ஐ.சி.சி. ரி20 உலகக் கிண்ணம் : 2014இல் நியூஸிலாந்துக்காக விளையாடிய கோரி 2024இல் அமெரிக்காவுக்காக விளையாடவுள்ளார்

13 May, 2024 | 01:29 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்தின் முன்னாள் அதிரடி வீரர் கோரி அண்டர்சன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவுக்காக விளையாடவுள்ளார்.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 2014இல் நியூஸிலாந்துக்காக விளையாடிய அவர் இப்போது 10 வருடங்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்காக விளையாடவுள்ளார்

நியூஸிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திக்கொண்டு ஐக்கிய அமெரிக்கா சென்ற சகலதுறை வீரர் கோரி அண்டர்சன், 2023இல் ஐக்கிய அமெரிக்காவுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தகுதிபெற்றார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கோரி அண்டர்சன் பிரபல்யமான ஒருவராவார்.

நியூஸிலாந்துக்காக 2012இலிருந்து 2018வரை மூவகை சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 93 போட்டிகளில் விளையாடிய கோரி அண்டர்சன் 2,277 ஓட்டங்களைப் பெற்றதுடன் 90 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார்.

நியூஸிலாந்து கிரிக்கெட்டிலிருந்து 2020இல் விடைபெற்ற கோரி, ஐக்கிய அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட்டில் விளையாட 3 வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

மேஜர் லீக் கிரிக்கெட்டில் சான் பிரான்சிஸ்கோ யூனியன்ஸ் அணிகாக விளையாடி வரும் கோரி அண்டர்சன், மிக அண்மையில் நடைபெற்ற MI நியூ யோர்க் அணிக்கு எதிரான போட்டியில் 52 பந்துகளில் 91 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

எவ்வாறாயினும் ஐக்கிய அமெரிக்க அணிக்காக அவர் 2 போட்டிகளில் மாத்திரமே இதுவரை விளையாடியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஐக்கிய அமெரிக்க அணியில் அறிமுகமான கோரி அண்டர்சன், தனது இரண்டாவது போட்டியில் 55 ஓட்டங்களைப் பெற்றார். இந்த எண்ணிக்கையே அமெரிக்காவுக்காக அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கையாகும்.

பங்களாதேஷில் 2014இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் நியூஸிலாந்துக்காக விளையாடிய கோரி அண்டர்சன், தனது இரண்டாவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் ஐக்கிய அமெரிக்காவுக்காக விளையாடவுள்ளார்.

இண்டியன் பிறீமியர் லீக்கில் மும்பை இண்டியன்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிளுக்காகவும் கோரி அண்டர்சன் விளையாடியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, ஐக்கிய அமெரிக்காவின ரி20 உலகக் கிண்ண குழாத்தில் இந்தியாவில் ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் ஏனைய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிய சிலரும் இடம்பெறுகின்றனர்.

மொனான்க் பட்டேல் (அணித் தலைவர்), மிலிந்த் குமார், ஹார்மீத் சிங், சௌராப் நெட்ராவால்கர், நிசார்க் பட்டேல் ஆகியோர் இந்தியாவில் பிறந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடிய வீரர்களாவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்