தமிழர்களுக்கு இந்த நாட்டில் நீதி கிட்டப்போவதில்லை என்பதற்கு சம்பூர் சம்பவம் முன் உதாரணம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு

Published By: Vishnu

15 May, 2024 | 08:00 PM
image

தமிழர்களுக்கு இந்த நாட்டில் நீதி கிட்டப் போவதில்லை என்பதற்கு சம்பூர் சம்பவமே மிக அண்மைய நல்ல முன் உதாரணமாகும் என்று தெரிவித்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு சர்வதேசம் அதனை உணர்ந்து போர்க் குற்றங்களுக்கான நீதியையும் அரசியல் நீதியையும் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கையின் பேரினவாத அரச படைகளினதும் பொலிஸாரினதும் புலனாய்வு துறையினரதும் பல்வேறு அடக்குமுறை நெருக்கதல்களுக்கு மத்தியில் போர் வலி சுமந்த மக்களாக போரில் கொல்லப்பட்ட, இறந்த எம் உறவுகளுக்காக கடந்த 14 வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வேதனையோடும் நீதி எதிர்ப்பார்ப்போடும் செய்கின்றோம்.

போர்க்காலத்தில் பட்டினிச்சாவை தவிர்ப்பதற்காக செல்லடினாலும், குண்டு தாக்குதலிலும், ஆங்காங்கே இரத்த வெள்ளத்தில் சதை சதைப்பிண்டங்களாக உறவுகள் வீழ்ந்து கிடைக்க கஞ்சிக்கு வரிசையில் நின்றதை மறக்க முடியாதவர்களாக ஒவ்வொரு வருடமும் உப்புக்கஞ்சி பகிர்ந்து நினைவுகளை மீட்கின்றோம்.

அவ்வாறே இவ்வருட நினைவேந்தலில் ஆரம்ப நாளில் கஞ்சி பகிர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சம்பூரில் மூன்று பெண்கள் உட்பட ஆண் ஒருவரையும் கைது செய்து ஐ.சி.சி.பி.ஆர் இன் கீழ் 14 நாட்கள் தடுப்பு காவலில் சம்பூர் பொலிஸார் வைத்துள்ளனர்.

இது போரின் வலி சுமந்து நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து தமிழர்களையும் மௌனிக்க செய்து தண்டிக்கும் இனவாத வன்முறையாகும்.

இதனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதோடு குற்றம் சாட்டப்பட்டவர்களை அனைத்து குற்றச்சாட்டுகளில் விடுவித்து உடனடியாக விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான சம்பவங்கள் இனியும் நடக்க இடம் கொடுக்கக் கூடாது எனவும் கூறுகின்றோம்.

கஞ்சி பகிர்தல் எந்த வகையில் இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும்? என்று கேட்பதோடு; ஒன்று கூடுதல் மற்றும் கஞ்சி பகிர்ந்தல் மூலம் தொற்றுநோய் பரவுமென யாரால்? அறிவித்தல் விடுக்கப்பட்டது எனவும் சம்பூர் பொலிஸாரிடம் கேட்கின்றோம்.

அங்கு பொலிஸார் பெற்றுக் கொண்ட தடை உத்தரவின் அடிப்படை நோக்கம் இனவாதமாகும். இதுவே இனமுறைகளைத் தோற்றுவிக்கும் செயற்பாடாகும். இத்தகைய குற்றத்தை செய்த சம்பூர் பொலிஸார் எந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர்.

யுத்த குற்றங்கள் இழைக்கப்பட்ட நாட்டில் இனப்படுகொலை துன்பியல் நினைவுகளோடு இனஅழிப்பிற்கு தொடர்ந்தும் முகம் கொடுத்தவர்களாக நினைவேந்தலைச் செய்யும் நாம் நீதிக்கான ஆயுதமாகக் கஞ்சியையும், கஞ்சி சிரட்டையுமே தூக்கி நிற்கின்றோம். இதனை இனவாத நோக்கத்தில் சட்டத்தின் துணைகொண்டு தட்டிப்பறித்து புத்தரின் போதனை மிதித்து அவரின் பிச்சை பாத்திரத்தையே தட்டிப்பறிப்தற்கு சமமாகும் என இவ் வைகாசி மாதத்தில் வலியுறுத்தி கூற விரும்புகின்றோம்.

இவ்வருடம் எதிர்வரும் கிழமையில் பௌத்தர்களின் வெசாக் பண்டிகையை கொண்டாடவிருக்கின்றனர். அப்போது தெற்கில் மட்டுமல்ல வடகிழக்கிலும் பௌத்தர்களும், சிங்கள பௌத்த இராணுவத்தினரும் வீதிகளில் தான சாலைகளை அமைத்து வீதியில் பயணிக்கும் மக்களை நிறுத்தி குளிர்பானங்களையும், உணவுகளையும் பகிர்வர்.

தொற்றுநோய் பரவுமென அப்போதும் சம்பூர் பொலிஸார் இதனை செய்யவிடாது தடுப்பார்களா? யாராவது நீதிமன்ற தடை உத்தரவைப் பெறுவார்களா? இல்லையே. தமிழர் தாயகத்தில் இராணுவத்தினரின் தர்ம சாலைகளையும், பௌத்த பாராயணம் ஒலிபெருக்கி சத்தங்களையும் இனமுரண்பாட்டுக்கு உரிய ஒன்றாகவே நாம் பார்க்கின்ற போதும் அதற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாடவில்லை. இன, மத நல்லிணக்கமென நாமும் அமைதி கொள்ளும்போது எம்மை சீண்டிவிடும் செயற்பாட்டில் எவரும் ஈடுபடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு.

தமிழர்களுக்கு இந்த நாட்டில் நீதி கிட்டப் போவதில்லை என்பதற்கு சம்பூர் சம்பவமே மிக அண்மைய நல்ல முன் உதாரணமாகும். இதனை சர்வதேசம் உணர்ந்து தமிழர்களுக்குக் கூறும் போர்க் குற்றங்களுக்கான நீதியையும் அரசியல் நீதியையும் பெற்றுக் கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் எனவும் முள்ளிவாய்க்கால் 15 ஆம் நினைவு ஆண்டில் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு சீரற்ற வானிலை...

2024-05-19 20:42:04
news-image

பாராளுமன்றத்தை கலைப்பது ஜனாதிபதிக்கு சாதகமாக அமையாது...

2024-05-19 19:19:35
news-image

கொழும்பு துறைமுக நகரில் தீ விபத்து!

2024-05-19 19:01:01
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் விவாதத்துக்கான திகதி...

2024-05-19 18:11:09
news-image

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் இந்தோனேசிய எரிசக்தி...

2024-05-19 17:55:20
news-image

மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில்...

2024-05-19 17:43:37
news-image

ஈரான் தூதுவரை தாக்கிய கொழும்பு வர்த்தகருக்கு...

2024-05-19 17:27:58
news-image

இந்தோனேசிய அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 

2024-05-19 16:57:11
news-image

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைத்துச் சென்ற...

2024-05-19 16:50:39
news-image

மலையகத்திலும் வாழும் கலை அமைப்பின் செயற்பாட்டை...

2024-05-19 16:03:00
news-image

கடும் மழையால் புத்தளம் பிரதேச தாழ்நிலப்...

2024-05-19 16:41:02
news-image

மன்னார் - பேசாலை காட்டுப் பகுதியில்...

2024-05-19 17:24:26