ஜனநாயகத்தின் முன்னரங்கத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு

15 May, 2024 | 11:30 AM
image

கலாநிதி ஜெகான் பெரேரா 

தேர்தல்கள் மக்கள் அவர்களின் வர்க்க, இன, மத அடையாளங்களுக்கு அப்பால் சமத்துவமானவர்களாக மாறிவிடும் ஒரு தனித்துவமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படும் அரசியல்வாதிகள் மக்களின் நிறைவேற்றப்படாத தேவைகளை கவனிப்பதற்கான இடப்பரப்பை அது வழங்குகிறது.

சனத்தொகையில் குறிப்பிட்ட சில பிரிவுகளை இலக்குவைத்து சமூக மட்டத்துக்கு வளங்களைக் கொண்டுசெல்லக்கூடிய பல்வேறு அபிவிருத்தி திடடங்களை அரசாங்கம் தொடங்கியிருக்கிறது. இந்த திட்டங்கள் சமூகத்தின் அடிமட்டத்தில் ஆதரவைத் திரட்டுவதற்கு அரசாங்கத்துக்கு உதவும்.

அரசாங்க அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் தேர்தல் நேரத்தில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களுக்கு  உதவிகளை வழங்குவதற்கான ஆற்றலைக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளில் சிலவற்றை ஆட்சேபிப்பதில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் சிவில் சமூக அமைப்புகளும் செய்திருக்கும் தலையீட்டை இந்த பின்னணியில் நோக்கவேண்டிய தேவை இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து அரசாங்கம் பல திட்டங்களை தொடங்கியிருப்ப்பதாக சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பின் (பவ்ரல்) நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியிருக்கிறார். வறியவர்களுக்கு அரிசி விநியோகம் உட்பட இந்த திட்டங்களுக்கு மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணம் செலவாகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

"ஒவ்வொரு உள்ளூராட்சி அரசாங்க பகுதியிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ஒரு கோடி ரூபாவை ஒதுக்கியிருக்கிறது. இந்த நிதி மாகாணங்களின் ஆளுநர்களின் தற்துணிபின் அடிப்படையில் பயன்படுத்தப்படும். ஆளுநர்கள் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதிகள். இந்த நடவடிக்கைகள் தேர்தலை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன எனபது வெளிப்படையானது."

எதிர்வரும் ஜூலை மாதமளவில் சகல அரசாங்க செயற்திட்டங்களையும் பூர்த்திசெய்துவிடுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக ஹெட்டியாராச்சி ஏற்கெனவே கூறியிருந்தார். ஜூலை மாதமளவில்தான் உத்தியோகபூர்வமாக தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்படக்கூடும்.

அரசாங்கத்தில் உள்ளவர்கள் வாக்காளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய நிலையில் இருப்பதால் அனுகூலத்தைக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டதும் மக்களுக்கு அரசாங்க வளங்களை வழங்குவதில் அரசாங்க உறுப்பினர்கள் நேரடியாக ஈடுபடமுடியாது என்று தேர்தல் சட்டம் தெளிவாகக் கூறுகிறது.

எதிர்பார்க்கப்படும் தேர்தல்களுக்கு முன்னதாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கேள்வி எழுப்பியிருக்கிறது. பிரதேச செயலாளர் பிரிவுகளில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் போர்வையில் அரசியல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதனால் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து பவ்ரல்  செய்த முறைப்பாட்டை தேர்தல்கள் ஆணைக்குழு கவனத்தில் எடுத்திருக்கிறது.

அரசியல்மயமாக்கல் இல்லை 

தேர்தல் காலகட்டம் ஒன்றின்போது மக்களுக்கு வளங்களை வழங்குவதில் அரசாங்க உறுப்பினர்கள் மறைமுகமாக ஈடுபடக்கூடிய சாத்தியங்களை தடுப்பதற்கான ஏற்பாடுகள் இலங்கையின் தேர்தல் சட்டத்தில் இருக்கின்றன. தேர்தல் பிரசாரங்களின்போது அரச ஊடகங்களைப் பயன்படுத்துவதிலும் விளம்பரம் செய்வதிலும் பக்கச்சார்பான நோக்கங்களுக்காக பொதுத் தொடர்பாடல் சாதனங்களை பயன்படுத்துவதிலும் அரசாங்க அதிகாிகளுக்கு இருக்கக்கூடிய ஆற்றலை சடடம் மட்டுப்படுத்துகிறது.

தேர்தல் காலகட்டத்தின்போது அரசாங்க வளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை மேற்பார்வை செய்யும் பணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிடமும் சுயாதீன கண்காணிப்பாளர்களிடமும் ஒப்படைக்கப்படுகிறது. அரசாங்க வாகனங்களும் உபகரணங்களும் பணியாளர்களும் ஏனைய அரச சொத்துக்களும் தவறாகப் பயன்படுத்தப்படுவதை கண்டுபிடிப்பதும் இந்த பணியில் அடங்கும்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் மறைமுகமாக செல்வாக்குச் செலுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய சாத்தியங்களுக்கு மத்தியிலும் கூட தேர்தல் செயன்முறைகளின் நேர்மையை உறுதியாகக்  கடைப்பிடிப்பதற்கான முயற்சிகளை இந்த சட்ட ஏற்பாடுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

சாப்பிட்டுப் பார்த்தால்தான் உணவின் சுவை தெரியும் என்று சொல்வார்கள். ஒரு கோடி ரூபா ஒதுக்கப்படவிருக்கும் ஒவ்வொரு உள்ளூராட்சி பகுதியிலும் சமூக ஆலோசனைக் குழுக்களை நியமிப்பது தொடர்பில் பணிப்புரையொன்றை ஜனாதிபதி செயலகம் அண்மையில் வழங்கியது. உள்ளூராட்சி பகுதிகளில் முன்னுரிமை கொடுக்கவேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கான அதிகாரம் இந்த சமூக ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

பிரச்சினை என்னவென்றால், இதே பகுதிகளில் கடந்த வருடம் உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவை ஒத்திவைக்கப்பட்டன. உள்ளூராட்சி தேர்தல்களுக்கான வேட்பாளர்களில் சிலர் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெறுவார்கள். தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்ட் போதிலும், அவர்களின் நியமனப் பத்திரங்கள் இன்னமும் செல்லு படியானவையாகவே இருக்கின்றன. இது  நலன்களின் முரண்பாட்டைத் தோற்றுவிக்கிறது.

ஆலோசனைக் குழுவின் வழிகாட்டலுடன் விநியோகிக்கப்படவிருக்கும் அரசாங்க வளங்களில் கணிசமான அரச வளங்கள் உள்ளடங்கியிருக்கின்றன. இருபது இலட்சம் குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கும் சுமார் முப்பது இலட்சம் குடும்பங்களுக்கு இரு மாத காலத்துக்கு இலவச மாக அரிசியை விநியோகிப்பதற்கும் துரித திட்ட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

மற்றைய திட்டங்களில் நகரப்பகுதிகளில் வீடுகள் விநியோகம், மலையக அபிவிருத்திச் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும்  விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் அடங்குகின்றன. அரச வளங்கள் விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட இந்த முக்கியமான திட்டங்களின் அரசியல்மயமாக்கவை தேர்தல்கள் ஆணைக்குழு ஆட்டேபித்து அதற்குரிய ஆணையின் பிரகாரம் நடந்துகொண்டது.

அரசியலமைப்புக்கான 21வது திருத்தம் நீதி மற்றும சட்டத்தின் ஆட்சி தொடர்பான அக்கறைகளுக்கு மேலாக பக்கச்சார்பான அரசியல் செல்வாக்குச் செலுத்தாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு சுயாதீன  நிறுவியது. நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கசபை மற்றும்நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையில் உள்ள அதிகாரச் சமநிலையை மீளவும் ஏற்படுத்தி பலம்படுத்துவதையும் ஜனாதிபதியின் அதிகாரங்கைளைக் குறைப்பதையும் தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவை உட்பட முக்கியமான அரச நிறுவனங்களின் சுயாதீனத்தை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டதே 21வது திருத்தம்.  

இந்த ஆணைக்குழுக்கள் முன்னர் கடுமையான அரசியல் தலையிட்டுக்கு உள்ளாகின. வளங்கள் ஒதுக்கீடு தொடர்பில் தீர்மானிப்பதற்கு உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்கு  நியமனப்பத்திரங்களை கொடுத்தவர்களை நியமிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்த  அவதானங்களுக்கு மதிப்புக் கொடுக்குமா என்பதே கேள்வி.

எதிர்வரும் தேர்தல்களுக்கு முன்னதாக மக்கள் மத்தியில் தனது ஆதரவை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்புகிறது. ஒரு வருடத்துக்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கான உரியகாலம் வந்தபோது தேர்தல்கள் ஆணைக்குழு செய்த பிரகடனத்தை அரசாங்கம் அலட்சியம் செய்தது. நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்  அந்த தேர்தல்களை நடத்துவதற்கு நிதியை விடுவிக்கக்கூடிய நிலை இல்லை என்று அரசாங்கம் கூறியது.

அது தொடர்பிலான சர்ச்சை உயர்நீதிமன்றம் வரை சென்றது. உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்க பட்ஜெட்டில் ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடுவிக்காமல் தடுத்துவைக்கக்கூடாது என்றும் எந்த நோக்கத்துக்காக அந்த நிதி ஒதுக்கப்பட்டதோ அதே நோக்கத்துக்காகவே அது  பயன்படுத்தப்படவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது  ஆனால் அரசாங்கம் அந்த தேர்தல்களை நடத்தாமல் சட்டத்தை மீறி அவற்றை தொடர்ந்து ஒத்திவைத்து வருகிறது.

இறுதி அதிகாரம் மக்களிடமே இருக்கிறது. குறுகியகாலப் பயன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதா அல்லது சகலருக்கும பிரயோகிக்கப்படக்கூடியதாக சட்டத்தில் வரையறுக்கப்பட்ட முறைமை ஒன்றைப் பின்பற்றுவதா என்பதை தீர்மானிப்பது வாக்களிக்கப்போகும்போது மக்களுக்குரிய கடமையாகும்.

2022ஆம் ஆண்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் கிளர்ச்சி மூண்டநாள் தொடக்கம் "முறைமை மாற்றம்" என்பதே மக்களின் இலட்சியமாக இருந்தது. அந்த இலட்சியத்தை சம்பாத்தியத்தை தேடுவதில் எதிர்நோக்கப்படும் வேதனைமிகு சூழ்நிலையும் தற்போது கிடைக்கின்றதை குறுகியகாலப் பயனுக்காக பெறுவதில் உள்ள ஆர்வமும் தணித்துவிடமா இல்லையா என்பது வரவிருக்கும் தேர்தலிலேயே தீர்மானிக்கப்படும்.

முறைமை மாற்றம் என்பது ஒரு செயன்முறையும் விளைவுமாகும். அந்த முறைமை மாற்றத்தை கொண்டுவரக்கூடிய செயன்முறை மீதே அரசியல் பாத்திரங்கள் கவனத்தைச் செலுத்துவது  அவசியமாகும். தற்போதைய தருணத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னரங்கத்தில் நிற்கிறது. அதற்கு மக்கள் முழுமையான ஆதரவைக் கொடுக்கவேண்டியது அவசியமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விரைவில் இலங்கை - பிரான்ஸ் பொருளாதார...

2024-05-24 18:17:40
news-image

பலஸ்தீன படுகொலைகளை ஆதரிக்கிறதா இலங்கை?

2024-05-24 18:03:49
news-image

பலஸ்தீன படுகொலைகளை ஆதரிக்கிறதா இலங்கை?

2024-05-24 13:26:57
news-image

வெசாக் தினம்

2024-05-22 20:08:47
news-image

வல்லரசு நாடுகளுக்கு சவாலாக உலகை தன்...

2024-05-22 10:53:56
news-image

நல்லிணக்கத்துக்கு ஜனாதிபதியின் உள்ளார்ந்த ஈடுபாடு அவசியம்

2024-05-21 12:45:05
news-image

கண்ணோட்டம் : சட்டம் பற்றிய அறிவினை...

2024-05-21 09:16:17
news-image

படையினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகள்...

2024-05-21 03:53:30
news-image

இரத்தினபுரி தும்பர தோட்ட சம்பவம்; பத்தோடு...

2024-05-21 03:42:15
news-image

சவால்களுக்கு மத்தியில் மீண்டுவரும் இலங்கை 

2024-05-20 18:35:04
news-image

இனவாதிகளை சந்தோஷப்படுத்தியுள்ள புலிகள் அமைப்பின் மீதான...

2024-05-20 17:33:41
news-image

சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்துக்கு தந்தை வழியில் தன்னை...

2024-05-21 14:14:48