தலைமை செயலகம்' இணையத் தொடர் - விமர்சனம்

17 May, 2024 | 06:07 PM
image

தயாரிப்பு : ராடன் மீடியா வொர்க்ஸ்  இந்தியா லிமிடெட்

நடிகர்கள் : கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், தர்ஷா குப்தா, வை. ஜி. மகேந்திரன், சந்தான பாரதி, கவிதா பாரதி மற்றும் பலர்.

இயக்கம் : வசந்த பாலன்

மதிப்பீடு :  3/5

டிஜிட்டல் தள ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேயிருக்கிறது. இவர்களுக்கு வாரந்தோறும் புதிய புதிய அசல் இணைய தொடர்களை முன்னணி டிஜிட்டல் தள நிறுவனங்கள் தயாரித்து‌ வழங்கி , தங்களின் மில்லியன் கணக்கிலான சந்தாதாரர்களை தக்க வைத்துக் கொண்டு வருகிறது.‌ அந்த வகையில் முன்னணி டிஜிட்டல் தளமான ஜீ5 தளத்தில் 'தலைமை செயலகம்' எனும் பெயரில் புதிய இணைய தொடரை மே 17 ஆம் திகதி முதல் ஒளிபரப்பபாகிறது. இந்த இணையத் தொடர் டிஜிட்டல் தள ரசிகர்களைக் கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

அரசியல் பின்னணியில் திரில்லர் வகையிலான இணைய தொடராகவும், எட்டு அத்தியாயங்களாகவும் உருவாகியிருக்கும் 'தலைமை செயலகம்' எனும் இணைய தொடரின் கதையை இயக்குநர் வசந்தபாலனும், எழுத்தாளர் ஜெயமோகனும் விவாதித்து எழுதி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 5:30 மணி நேரம் வரை நீடிக்கும் இந்த இணைய தொடர்... ரசிகர்களுக்கு நேர்த்தியான அரசியல் பின்னணியில் அமைந்த விறுவிறுப்பான இணைய தொடராக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் அடுத்த அத்தியாயத்திற்கான எதிர்பார்ப்பை இணைய தொடர் குழுவினர் ஏற்படுத்தி ரசிகர்களை ஆர்வமூட்டி இருக்கிறார்கள்.

அருணாச்சலம் (கிஷோர்) மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு வகிக்கிறார். அவருடைய மகள் ரம்யா நம்பீசன் மற்றும்  ரம்யா நம்பீசனின் கணவர் கவிதா பாரதி ஆகியோர் முதல்வர் பதவியை கைப்பற்ற சதி திட்டம் திட்டுகிறார்கள். கொற்றவை (ஸ்ரேயா ரெட்டி) ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் ஆதரவாளர்களையும் கொண்டிருக்கிறார். முதல்வரின் நம்பிக்கையும் பெற்றிருக்கிறார்.  இவரும் முதல்வர் பதவியை கைப்பற்ற திட்டமிடுகிறார். இந்த இரு பெண்மணிகளின் நோக்கத்தில் உள்ள வித்தியாசத்தை நேர்த்தியான திரைக்கதை நகர்த்தல் மூலம் விவரித்து பார்வையாளர்களை இயக்குநர் கட்டிப் போடுகிறார். மேலும் இந்த இரு பெண்மணிகளில் முதல்வர் நாற்காலியை யார் கைப்பற்றுகிறார்? என்பதும், அதற்காக இரு தரப்பினரும் எம்மாதிரியான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்? என்பதும், யாருடைய முயற்சி தோல்வி அடைகிறது..! யாருடைய முயற்சி வெற்றி பெறுகிறது..! என்பதுதான் இந்த இணைய தொடரின் பரபரப்பான உச்சகட்ட காட்சியாகும்.

முதல்வராக நடித்திருக்கும் கிஷோர் வெகு இயல்பாகவும் நம்பக தன்மை மிக்க நடிப்பை வழங்கியும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலைஞர்களின் நடிப்பு இயல்பானதாக இருப்பதால் தொடர் முழுவதும் பங்கு பற்றிருக்கும் கலைஞர்கள்.. ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

இந்த இணைய தொடரின் வலிமை- கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களில் இருக்கிறது என்றால் அது மிகையில்லை. அரசியல் சார்ந்த விடயங்களில் கதாபாத்திரங்களின் வசனங்கள் பளிச். இதற்காக வசனகர்த்தாவை தாராளமாக பாராட்டலாம். அதிலும் இறுதி இரண்டு அத்தியாயங்களில் பரபரப்பான சூழலில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களும், திரைக்கதையின் சுவாரசியமான முடிச்சுகள் அவிழ்க்கப்படும் தருணத்திலும் நேர்த்தியாக இருப்பதால் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது.

அரசியல் பற்றிய புரிதல் இல்லாத பார்வையாளர்களுக்கும் அது தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்கும் வகையிலும் தொடர் அமைந்திருப்பது ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறது.

கதைக்களம் சென்னை -கொல்கத்தா- ஜார்கண்ட் என பல நிலவியல் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தாலும் பார்வையாளர்களின் விறுவிறுப்பு குறையாமல் எட்டு அத்தியாயங்களையும் படைத்திருப்பதால் இயக்குநர்+ ஒளிப்பதிவாளர்+ இசையமைப்பாளர்+ கலை இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினர்களை பாராட்டலாம்.

வன்முறையை கையாண்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீவிரவாதம், பயங்கரவாதம், நக்சல் வாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக இந்திய அரசு ஒரு குழுவை அமைக்கிறது. அந்த குழுவில் இடம் பெற்றிருக்கும் வட இந்திய மற்றும் தென்னிந்திய அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்களும், எண்ணங்களும் வித்தியாசமாக இருக்கின்றன. இந்தக் குழுவை விரும்பாத ஒரு கும்பல்.. இந்த குழுவில் இடம் பெறும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் கொலை செய்கிறது. இந்தக் குழுவில் தமிழக முதல்வராக இருக்கும் அருணாச்சலமும் ஒருவர். அவரை அந்த கும்பல் சதி செய்து தீர்த்து கட்டுகிறது. 

இதன் பின்னணியும் திரைக்கதையில் சுவராசியமாக பிணைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களுக்கு தொய்வு என்பது இல்லாமல் எட்டு அத்தியாயங்களையும் தொடர்ச்சியாக பார்வையிட  தூண்டுகிறது. மேலும் மக்களின் பிரச்சனையை அரசு கவனித்து தீர்வை முன் வைக்க வேண்டும் என்றால்.. அரசு அதிகாரத்தை யார் கைப்பற்ற வேண்டும் என்ற விடயத்தையும் இயக்குநர் சுட்டிக்காட்டுயிருப்பதால் தேர்தல் அரசியல் மீது நம்பிக்கை கொண்ட ஜனநாயகவாசிகளும் இந்த தொடரை ரசிப்பர்.

ஒரு மாநிலத்தின் மக்கள் பொது அமைதியுடன் வாழ வேண்டும் என்றால் அதற்காக காவல்துறையின் வெளிப்படையான பணி, மறைமுகப் பணி மற்றும் புலன்விசாரணை.. அரசியல்வாதிகளின் அணுகுமுறை.. மக்களின் எதிர்பார்ப்பு, மக்களை அரசியல்வாதிகளும், காவல்துறையினரும் கையாளும் உத்தி.. என பல இடங்களில் இயக்குநர் வசந்தபாலன் அவரது திறமையை  வசனங்கள் ஊடாகவும், காட்சி அமைப்பின் ஊடாகவும் வெளிப்படுத்தி இணையத் தொடரை ரசிக்க வைக்கிறார். மேலும் இந்த இணைய தொடர் புனைவு கதை என்றாலும் இந்திய மாநிலங்களில் உள்ள சில அரசியல் தலைவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற நிஜ சம்பவங்களை கோடிட்டு காட்டியிருப்பதால் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.

தலைமை செயலகம் -  பாமர மக்களின் அரசியல் பயிலகம் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்