இங்க நான் தான் கிங்கு - விமர்சனம்

17 May, 2024 | 06:16 PM
image

தயாரிப்பு : கோபுரம் பிலிம்ஸ்

நடிகர்கள் : சந்தானம், பிரியாலயா, விவேக் பிரசன்னா, தம்பி ராமையா, பால சரவணன், மாறன், லொள்ளு சபா சுவாமிநாதன், கூல் சுரேஷ், முனிஸ்காந்த் மற்றும் பலர்.

இயக்கம் : ஆனந்த் நாராயணன்

மதிப்பீடு : 2.5 / 5

'வடக்குப்பட்டி ராமசாமி'  படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சந்தானம் நடிப்பில் தயாராகி வெளியாகியிருக்கும் 'இங்கு நான் தான் கிங்கு' என்ற படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பினை இந்தத் திரைப்படம் பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

மும்பையில் தீவிரவாத கும்பல் ஒன்று தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்த்துகிறது. இதனால் உஷாராகும்  உளவுத்துறையினர்.. சென்னை உள்ளிட்ட  பெருநகரங்கள் தான் தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு.. என தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் சென்னை நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்றுக்கொள் கொண்டுவரப்படுகிறது.

இந்த தருணத்தில் உறவுகள் இல்லாமல்  சென்னையில் தனியாக வசிக்கும் வெற்றிவேல் (சந்தானம்) திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார். பெண் வீட்டாரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் சொந்த வீடு, நல்ல வேலை.. என மணமகனுக்கு உரிய தகுதியை வளர்த்துக் கொள்கிறார். இதற்காக அவர் நண்பர் ஒருவரிடம் 25 லட்ச ரூபாய் கடன் வாங்கி, வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணப்பெண்ணிடமும் மற்றும் அவரது குடும்பத்தாரிடமும் 'கடனை அடைத்தால் திருமணம் செய்து கொள்கிறேன்' என வெற்றிவேல் நிபந்தனை விதிக்கிறார்.

 இதனால் அவரது திருமணம் தாமதமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ரத்தினபுரி ஜமீனின் (தம்பி ராமையா)  ஒரே பெண் வாரிசான தேன்மொழி( பிரியாலயா) யை கண்டதும் காதல் கொள்கிறார். ரத்தினபுரி ஜமீன் என்றதும் தன்னுடைய நிபந்தனை எளிதாக ஏற்றுக் கொள்ளப்படும்.. கடனிலிருந்து மீண்டு விடலாம்..  என நினைக்கும் சந்தானத்திற்கு.. தேன்மொழிவுடன் திருமணம் நடந்த பிறகு ரத்தினபுரி ஜமீன் பத்து. கோடி ரூபாய் கடனில் மூழ்கி இருக்கிறது என தெரிய வருகிறது. இதனால் மனைவி மீது ஆத்திரப்படும் வெற்றிவேல்.. தன் கடனை எப்படி அடைத்தார்? என்பதுதான் படத்தின் கதை.

வழக்கம்போல் கதை சுவாரசியமாக இருந்தாலும் சொல்லப்படும் விதத்தில்  நகைச்சுவையை கலந்து கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார் இயக்குநர். நடிகர் விவேக் பிரசன்னாவிற்கு இரட்டை வேடம் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். அவரும் அதை உணர்ந்து நன்றாக நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

சந்தானம் வழக்கம் போல் 'ஒன் லைன் பஞ்ச்' களை பேசி கலகலப்பூட்டுகிறார்.  பாடி பல்ராம் கதாபாத்திரமும், அதனை ஏற்று நடித்திருக்கும் முனிஸ்காந்தின் நடிப்பும் சிரிப்புக்கு உத்தரவாதம்.

நாயகி ப்ரியாலயா - முகத்தில் இளமையை தொலைத்திருந்தாலும் .. அழகாகவும், தேன் மொழி கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராகவும் தோன்றுகிறார். பாடல் காட்சியில் இவரின் நடனம் கவனத்தை ஈர்க்கிறது

'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் உச்சகட்ட காட்சியில் சிரிப்புக்கு உத்தரவாதம் அளித்த மறைந்த நடிகர் சேசு.. இந்தத் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் சிரிப்பு தான் மிஸ்ஸிங்.

சடலத்தை வைத்துக் கொண்டு செய்திருக்கும் காமெடி- ரசிகர்களிடம் வொர்க் அவுட் ஆகவில்லை.

இமானின் இசையில் 'மாயோனே..' மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

எளிதில் யூகிக்க இயலாத காட்சி அமைப்புகள் இருந்தாலும் ..அவை சிரிப்பை வரவழைத்தாலும்... இவை சில காட்சிகளுக்கு மட்டுமே வலிமை சேர்க்கின்றன. 

இங்க நான் தான் கிங்கு -  கொஞ்சம் யங்கு கொஞ்சம் போங்கு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்