மடவல, நலந்தன்ன மலையில் சுடலை மாடன் ஆட்சி!

Published By: Nanthini

16 May, 2024 | 03:15 PM
image

"தொலைத்த இடத்தில் தேடுவோம்" - ‍பேராசிரியர் சி. மெளனகுரு (02)

(மா. உஷாநந்தினி)

சுடலை மாடன்.... இது "பிணம் தின்னும் சாமி" என்றும் "சாராயம் குடிக்கும் ஆக்ரோஷமான காவல் தெய்வம்" என்றும் கிராமத்தவர்கள், வயதானவர்கள் சொல்ல அங்கொன்றும் இங்கொன்றுமாக கதை கேட்ட அனுபவம் நம்மில் பலருக்குண்டு. சுடலை மாடனுக்கு  மடை பலி செலுத்தி வழிபடும் முறை பற்றியும் நமக்குத் தெரியும்.  ஆனால், சுடலை மாடன் வில்லுப்பாட்டு பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?! 

கண்டியில் உள்ள கந்த கெட்டிய தேயிலைத் தோட்ட மலையில் உள்ள காகல மடவல டிவிஷன், நலந்தன்ன மலைப் பகுதியில்தான் இந்த சுடலை மாடன் வில்லுப்பாட்டு பக்தியுணர்வோடு பாடப்படுகிறது. 

விடிய விடிய  ஊர் மக்கள் சூழ, மேடையில் வில்லிசைக் குழுவினர் வில்லுப்பாட்டு பாடிக்கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் ஒன்றிரண்டு பேருக்கு சுடலை மாடன், காளி போன்ற தெய்வங்கள் உருவேறி ஆடும் காட்சியை செவி வழியே கேட்கும்போதே வியப்பை தருகிறதென்றால், பேராசிரியர் மெளனகுரு தான் நேரில் கண்டு அதிசயித்து, அந்த காட்சிகளை வர்ணணையாக விபரிக்கும்போது இன்னும் பல அனுபவங்களை நம்மால் பெற முடியும். 

சுடலை மாடனை பயபக்தியோடு வணங்குவது மட்டுமல்ல, சுடலை மாடன் கதை பாட இசைக்கப்படும் வில்லே கூட அவ்வூர் மக்களால் வணங்கப்படுவதாக கூறும் பேராசிரியர் சி. மெளனகுருவின் நிஜக்கதையோடு, சுடலை மாடன் ஆட்சி செய்யும் நலந்தன்ன மலைக்களத்துக்கே நாமும் செல்வோம்.  

நலந்தன்ன மலையில் மாடசாமி கோயில்

"கந்த கெட்டிய கண்டியிலுள்ள ஒரு தேயிலைத் தோட்ட மலையாகும். 

 150 வருடங்களுக்கு முன்னர் அங்கு  கொண்டுவரப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் தம்மோடு தம் பண்பாட்டையும் கொண்டு வந்தனர். கால  ஓட்டங்கள்  அவற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்தினும் இன்று வரை தொடர்ச்சியாகச் சிலவற்றைப் பேணியும் வருகின்றனர். அதனுள் ஒன்றுதான் சுடலை மாடன் வழிபாடு.

கந்தகெட்டிய மஹா வித்தியாலய அதிபர் ராஜகோபால் அர்ப்பணிப்புமிக்க அதிபர். மலையக அடிமட்ட மக்கள் மீதும்,அவர்களின் கலைகள் மீதும் அனுதாபமும் ஆர்வமும் கொண்டவர் அவர்.  தனது பாடசாலை நாடக விழாவுக்கு விருந்தினராக என்னை அழைத்திருந்தார்.

'சேர், சுடலை மாடன் வில்லுப்பாட்டு நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்' என்றார். ஏற்கனவே 'காமன் கூத்து,  அருச்சுனன் தபசு', 'பொன்னர் சங்கர்' ஆகிய  மலையக  நிகழ்த்துகைக்  கலைகளைப்  படித்தும்  பார்த்தும்  இருந்த  நானும் அதனைப் பார்க்க விரும்பினேன்.

சுடலை மாடன் வில்லுப்பாட்டு பார்க்க அன்று பின்னேரம் என்னை அதிபர் ராஜகோபால் வேனில் காகல மடவல டிவிசன் நலந்தன்ன எனும்  மலைக்கு அழைத்துச் சென்றார்.

பின்னேர இள வெயில், எம்மைச் சூழ மலைகள்,   வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதையூடாகச் சென்ற வேன் ஓரிடத்தில் நின்றது. நின்ற இடத்திலிருந்து மேல் நோக்கிச் சென்ற படிக்கட்டுகளூடே ஏறிச் சென்று மிகச் சிறிய ஒரு கோவிலை அடைந்தோம். அக்கோவில் ஒரு பெரிய அகன்ற வாகை மரத்தின் கீழ் அமைந்திருந்தது. அது மிகச் சிறியதொரு கிராமியக் கோவில். 

அக்கிராம சனங்கள் எங்களை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். கோவில் விக்கிரகங்களாக கன்னங்கரேல் என்ற இரு உருவங்கள் இருந்தன.

அது  ஒரு மாடசாமி கோவில். 

கோவிலின் முன் வில்லுப்பாட்டுக்குரிய ஒரு பெரிய வில் இருந்தது. மக்கள் எங்களுக்கு 'வணக்கம்' சொன்னார்கள். வில்லுப்பாட்டு பாடப்போகும் பாடகர்களும் வாத்தியக்காரர்களும் முதலில் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். திருநீறு, சந்தனம் வழங்கப்பட்டது.

பிணம் தின்னும் சுடலை மாடன் 

'சுடலை மாடன் பிணம் தின்னும் ஒரு தெய்வம். சுடலைக்குச் சென்று புதிய பிணங்களைத் தோண்டியெடுத்து அப்பிணங்களின் உடலைப் பிளந்து பிணத்தின் குடலை மாலையாகப் போட்ட படியும் பிணத்தின் உள்ளுறுப்புகளைச் சாப்பிட்டுக்கொண்டும்  வந்து தன்னை அது மக்கள் மத்தியில் நிரூபித்துக்கொள்ளும்' என ஒருத்தர் கூறினார்.

'21 வகையான மாடன்கள் இருக்கிறார்கள்' என்று சுடலை மாடன் பற்றி எனக்கு விளக்கம் அளித்தார். என்னருகில் இருந்த இன்னொரு  பெரியவர்.

 பல மாடன்கள்  உண்டு. சப்பாணி மாடன், நொண்டி மாடன், சுடலை மாடன்.... என மாடன் வகையினை ஒரு பட்டியல் தந்தார், இன்னொரு  பெரியவர். 

'முன்னாளில் எங்களின் இந்த ஊரில் மாடன் திருவிழா ஆரம்பமாவதற்கு ஒரு வாரத்துக்கு முன் ஒரு பிணம் கட்டாயம்  விழும். அப்புதுப் பிணத்தின் குடலைத் தான் மாலையாகப் போட்டுக்கொண்டும் பிணத்தின் உள்ளுறுப்புக்களைச் சாப்பிட்டுக்கொண்டும் மாடசாமி இக்கோவிலுக்கு வருவார்' என்றார் இன்னொருவர். 

'மாடனை இந்த மடச் சனங்கள் அன்று கேள்வி கேட்கப்போய் இந்த ஊருக்கு ஒரு பெரும் கொள்ளை வந்தது. நிறைய சனம் செத்தது. பின் தமது தவறை உணர்ந்து மக்கள் மாடசாமியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள அப்பெரும் கொள்ளை நோய் நீங்கியது' என்று இன்னொருவர் கூறினார். 

'பின்னாளில், மக்கள் பக்தியுடன் மாடசாமியிடம்,  பிணத்தின் குடலை மாலையாக போட்டுக்கொண்டு வருவதைக் காண பெண்களும் பிள்ளைகளும் பயப்படுகிறார்கள். எனவே பிணத்தின் குடலோடு வர வேண்டாம் என வேண்ட, பிணத்துக்குப் பதிலாக மாடசாமி கோழியின் குடலை போட்டுக்கொண்டு வருவதும் கோழியின் உள்ளுறுப்புகளைச் சாப்பிட்டுக்கொண்டு வருவதும்  வழக்கமாயிற்று' என்றார் இன்னொருவர்.

மாடசாமி பற்றி மக்கள் நம்பிக்கையின் புற உரு இவ்வாறு எனக்கு அவர்களால் தரப்பட்டது.

பக்தியோடு பூஜிக்கப்படும் வில்

அந்த சாமி பற்றி எனக்குள்ளும் ஒரு படிமம் உருவாகியது. மாடசாமி வில்லிசைக் குழு பற்றியும் என்னைப் பற்றியும் ஒரு அறிமுக உரையினை ராஜகோபாலும் அங்கிருந்த ஒருவரும் நிகழ்த்தினர்.

வில்லுக்கு பக்தியோடு தூப தீபம் காட்டப்பட்டு, அதுவும் ஒரு தெய்வ நிலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.  

வில்லுப்பாட்டில் பங்குகொள்ளும் அனைவருக்கும் வில்லுப்பாட்டு குழுத் தலைவர் திருநீற்றை நெற்றியில் இட்டார். பக்தியோடு அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டனர். நம்பிக்கையும் பக்தியுமே அங்கு மேலோங்கி நின்றது. மதம் என்பது நம்பிக்கைதானே.  

வில்லிசைக் குழுவினர் பெரிய வில்லைச் சுற்றி அமர்ந்தனர். உடுக்கடிக் கலைஞர்கள் இருவர், கடம் வாசிப்பது ஒருவர், தபேலா வாசிக்க ஒருவர், பிரதான பாட்டுக்காரர், அவருடன் பாட, பக்கப்பாட்டுக்காரர்கள் சிலர் என ஒரு பெரும் குழாம்...

வில்லுப்பாட்டு ஆரம்பம் 

சுடலை மாடன் கதை வில்லுப்பாட்டு ஆரம்பமானது. பிரதான கதைசொல்லியான மருதை என்பவரின் குரல் ஓங்கி ஒலித்தது.  

பாக்கியநாதன் என்பவர் தன் முழு உடலையும் அசைத்து அசைத்து ஆடியபடி உடுக்கு அடித்தார். 14 பேர் வில்லைச் சூழ அமர்ந்திருந்து பக்கப்பாட்டுப் பாடினர். 

பிரதான பாடகர் பாட  இவர்கள் 'ஆம் ஐயா, ஆம் ஐயா...' என்று தொடர் குரல் எழுப்பினர். அனைவரின் இணைவும் குரல் ஓசையும் உடுக்கு ஒலியும் பாடல் மெட்டும் ஒருவித லய உணர்வைத் தந்து கொண்டிருந்தன. அந்த லயத்துக்குள் நாம் அனைவரும் ஈர்க்கப்பட்டோம்.

எமது உடல்களும் தாள லயத்துக்கு அசைந்தன. திடீரென ஒருவருக்கு பெரும் உரு வந்துவிட்டது.

மாடன் வந்துவிட்டான்! 

இரண்டு கைகளையும் தரையில் அடித்து புரண்டு தவழ்ந்து ஆடியபடி, அவர் கோவிலுக்குள் சென்று, மாடசாமி உடை அணிந்து வெளியில் வைத்திருந்த, மணி கட்டிய பெரும் தண்டமொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு,  நீண்ட சாட்டைக் கயிறொன்றைத் தனது தோளை சுற்றிப் போட்டுக்கொண்டு தாளத்துக்கு ஏற்ப காலடி வைத்து ஆடியபடி கோவில் வீதியில் கம்பீர நடை பயில ஆரம்பித்தார்.

'மாடன் வந்துவிட்டான்' என்றார்கள்.  

மாடன் என அவர் நிரூபிக்க வேண்டுமே. காளி அம்மன் பந்தலில் ஒரு பெண் காளியம்மாள் உருவேறி ஆடிக்கொண்டிருந்தாள்.

அவளிடம் சென்று திரும்பிய மாடன், சுவாமி சிலைக்கு அருகில் வைத்திருந்த சிறிய சாராய போத்தலை  எடுத்தார், குடித்தார், மற்றவர்க்கும் கொடுத்தார். குடிக்கத் தயங்கியவர்களின் தலைகளின் மீது சாராயத்தை தண்ணீர் போலத் தெளித்தார்.

அருகில் கட்டியிருந்த கோழியை எடுத்தார். அதன் சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தார். பின் கோழியை இரண்டாகக் கிழித்தார்.

கீழே இரண்டு கால்களையும் அகலப் பரப்பி உட்கார்ந்து, கால்களுக்கு நடுவில் கோழியை வைத்து, அதன் குடலை பிய்த்தெடுத்து மாலையாகக் கழுத்தில் போட்டுக்கொண்டார்.

உட்கார்ந்தபடியே கோழியின் ஈரலை பிய்த்து வெளியே எடுத்தார். இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. இரத்தம் வழிய, அதைச் சாப்பிட ஆரம்பித்தார். சனங்கள் பார்த்துக்கொண்டே இருந்தனர்.

வில்லுப்பாட்டுத் தொடர்ந்துகொண்டே இருந்தது. குழந்தைகளும் பெண்களும் இச்செயல்களைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். நானும் பார்வையாளர்களுள் ஒருவனாக.

இளம் பெண்ணை நெருங்கிய சுடலை மாடன் 

கோழியின் குடலை மாலையாகப் போட்டுக்கொண்டு அதன் ஈரலை சாப்பிட்டுத் திருப்தி கொண்ட சுடலை மாடன் பரவச நிலையில் நின்று மீண்டும் மீண்டும் எழுந்து தண்டத்தைத் தாங்கியபடி பக்தர்கள் மத்தியில் தாளத்துக்கு நடந்து உலாவர ஆரம்பித்தார்.

நடந்து சென்ற சுடலை மாடனார் ஓர் இளம் பெண் முன் நின்று ஏதேதோ கூறினார். தன் அருகில் வரும்படி அழைத்தார்.

அந்தப் பெண்ணோ நிர்த்தாச்சணியமாக அவ்வழைப்பை மறுத்துவிட்டார். மாடன் அதனால் சற்றுக் குழம்பிப்போய் கோபமுற்றவர் போல விரலைக் காட்டி அப்பெண்ணை ஏதோ எச்சரித்தார்.

'அந்தப் பெண்ணின் மீது சுடலை மாடசாமி கோபம் கொண்டுவிட்டார். இன்று அந்தப் பெண்ணுக்கு ஏதாவது நடக்கும்' என்றார் என்னருகில் இருந்த ஒருவர்.

பின்னர் சுடலை மாடன் பெரிய சாட்டையால் 'மளார் மளார்' என தன்னைத்தானே அடித்துக்கொண்டார். பின்னர் மெல்ல மெல்ல உருத் தணிய சாதாரண மனித நிலைக்கு வந்துவிட்டார்.

அதன் பிறகு, அந்த மனிதரை பார்த்தால் இந்தப் பூனையா அந்தப் பாலைக் குடித்தது என்பது போல மிக மிகச் சாதுவாக இருந்தார். திடீரென அங்கு நின்ற இன்னொருவருக்கு உரு வந்துவிட்டது.

இன்னொரு மாடன் வந்தான்! 

அவர் முன்னை மாடசாமிக்கு உருக்கொண்டு ஆடியவரை விட இளைஞராகவும் தோற்றத்திலும் உடையிலும் சற்று நவீன உலகுக்குள் வாழ்பவராகவும் இருந்தார். (பின்னால் விசாரித்தபோது கொழும்பில் ஒரு கம்பனியில் அவர் வேலை செய்பவரென அறிந்தேன்)

இப்புதிய மாடன் இப்போது சுருட்டு ஒன்றைப் புகைத்தபடி வில்லுப்பாட்டுத் தாளத்துக்கு உருக்கொண்டு ஆடினார். 

பெரிய சாட்டையைத் தன் தோளில் போட்டுக்கொண்டார்.

பிறகு, அடிக்கடி சாட்டையால் தன்னை மாறி மாறி அடித்தும் கொண்டார். சாராய போத்தலை எடுத்து, தானும் குடித்தார். மற்றவர்க்கும் கொடுத்தார். 

வில்லுப்பாட்டு நிற்கவேயில்லை. நடந்த நிகழ்ச்சிகள், புதிய பார்வையாளர்களாகிய எங்களுக்குத்தான் திகைப்பும் வியப்பும் தந்ததேயொழிய அங்கிருந்த மக்களுக்கு அது பழகிப்போன ஒரு நிகழ்வாகவே இருந்தது. அவர்கள் சர்வ சாதாரணமாக அந்த காட்சிகளை பார்த்தபடி இருந்தனர்.

மாடசாமியின் ஆட்டமும் முடிந்தது. வில்லுப்பாட்டும் வாழி பாடி முடிக்கப்பட்டது. 

பெரும் நிகழ்வொன்றை கண்ட மனநிலையினின்று மீண்டேன். 

உயிர்ப்பலிக்கு பதிலாக மடைப்பலி

இத்தகைய உருவேற்று ஆட்ட நிகழ்வுகள் எனக்குப் புதியனவல்ல. என் சிறு வயதில் என் கிராமத்தில் இத்தகைய உயிர்ப்பலி கொடுக்கும் கோவில் சடங்குகளைப் பார்த்திருக்கிறேன். 

பிற்காலத்தில் அங்கு மடைப்பலி கொடுக்கப்பட்டதையும் அவதானித்துள்ளேன்.

மடை என்பது கமுகம், பாளை, வாழைப்பழம், பாக்கு, வெற்றிலை வைத்துப் பூசாரியார் அதனை ஒரு உயிராக உருவகித்துக் கொடுக்கும் ஒரு பலியாகும்.

உயிர்ப்பலிக்குப் பதிலாக அதை பெற சாமியைச் சம்மதிக்க வைதிருந்தார்கள்...." என மாடன் ஆட்டத்தையும் வில்லுப்பாட்டையும் கண்டதை பிசகின்றி குறிப்பிட்டார். 

மக்கள் முன் ஆற்றிய உரை 

வில்லுப்பாட்டு நிகழ்வு நிறைவடைந்த பின்னர், கூடியிருந்த நலந்தன்ன மலைவாழ் மக்கள் முன் உரையாற்றிய பேராசிரியர் மெளனகுரு இவ்வாறு சில விடயங்களை முன்வைத்தார்.

மனித இறைச்சி சாப்பிட்ட மனிதர்கள்...! 

"பிணங்களைத் தோண்டி அவற்றின் குடல்களை மாலையாகப் போட்டு அவற்றின் உள்ளுறுப்புகளைச் சாப்பிடும் சடங்கு முறைகள் மானுட சமூகத்தின் மிகப் புராதனமான சடங்கு வகைகளில் ஒன்று. மானிடவியலாளர்கள் இன்றும் எஞ்சி நிற்கும் இத்தகைய இனக்குழுக்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.

மானுட வரலாற்றின் ஆரம்ப காலத்தில் சில மானிடக் குழுக்களிடையே மனித இறைச்சி சாப்பிடும் வழக்கம் இருந்துள்ளது. 

இறந்தவர்களை உண்ணும் வழக்கம் முதலில் இருந்து பின்னர், அது ஒரு சடங்கு முறையாக மாறியிருக்கலாம்.

வாழ்வோடு ஒட்டியிருந்த சில பழக்க வழக்கங்கள் சடங்குகளாக மாறியமைக்கு நிறையச் சான்றுகள் உள்ளன. தமிழ் மக்களிடமும் இத்தகைய வணக்க முறைகள் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன.

பிணங்களை சாப்பிட்ட பேய் மகளிர்... பெண் தலைமை!

சங்க இலக்கியங்களில் பேய் மகளிர் பற்றிப் பேசப்படுகிறது. இப்பேய் மகளிர் சுடலையில் பிணங்களை உண்ட பழைய பெண் மதகுருமார்களாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சிலர் யூகிக்கின்றனர்.

மிகப் புராதன காலத்தில் பெண்ணே அக்குழுவுக்குத் தலைவியாக இருந்தாள். 

பெண்வழிச் சமூகம்... 'காடு கிழாள்' 'காட்டேரியம்மன்' ஆனாள்!  

பெண்வழிச் சமூக அமைப்பு நிலவிய காலம் அது. அப்பெண்ணே மத குருவாகவும் இருந்தாள். தாயைத் தெய்வமாக வணங்கிய பெண்வழிச் சமூக அமைப்பு அது. கொற்றவை, காடுகிழாள் என்பன அன்றைய தமிழரின் பெண் தெய்வங்கள். கொற்றவை பின் காளியானாள். 

இந்தக் காடுகிழாளின் இன்றைய எஞ்சிய வடிவம்தான் மலையகக் காட்டேரியம்மன் என நினைக்கிறேன். திருநெல்வேலிப் பகுதியில் வாழ்ந்த ஒரு மக்கள் குழுவினரிடம் வழக்கிலிருந்த சுடலை மாடன் வில்லுப்பாட்டை 1960களில் பேராசிரியர் வானமாமலை கல்வி உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தார். சுடலை மாடனை சிவனுடன் இணைக்கும் பண்பை அதில் கண்டேன். 

அன்று நான் வாசித்த அந்தச் சுடலை மாடன் வில்லுப்பாட்டை இன்று நிகழ்த்துகலையாகவும் சடங்காகவும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமை நான் பெற்ற பாக்கியம்.   

மறைந்து கிடக்கும் தமிழர் பண்பாடு, சடங்கு, கலாசாரம்...

மக்களே, இவ்வகையில் நீங்கள் 3000 வருடங்களுக்கு முன்னர் தமிழர் மத்தியில் இருந்த ஒரு வணக்க முறையினை இன்றளவும் பேணும் பெருமையைக் கொண்டிருக்கிறீர்கள்.

அதற்கு தமிழ்ப் பண்பாடு பேசுவோர் உங்களுக்கு மிகுந்த நன்றி செலுத்த வேண்டும். உங்களுக்கு இது சடங்கு, நம்பிக்கையோடு செய்யப்படும் சடங்கு. நம்பிக்கையே இங்கு பிரதானம். இதில் நம்பிக்கையின்றிப் பார்ப்போருக்கு இது ஒரு கண்காட்சி அல்லது ஆற்றுகை. 

வில்லுப்பாட்டு பாடிய அனைவரும் அதில் தோய்ந்து மிகுந்த ஈடுபாட்டுடன் பாடினர். அவர்களின் உடுக்கைகளின் ஒலியும், வில்லில் கட்டிய மணியின் ஒலியும், குடம் எழுப்பிய ஒலியும், பாடிய ஒவ்வொருவரின் லயம் தவறாத பெருத்த குரல் ஒலிகளும் ஒன்றாக இணைந்து என்னை உருவேற்றின. இத்தகைய திறன் மிகுந்த கலைஞர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

மலைக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் கலைஞர்கள் இவர்கள். ஏன் இவர்கள் இதுகாறும் வெளிக்கொணரப்படவில்லை?

இந்தச் சடங்கு ஏன் வெளியுலகுக்குப் பிரபல்யப்படுத்தப்படவில்லை என்ற கேள்விகள் என்னுள்ளத்தில் எழுந்த வண்ணம் இருந்தன..." என்று கூறினார். 

மக்களிடம் ஒரு வேண்டுகோள்... 

பக்தர்கள் சொன்னால் தெய்வம் கேட்கும்!

"சுடலை மாடசாமி உங்களின் குல தெய்வம். உங்களைக் காக்கும் தெய்வம். 

ஆரம்ப காலத்தில் சுடலையில் பிணத்தைக் கிழித்து குடலை மாலையாக போட்டபடி சுடலை மாடன் வந்தபோது நீங்கள் இந்தக் கோலம் கண்டு குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் தாக்கமடைகிறார்கள் என்று வேண்ட, அவர் பிணத்தின் குடலை மாலையாகப் போடுவதற்குப் பதிலாக கோழியின் குடலைப் போட ஒப்புக்கொண்டதாக இங்கு ஒரு பெரியவர் என்னிடம் கூறினார். 

பக்தர்கள் சொன்னால் சுவாமிகள் கேட்பர். பக்தி எனும் வலைக்குள் கட்டுப்படாத சாமிகளே இல்லை. அன்பின் சக்தி அத்தகையது. 

மாடனிடம் நீங்கள் 'சுவாமி, காலம் மாறி வருகிறது. கோழியைக் கிழித்துக் குடலை மாலையாகப் போடுவதைக் குழந்தைகள் பார்க்கிறார்கள். கோழிக்கு பதிலாக பூக்களைக் குடல்கள் போல கட்டி வைக்கிறோம். அவற்றை மாலையாக அணிந்து, உள்ளுறுப்புகளாக நினைத்துச் சாப்பிடுங்கள்' என வேண்டுகோள் விடுங்கள். உங்களைக் காப்பாற்றும் அந்த சாமி அவசியம் உங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வார்.

எங்களூரிலும் நரபலிக்குப் பதிலாகப் பூசணிக்காய் வெட்டி அதன் மீது குங்குமம் தடவும் பழக்கமுண்டு.

உயிர்ப்பலிக்குப் பதிலாக மடைப்பலி கொடுக்கும் வழக்கமுண்டு" என்ற தனது கருத்தினை அந்த கூட்டத்தில் தாழ்மையோடு பேராசிரியர் முன்வைத்ததாக குறிப்பிட்டார். 

விமர்சனக் கேள்வி 

பிறகு ஒரு கட்டத்தில், பேராசிரியரின் இந்த கூற்றினை சுட்டிக்காட்டிய அவரது மகன், "அந்த மக்களின் நம்பிக்கை, சடங்கில் கைவைக்க, அவர்களுக்கு புத்திமதி கூற, நீங்கள் யார்? உங்கள் அறிவை அவர்கள் மீது திணிக்கிறீர்களா?" என கேட்டபோது, "நானும் அவர்களில் ஒருவன்" என பதிலளித்துள்ளார். 

அந்த கேள்விகளுக்கு தான் உடன்படாவிட்டாலும், அவை தன்னை பல திசைகளில் சிந்திக்க வைத்ததாக பேராசிரியர் மெளனகுரு தனது நினைவுப் பேருரையில் பகிர்ந்துகொண்டார்.

"தொலைத்த இடத்தில் தேடுவோம்" (01)  - இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும் கழுவன்கேணி மக்கள்!  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருமண தடையை அகற்றி, மங்கல்ய யோகம்...

2024-11-15 16:38:08
news-image

இழப்பிலிருந்தே படைப்பு பீறிட்டுக் கிளம்புகிறது! –...

2024-11-06 05:11:38
news-image

கந்தன் துணை : கந்த சஷ்டி...

2024-11-02 13:18:19
news-image

தமிழர்கள் என்பதால் நாம் தமிழ் இலக்கியங்களோடு...

2024-07-15 11:23:10
news-image

யாழ். வட்டுக்கோட்டை சிவபூமி தேவார மடம் ...

2024-07-15 11:57:52
news-image

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய எண்ணெய் காப்பு...

2024-07-09 17:54:00
news-image

தொலஸ்பாகை தாமரவல்லி ஸ்ரீ முருகன் ஆலய...

2024-07-08 18:08:11
news-image

இலங்கையில் இலக்கிய பாரம்பரியம் இன்னும் மாறவில்லை!...

2024-06-29 14:05:39
news-image

"நான் எழுத்தாளராக பிறக்கவில்லை; ஒரு மனுஷியாகத்தான்...

2024-06-19 17:59:32
news-image

உலகில் எங்கும் கேட்கக்கூடாத குரல்! :...

2024-06-19 13:34:15
news-image

21ஆம் நூற்றாண்டில் பல்லவர் கலையின் வரலாறு...

2024-06-11 15:50:21
news-image

பல்­லவர் கால கலை­யம்சங்­க­ளுடன் கும்­பா­பி­ஷேகம் காணும்...

2024-06-09 20:13:09