), அயுஷ் படோனி (22 ஆ.இ.), க்ருணல் பாண்டியா (12 ஆ.இ.) ஆகியோரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.
பந்துவீச்சில் நுவன் துஷார 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பியூஷ் சௌலா 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
215 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
டிவோல்ட் ப்ரெவிஸ், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 52 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், அதன் பின்னர் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்த மும்பை துடுப்பாட்ட வீரர்கள் நால்வர் 32 ஒட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க அவ்வணி நெருக்கடியை எதிர்கொண்டது.
ப்ரெவிஸ் 23 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார்.
அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இந்திய அணியில் இடம்பெறும் அவரது இந்த வருட ஐபிஎல் பெறுதிகள் திருப்திகரமாக இருக்கவில்லை.
மத்திய வரிசையில் நாமன் திர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி மும்பை இண்டியன்ஸுக்கு உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.
கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
நவீன் உல் ஹக்கின் முதல் பந்தை சிக்ஸாக பறக்கச் செய்தார் நாமன் திர். அடுத்த பந்தையும் அவர் சிக்ஸாக்க முயற்சித்தார். ஆனால், க்ருணல் பாண்டியா பவுண்டறி எல்லையில் உயரே தாவி ஒரு கையால் பந்தை பிடித்த வேகத்தில் அந்தரத்தில் இருந்தவாறே பந்தை உள்ளே எறிந்துவிட்டு வெளியே வீழ்ந்தார். இதன் மூலம் அவர் 5 ஓட்டங்களைக் தடுத்தார். அதுவே லக்னோவின் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது.
அடுத்த பந்தில் இஷான் கிஷான் (14) ஆட்டம் இழக்க மும்பையின் வெற்றிக்கனவு தவிடுபொடியானது.
மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நாமன் திர் 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 62 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ரவி பிஷோனி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: நிக்கலஸ் பூரண்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM