(நெவில் அன்தனி)
டெல்ஹி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (14) இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 64ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் அணியை எதிர்த்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 19 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இந்தப் போட்டி முடிவை அடுத்து 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் இரண்டாவது அணியாக ப்ளே ஓவ் வாய்ப்பை உறுதி செய்துகொண்டது.
ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலாவது அணியாக ப்ளே ஒவ் வாய்ப்பை உறுதி செய்துகொண்டிருந்தது.
தனது கடைசிப் போட்டியில் ஈட்டிய வெற்றியின்மூலம் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் மொத்தமாக 14 புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும் அதன் நிகர ஓட்ட வேகம் போதமானதாக இல்லாததால் ப்ளே ஓவ் வாய்ப்பை பெறுவது சந்தேகமே.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் மிக மோசமான தோல்விகளைத் தழுவினால் மாத்திரமே டெல்ஹிக்கு ப்ளே ஓவ் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் படுதோல்விகளைத் தழுவும் என எதிர்பார்க்க முடியாது.
அதேவேளை தோல்வி அடைந்த லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸுக்கு இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்கின்றபோதிலும் அவ்வணிக்கு ப்ளே ஓவ் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.
64ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர் ஜேக் ப்ரேச் மெக்கேர்க் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தபோதிலும் அபிஷேக் பட்டேல், ஷாய் ஹோப் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சரிசெய்தனர்.
ஷாய் ஹோப் 38 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
மொத்த எண்ணிக்கை 111 ஓட்டங்களாக இருந்தபோது அபிஷேக் பட்டேல் 58 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார். அவர் 5 பவுண்டறிகளையும் 4 சிக்ஸ்களையும் அடித்திருந்தார்.
அணித் தலைவர் ரிஷாப் பான்ட் 33 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 27 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 57 ஓட்டங்களையும் அக்சார் பட்டேல் ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
209 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
குவின்டன் டி கொக் (12), அணித் தலைவர் கே.எல். ராகுல் (5), மாக்கஸ் ஸ்டொய்னிஸ் (5), தீப்பக் ஹூடா (0), அயுஷ் படோனி (6) ஆகிய ஐவரும் ஆட்டம் இழக்க லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 7.3 ஓவர்களில் 71 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
மறு பக்கத்தில் தனி ஒருவராக அருமையாகத் துடுப்பெடுத்தாடிய நிக்லஸ் பூரண் 27 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைக் குவித்து அணியை மிக மோசமான நிலையிலிருந்து மீட்டார்.
அவரைத் தொடர்ந்து நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய க்ருணல் பாண்டியா 18 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அத்துடன் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸின் எதிர்ப்பார்ப்பு தவிடுபோடியானது.
எனினும் அர்ஷாத் கான், யுத்விர் சிங் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்து டெல்ஹியின் வெற்றியை தாமதப்படுத்தினர்.
இந்த இணைப்பாட்டமே லக்னோவ் சுப்பர் ஜய்ன்ட்ஸின் இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாகப் பதிவானது.
அர்ஷாத் கானுக்கு துடுப்பாட்ட வாய்ப்பை வழங்கும் நோக்கத்துடன் இரண்டாவது ஓட்டத்தை எடுத்த ரவி பிஷ்னோய் 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
ஒரு பக்கத்தில் அர்ஷாத் கான் தனது அணியின் வெற்றிக்காக கடுமையாக முயற்சித்த போதிலும் கடைசி ஓவரில் அவர் தனது முயற்சியைக் கைவிட்டுவிட்டார். 33 பந்துகளை எதிர்கொண்ட அர்ஷாத் கான் 3 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 58 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: இஷாந்த் ஷர்மா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM