(நெவில் அன்தனி)
குவாட்டி பர்சபரா கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (15) இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 65ஆவது போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸை எதிர்த்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
கடைநிலையில் இருந்த பஞ்சாப் கிங்ஸுக்கு இந்த வெற்றி ஆறுதல் அளித்ததுடன் அணிகள் நிலையில் மும்பை இண்டியன்ஸை பின்தள்ளி 9ஆம் இடத்திற்கு முன்னேறியது.
இப் போட்டிக்கு முன்பதாக 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த போதிலும் ப்ளே ஒவ் வாய்ப்பு உறுதிசெய்துகொண்டிருந்த ராஜஸ்தான் றோயல்ஸ் நான்காவது தொடர்ச்சியான தோல்வியால் பெரும் ஏமாற்றத்திற்குள்ளானது.
அத்துடன் அணிகள் நிலையில் இரண்டாம் இடத்தை ராஜஸ்தான் தக்கவைத்துக்கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இரண்டு அணியினரும் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டபோதிலும் வெற்றி இலக்கு குறைவாக இருந்ததால் பஞ்சாப் கிங்ஸுக்கு சாதகமான முடிவு கிடைத்தது.
பஞ்சாப் கிங்ஸ் சார்பாக தனது முதலாவது போட்டியில் விளையாடிய நேதன் எல்லிஸ் மிகத் துல்லியமாக பந்துவீசினார். அத்துடன் சாம் கரன், ஹர்ஷால் பட்டேல், ராகுல் சஹார் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி ராஜஸ்தான் றோயல்ஸை சுமாரான மொத்த எண்ணிக்கைக்கு கட்டுப்படுத்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது அணித் தலைவர் சாம் கரன் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி அடைவதற்கு பெரிதும் உதவியது.
145 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 18.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ராஜஸ்தானைப் போன்றே பஞ்சாபின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை.
முதலாவது ஓவரில் ப்ரப்சிம்ரன் சிங் (6) ஆட்டம் இழந்தார்.
ரைலி ரூசோவும் ஜொனி பெயாஸ்டோவும் அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர்.
எனினும் ரைலி ருசோவ் (14), ஷஷாங் சிங் (0) ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் ஆவேஷ் கான் ஆட்டம் இழக்கச் செய்து ராஜஸ்தானுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.
மொத்த எண்ணிக்கை 48 ஓட்டங்களாக இருந்தபோது ஜொனி பெயாஸ்டோவ் 14 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அணித் தலைவர் சாம் கரனும் ஜிட்டேஷ் ஷர்மாவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை சிறுக சிறுக உயர்த்திய வண்ணம் இருந்தனர்.
அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஜிட்டேஷ் ஷர்மா 22 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
எனினும் சாம் கரன் தொடர்ந்து சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 41 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 63 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய இம்ப்பெக்ட் வீரர் அஷுட்டோஷ் ஷர்மா 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ஆவேஷ் கான் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் யுஸ்வேந்த்ர சஹால் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
குவாட்டியில் இந்த வருட ஐபிஎல் இல் முதல் தடவையாக விளையாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் துடுப்பெடுத்தாடுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜய்ஸ்வால் முதல் ஓவரிலேயே 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஐபிஎல் இல் அறிமுகமான டொம் கொஹ்லர் கெட்மோர், அணித் தலைவர் சஞ்சு செம்சன் ஆகிய இருவரும் தலா 18 ஓட்டங்களைப் பெற்றதுடன் 2ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்த பின்னர் ஜோடி சேர்ந்த ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவரும் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில அஷ்வின் 28 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
அதன் பின்னர் த்ருவ் ஜுரெல் (0), ரோவ்மன் பவன் (4), டொனவன் பெரெய்ரா (7) ஆகிய மூவரும் எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெளியேறினர்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ரியான் பராக் கடைசி ஓவரில் 48 ஓட்டங்களுடனும் ட்ரென்ட் போல்ட் கடைசிப் பந்தில் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
பந்துவீச்சில் சாம் கரன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ராகுல் சஹார் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹர்ஷால் பட்டேல் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: சாம் கரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM