நடிகர் வெற்றி நடிக்கும் 'பகலறியான்' படத்தில் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

17 May, 2024 | 06:01 PM
image

'எட்டு தோட்டாக்கள்' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் வெற்றி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பகலறியான்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர். வி. உதயகுமார், இயக்குநர் பேரரசு மற்றும் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா ஆகியோர் வெளியிட, படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் வெற்றி பேசுகையில், 

'' கதாசிரியர் கிஷோர் 'பகலறியான்' படத்தின் கதையை எம்மிடம் விவரித்தார். ஒரே இரவில் நடைபெறும் கதை. கதையும் எம்முடைய கதாபாத்திரமும் பிடித்துப் போனதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் புதியவர்கள். படப்பிடிப்பு தளத்தில் முதல் நாள் சற்று பதட்டமாக இருந்தது.

 ஆனால் ஒளிப்பதிவாளர் இரவு நேரத்தில் காரில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை நேரில் பார்த்து வியந்தேன்.‌ அதன் பிறகு இந்த குழுவினர் மீது முழு நம்பிக்கையும் ஏற்பட்டது. இந்த திரைப்படம் கிரைம் திரில்லர் வகையிலான படம் என்றாலும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். கதாநாயகியாக நடித்திருக்கும் அக்ஷயா  நன்றாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பிற்கு இடையே தடைகள் வந்தாலும் தயாரிப்பாளரும், நடிகரும், இயக்குநருமான முருகன் அனைத்தையும் எதிர் கொண்டு படத்தை நிறைவு செய்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை வெளியிடும் விநியோகஸ்தருக்கும் எம்முடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

குற்றவியல் பின்னணியிலான கதைக்களத்தில் தயாராகி இருக்கும் 'பகலறியான்' திரைப்படத்தில் வெற்றி அக்ஷயா, முருகன், ராம் பரதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ அபிலாஷ் பி எம் வை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக் சரோ  இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை ரிஷிகேஷ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லதா முருகன் தயாரித்திருக்கிறார்.

படத்தின் முன்னோட்டத்தில் இரவு நேர காட்சிகள் அதிகம் இருப்பதும்.. போதை வஸ்துகள் கடத்தல் தொடர்பான காட்சிகளும்.. குற்றவியல் பின்னணி கொண்ட கதையின் நாயகனை கதாநாயகி காதலிக்கும் காட்சிகளும் இடம் பிடித்திருப்பதால்.. 'பகலறியான்' படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்