டயனா கமகேவுக்கு எதிரான தீர்ப்பு : தப்பிப் பிழைத்த ஐக்கிய மக்கள் சக்தி

Published By: Digital Desk 7

12 May, 2024 | 03:57 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன் 

பாராளுமன்றத்தில் தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்  நாட்டில் கஞ்சா வளர்ப்பைச் சட்டபூர்வமாக்க வேண்டும், கஞ்சாவை ஏற்றுமதி செய்ய வேண்டும், பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும் அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தலாம் எனப்பேசி வந்த சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்  டயனா கமகே உயர்  நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தனது எம்.பி அந்தஸ்த்தை இழந்துள்ளார். 

பிரித்தானிய குடியுரிமையைப் பெற்றதன் பின்னர் டயனா, இலங்கை பிரஜை என்ற அந்தஸ்த்தோடு அதைத் தொடர்வதற்கு சட்டரீதியாக தவறிவிட்டார். இலங்கைப் பிரஜையாக இல்லாத காரணத்தினால் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்ற சாட்சியங்களின் உறுதிப்படுத்தலில் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததோடு அவர் சட்டத்தின் பிடிகளிலிருந்து தப்பி விட்டார் என்று கூற முடியாது. தனது பிரித்தானிய பிரஜை அந்தஸ்த்தை அவர் மறைத்தமை, போலி ஆவணங்கள் மூலம் இலங்கை பிரஜை என்ற தேசிய அடையாள அட்டையைப் பெற்றமை மற்றும் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் போலி  தகவல்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்றமை  ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்படுமிடத்து அவருக்கு குறைந்தது ஆறுமாதம் சிறைத் தண்டனை கிடைக்கவும் இடமுள்ளது.

இதை உறுதி செய்யும் வகையிலேயே அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட மறுநாளே அவர் வெளிநாடு செல்வதற்கான தடையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன் படி இத்தடை இவ்வருடம் நவம்பர் மாதம் 17ஆம் திகதி வரை அமுலிலிருக்கும். 

சமூக செயற்பாட்டாளர் ஓஷல லக்மால் ஹேரத் சார்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு மேன்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையின் தீர்ப்பிலேயே டயனா கமகே தனது தனது எம்.பி பதவியை இழந்தார். மட்டுமின்றி மனுதாரருக்கு  வழக்கு செலவுகளை செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

டயனா கமகே பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்க முடியுமா என்ற சர்ச்சை. அவர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பிரிந்து சென்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட பிறகே உருவானது எனலாம். 2020 ஆம் ஆண்டு   ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணி (சமகி ஜன பல வேகய)  உருவாவதற்கு முன்பதாக, புதிய கூட்டணிக்கு   ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்   மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரிய ஆராய்ச்சி ஆகியோரால் உருவாக்கப்பட்ட    அபே ஜாதிக பெரமுன என்ற பெயரே முன்மொழியப்பட்டிருந்தது. 

அது ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாகவும் இருந்தது. மகிந்த ராஜபக்ஷவுடனான அரசியல் கூட்டணியை முறித்து கொண்டு அதிலிருந்து வெளியேறிய மேற்படி இருவராலும் அபே ஜாதிக  பெரமுன என்ற கட்சி உருவாக்கப்பட்டது. இந்த கட்சியின் பொதுச்செயலாளராக அப்போது விளங்கியவர் மங்கள சமரவீரவின் ஊடகச் செயலாளராக விளங்கிய ருவான் பேர்டிணன்டஸ் என்பவராவார். பின்பே டயனா கமகேவின் கணவர்  சேனக்க சில்வா இதன் செயலாளராக அறிவிக்கப்பட்டார். பின்பு ஒரு கட்டத்தில் சேனக்க சில்வா கட்சியின் தவிசாளராகவும் டயனா கமகே பிரதி செயலாளராகவும் விளங்கினர். 

பின்னர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் மீண்டும் கூட்டணியாக இக்கட்சி பதிவு செய்யப்படுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டபோதே, அதன் பெயர் சமகி ஜன பல வேகய (ஐக்கிய மக்கள் சக்தி) என பெயர் மாற்றம் பெற்றது. எனினும் அப்போது டயனாவின் கணவர், அபே ஜாதிக பெரமுனவின் பிரதி தவிசாளர் என்ற பொறுப்பையும் டயனா பிரதி செயலாளர் என்ற பதவியையும் வகித்தனர்.  அந்த ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தி  ஏழு தேசிய பட்டியல் ஆசனங்களுடன் மொத்தமாக 54 ஆசனங்களைப் பெற்றது. தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு உட்பிரவேசித்தவரே டயனா கமகே. 

பிறிதொரு சந்தர்ப்பத்தில் தானும் தனது கணவரும் அபே ஜாதிக பெரமுனவின் சகல பதவி நிலைகளிலிருந்தும்  விலகியுள்ளதாகவும் இராஜிநாமா கடிதங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு கையளித்து விட்டதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். எனினும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து விலகவில்லையென்று கூறியிருந்தார். 

 அந்த ஆண்டு ஜனாதிபதி கோட்டாபயவால் கொண்டு வரப்பட்ட 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார் டயனா.   ஜனாதிபதியின் கரங்களை வலுப்படுத்தவே அவ்வாறு செய்தேன் என விளக்கமளித்த அவர், எனினும் தொடர்ந்து தான் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியாகவே இருப்பேன் என விளக்கமளித்தார். அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்தது. 

2021 இல் அவர் பொது ஜன பெரமுனவுக்கு ஆதரவு தரும் எம்.பியாக மாறினார். பின்னர் ரணில் அரசாங்கத்தில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்று சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஏனைய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை வெறுப்பேற்றினார். இறுதியில் இப்போது சகலதையும் இழந்து நிற்கின்றார்.

டயனா கமகேவிற்கு எதிரான உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து  ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் அதிர்ச்சியடையும் வகையில் கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றில் சர்ச்சையை கிளப்பினார் அமைச்சர் காஞ்சன விஜேசேகர. 

இலங்கை பிரஜை அல்லாத டயனா கமகே உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தி எனும் கட்சி சட்டபூர்வமானதா என்று கேள்வியெழுப்பிய அவர், கட்சியின் வேட்பு மனுவில் கையெழுத்திட்டிருந்தால் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்குமே பிரச்சினைகள் உள்ளன என பீதியை கிளப்பியிருந்தார்.

எனினும் 2020 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணி உருவாக்கப்பட்ட போது அதன் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவே விளங்கினார். அவரே தற்போதும் செயலாளராக உள்ளார். அவ்வாண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கட்சியின் வேட்பு மனுவில் அவரே கையெழுத்திட்டிருந்தார். 

எனவே  இவ்விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு எந்த சட்டச் சிக்கல்களும் இல்லை என உறுதியாகக் கூறலாம். இலங்கையின் பிரஜையாக அல்லாத ஒருவர் தேர்தல்களில் போட்டியிடுவதையும் , எம்.பியாவதையும் அதேவேளை தேர்தல்களில் வாக்களிப்பதையுமே இலங்கையின் சட்டங்கள் தடுக்கின்றன. ஆனால் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு எந்தவித தடைகளும் இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் ஆரம்பத்திலேயே டயனா கமகேவை கூட்டணியின் முக்கிய பதவியிலிருந்து கழற்றி விட்டமை சஜித் அணியினர் செய்த மிகப்பெரிய நன்மையாகி விட்டிருக்கின்றது. இல்லாவிடின் அவருக்கு எதிரான உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏதாவதொரு வகையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறலாம். 

டயனா கமகே, எம்.பி அந்தஸ்த்தை இழந்திருப்பது சஜித்துக்கு ஒரு வகையில் தலைவலியொன்றுக்கு  தீர்வு கிடைத்திருப்பதற்கு சமன். அவருக்குப்பதிலாக முன்னாள் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீண்டும்  கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். 

ஆனால் மறுபக்கம் மொட்டு கட்சிக்கு இது ஒரு இழப்பாகி விட்டது. சஜித் பக்கமிருந்து மாத்திரமல்லாது எந்த பக்கமிருந்தாவது யாராவது தமக்கு ஆதரவு தர வரமாட்டார்களா என மஹிந்த தரப்பினர் தவம் கிடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் அவர்கள் தரப்பு ஆதரவு எம்.பி ஒருவர் பாராளுமன்றத்தை விட்டே வெளியேறியுள்ளார்.  இதுவும் ரணிலின் விளையாட்டுகளில் ஒன்றா என்பது புரியவில்லை. 

ஆனால்  தான் மீண்டும் அரசியலில் ஈடுபட்டு பாராளுமன்றம் வருவேன் என டயனா கமகே சூளுரைத்துள்ளார். நாட்டை விட்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் அவர், தன் மீதுள்ள ஏனைய குற்றங்களிலிருந்து  தான்  நிரபராதி என நிரூபிக்க வேண்டியவராக உள்ளார். அதிலிருந்து மீண்டு வருவாரா, அரசியலுக்கு மீண்டும் வருவாரா என்பதை காலம் தான் பதில் சொல்லும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right