வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுழற்சி முறையில் இன்று 32 ஆவது நாளாகவும் தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையான உணவு தவிர்ப்புப் போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து கைவிடப்பட்டதுடன், கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவர்கள் மீண்டும் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து சாதகமான பதில் வழங்கும் பட்சத்தில் மட்டுமே தமது போராட்டத்தை நிறுத்துவதாகவும், அதுவரை தமது உறவுகளைத் தேடிய போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் செயற்பாட்டில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் செயன்முறையும் நடைபெற்று வருகிறது.