நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் : மயூரபதி ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் இந்திய புண்ணிய நதிகளின் தீர்த்தம், சீர்வரிசை !

12 May, 2024 | 09:35 AM
image

உமாச்சந்திரா பிரகாஷ்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் 19.05.2024 ஞாயிற்றுக்கிழமை ராமபிரானின் அருளுடனும் சீதாபிராட்டியின் ஆசியுடனும் நடைபெற திருவருள் பாலித்துள்ளது. மேலும் எதிர்வரும் 18.05.2024 சனிக்கிழமை எண்ணெய்க்காப்பு நடைபெறவுள்ளது.

சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில், ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யவுள்ள சீதை அம்மன் சிலைக்கு மயூரபதி ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள், இந்தியாவில் இருந்து வருகைதந்த சுவாமி ஸ்ரீ கோவிந் தேவ் கிரிஜி மகராஜ் அவர்கள் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. 

நேற்றைய தினம் (10) வெள்ளிக்கிழமை காலை மயூரபதி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, சீதை அம்மன் சிலை மற்றும் இந்தியாவின் கோயம்புத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட எட்டு கலசங்கள் சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

மேலும், சீதையம்மனின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவுக்காக அயோத்தி ராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் சீதை அம்மனுக்கான சீர்வரிசை பொருட்கள் மற்றும் இந்திய புண்ணிய நதிகளின் தீர்த்தம் ஆகியன மயூரபதி ஆலயத்தில் இருந்து எதிர்வரும் 17.05.2024 வெள்ளிக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளன.

எதிர்வரும் 17.05.2024 வெள்ளிக்கிழமை காலை மயூரபதி ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசியல் தலைவர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பெளத்த மதத் தலைவர்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளார்கள். 

மயூரபதி ஆலயத்தில் காலை 7 மணிக்கு நடைபெறும் பூஜைகளைத் தொடர்ந்து முதலாவது நாள் தீர்த்த ஊர்வலம் ஆரம்பமாகி, கொள்ளுப்பிட்டி இந்திய தூதரகம், காலி முகத்திடல் ஊடாக பிரதான வீதி, செட்டியார் தெரு, ஆமர் வீதி, அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கடுவல, அவிசாவளை, யட்டியாந்தோட்டை, கினிகத்தேனை, ஹட்டன், கொட்டக்கலை, தலவாக்கலை, பூண்டுலோயா, தவலந்தனை சந்தி ஊடாக இறம்பொடை ஸ்ரீ ஹனுமான் ஆலயத்தை சென்றடையும்.

18.05.2024 சனிக்கிழமை இறம்பொடை ஸ்ரீ ஹனுமான் ஆலயத்தில் காலை 7 மணிக்கு நடைபெறும் பூஜைகள், வழிபாடுகளைத் தொடர்ந்து, இரண்டாவது நாள் தீர்த்த ஊர்வலம் ஆரம்பமாகி, லபுக்கலை, நுவரெலியா ஊடாக, நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தை சென்றடையும். 

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சீதையம்மன் சிலையை மயூரபதி அம்மன் ஆலயம் வழங்கியமைக்கான காரணம் மற்றும் கும்பாபிஷேகப் பெருவிழாவுக்கான பூஜைப் பொருட்கள் மயூரபதி ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமைக்கான காரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் (நுவரேலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர்) தெளிவுபடுத்தினார்.

இந்தியத் திருநாட்டில் அயோத்தி மாநகரில் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகப் பெருவிழா கண்ட, ஸ்ரீ இராமர் கோவில் திருப்பணிக்கு அனுப்பும் பொருட்டு, வரலாற்று சிறப்பு மிக்க இலங்கையின் நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய கர்ப்பக்கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட புராதன கருங்கல் கொழும்புக்கு எடுத்து வரப்பட்டது. நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, குறித்த புனித கருங்கல்லை, பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் அவர்கள் நுவரெலியாவில் இருந்து கொழும்புக்கு எடுத்து வந்து, வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு. பெரியசாமி சுந்தரலிங்கம் மற்றும் அறங்காவலர் சபை உறுப்பினர்களிடம் கையளித்தார். திரு. ஏகாம்பரம் முத்துக்கிருஷ்ணன் அவர்களின் எண்ணக்கருவினால் ஆரம்பிக்கப்பட்ட திருப்பணி ஊடாக குறித்த புனித கருங்கல்லானது, வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஓரிரு மாதங்கள் வைத்துப் பூஜிக்கப்பட்டது.

கொழும்பு மாநகரில் வாழும் இந்துக்கள் இந்த கருங்கல்லை வணங்கி ஸ்ரீ இராமபிரானின் அருளைப் பெற்றுக்கொண்டதுடன், அதன் பின்னர் வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு. பெரியசாமி சுந்தரலிங்கம் தலைமையிலான அறங்காவலர் சபை குறித்த புனித கருங்கல்லை இந்திய தூதரகம் ஊடாக இந்திய நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்திருந்தது. 

இவ்வாறு பூஜிக்கப்பட்ட புனித கல் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் மிலிந்த மொரகொட அவர்களால் மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியில் ஸ்ரீ இராமர் கோவில் கட்டுவதற்காக ‘ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா’ என்னும் அறக்கட்டளை அமைக்கப்பட்டதுடன், அந்த அறக்கட்டளை மூலம் அயோத்தி மாநகரில் 161 அடி உயரத்தில் 5 கோபுரங்களுடன் கூடிய மிகப் பிரமாண்டமான இராமர் கோவில் 3 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

இந்திய உத்தர பிரதேசத்தில் தற்போதைய அயோத்தி மாவட்டம் அயோத்தி மாநகர் அமைந்துள்ள இடமே இராமபிரான் அவதரித்த அயோத்தி மாநகர் ஆகும். 

பண்டைய கோசல நாட்டின் தலைநகரமான அயோத்தி மாநகரம் எழில் நிறைந்த சரயு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் கிட்டத்தட்ட 500 வருடங்களாக சர்ச்சைக்கு உரிய இடமாக அயோத்தி விளங்கியதுடன், அதற்குக் காரணமாக பாபர் மசூதியும், இராமர் கோவிலும் விளங்கின. அயோத்தி நகரை தலைநகராகக் கொண்டு இராமர் ‘கோசல’ நாட்டை ஆட்சி செய்தார் என்பது வால்மீகி இராமாயண வரலாறு ஆகும்.

மயூரபதி ஆலயத்தில் இருந்து அயோத்தி இராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக திருப்பணி செய்யப்பட்ட சீதையம்மன் சிலை, தவிர்க்க முடியாத காரணத்தால் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்பதுடன், இந்த சீதையம்மன் சிலையே நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாக நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா தொடர்பான விடயங்களை அறிவிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவுக்காக இந்தியாவின் உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊடாகப் பாயும் சரயு ஆற்றில் இருந்து புனித நீர் 25 லீற்றர் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஆற்றைப் பற்றி இராமாயணம் போன்ற இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தி நகரம் சரயு ஆற்றுக் கரையில் அமைந்துள்ளமை சிறப்பம்சம் ஆகும்.

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில் 19ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்து சிறப்பக்கவுள்ளார். மனித நேயத் தலைவர், ஆன்மிக குரு, அமைதித் தூதுவர் மற்றும் வாழும் கலை பயிற்சியின் நிறுவுனர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கைக்கு தனி விமானம் ஊடாக வருகைதரவுள்ளார். குருஜியுடன் கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான பக்தர்களும் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர். 

மேலும், பேராசிரியர் கலாநிதி இராம சீனிவாசன், ஸ்ரீ முகேஷ் குமார் மேஸ்வரன் (செயலாளர், சுற்றுலாத்துறை அமைச்சு, உத்தரப்பிரதேசம்), ஸ்ரீ சந்தோஷ் குமார் சர்மா (ஆணையாளர், அயோத்தி நகர சபை) உட்பட வெளிநாட்டு பிரதிநிதிகள் பலர் வருகைதரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்துக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படும் திருப்பதியில் இருந்து, நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக 5000 லட்டுகள் இந்திய கலாசார மையம் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக திருப்பதி வெங்கடாசலபதி மற்றும் அருள்மிகு பத்மாவதி தாயார் ஆகியோரின் அருள் பக்தர்களுக்கு கிடைக்கிறது. விஷ்ணுவின் அவதாரமான இராமரின் மனைவியாக சீதையை இராமாயணம் சித்திரிப்பதுடன், சீதையம்மன் லட்சுமியின் அவதாரமாக வணங்கப்படுகிறார்.

நேபாளத்தின் ஜனக்பூர் நகரத்தில் புகழ்பெற்ற ஜானகி கோயில் (சீதை கோயில்) அமைந்துள்ளது. நேபாளத்தின் ஆன்மிகம் மற்றும் பண்பாட்டுச் சுற்றுலாத் தலமாகவும் சீதையின் பிறப்பிடமாகவும் உள்ள ஜனக்பூர் நகரத்தில் இருந்து கும்பாபிஷேகப் பெருவிழா காணும் நுவரெலியா சீதையம்மனுக்கு சீர்வரிசை வருவது இலங்கை - இந்திய - நேபாள நாடுகளின் கலாசார பெருமையை பறைசாற்றுகிறது.

சித்திரை மாதத்தில் தெய்வீக அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. ஸ்ரீராமர் அவதாரம் நிகழ்ந்தது சித்திரை மாதத்தில்தான். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமி தினத்தன்று அன்னை ஜானகி உலகத்துக்கு தன்னை வெளிப்படுத்திக்கொண்ட நாள் ‘சீதா நவமி’ என்று அழைக்கப்படுகிறது. அரசர் ஜனகரின் தேர்க்காலில் கிடைத்த பெட்டியில் இருந்ததால், ஜனகனின் மகள் ஜானகி என்ற பெயரைப் பெற்ற சீதை கண்டெடுக்கப்பட்ட நாள் ‘ஜானகி ஜெயந்தி’ என்றும் அழைக்கப்படுகிறது. 

ஜானகி ஜெயந்தி அல்லது சீதா நவமி நாளில், திருமணமான பெண்கள் விரதம் அனுசரித்து அன்னை சீதையை வழிபட்டு, அன்னை சீதையின் அருளால் தங்கள் மாங்கல்யத்தை பலப்படுத்துவார்கள். இவ்வளவு சிறப்புமிக்க நன்னாளான எதிர்வரும் 17.05.2024 வெள்ளிக்கிழமை காலை மயூரபதி ஆலயத்தில் இருந்து தீர்த்த ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளமை தெய்வ சித்தமே. ஆகவே இனிவரும் காலங்களில் நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை சீதா நவமி நாளில் கொண்டாட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் அனைவரையும் கும்பாபிஷேகப் பெருவிழாவில் கலந்துகொண்டு அருள் பெறுமாறு அழைக்கிறோம்!

புறநானூறு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியம் ஆகும். இதில் இராவணன் சீதையை வலிந்து கொண்டு சென்றமை தொடர்பில் 378ஆம் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல்,

விரற்செறி மரபின செவித்தொடக்குநரும்,

செவித்தொடர் மரபின விரற் செறிக்குநரும்,

அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,

மிடற்கு அமை மரபின அரைக்கு யாக்குநரும்,

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை,

வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை,

நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்,

செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்தாங்கு (அணிந்துகொண்டனர்) – புறநானூறு 378

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைகாசி விசாகத்தின் மகிமை 

2024-05-22 14:20:23
news-image

வைகாசி விசாகத்தின் மகத்துவங்கள்

2024-05-22 14:02:32
news-image

மடவல, நலந்தன்ன மலையில் சுடலை மாடன்...

2024-05-16 15:15:32
news-image

நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலய...

2024-05-12 09:35:40
news-image

புரட்சிக்கவிஞர் பாரதிதாச‌னின் பிறந்தநாளை 'உலகத் தமிழ்...

2024-04-27 19:39:28
news-image

மதுரை சித்திரை திருவிழா 2024 -...

2024-04-24 17:24:26
news-image

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும்...

2024-04-21 10:26:04
news-image

வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளத்தில் நாகர் கால...

2024-04-18 10:23:08
news-image

'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள் 

2024-04-11 14:47:43
news-image

திருக்கோணேஸ்வரத்தில் சாமி தூக்கிய சுற்றுலா பயணிகள்...

2024-04-06 11:06:59
news-image

சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்

2024-03-28 16:01:41
news-image

நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய பங்குனி...

2024-03-19 16:13:26