"பனுவலும் பகிர்வும்" கருத்தாடல் நிகழ்வு

10 May, 2024 | 06:26 PM
image

‘தமிழ்’ தமிழியல் ஆய்வகம் மாதந்தோறும் குறித்ததொரு தொனிப்பொருளில் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. அந்த வகையில், உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி ‘பனுவலும் பகிர்வும்’ எனும் பொருண்மையில் கருத்தாடல் நிகழ்வொன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

வானதி காண்டீபன் தலைமையேற்று இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்தியிருந்தார். இக்கருத்துப் பகிர்வு மூன்று நூல்களை முன்னிறுத்தி நடைபெற்றது.

கி.அரங்கனின் ‘நோம் சோம்ஸ்கி : நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம்’ என்ற நூலின் வாசிப்பு அனுபவங்களை பாலரஞ்ஜனி காண்டீபனும், ஆன் ஃப்ராங்கின் ‘ஓர் இளம் பெண்ணின் நாட்குறிப்பு’ என்ற நூலின் வாசிப்புப் பகிர்வை அம்பிகை போர்மனும், கோ. நடேசய்யரின் ‘இந்தியா – இலங்கை ஒப்பந்தம்’ பற்றிய பகிர்வினை மல்லிகைப்பூ சந்தி திலகரும் முன்வைத்திருந்தனர்.

வானதி மதுரையில், உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு நூல்கள் வழியே நமது சிந்தனைக்கான களங்களைத் திறந்துவிடுவதும், மனித வாழ்வு சார்ந்த பல்பரிமான மதிப்பீடுகள் நோக்கிய மெய்யியல் விசாரணைக்கான புள்ளிகளை சமூக அறிவு மட்டங்களில் உருவாக்குவதும் இவ்வாறான நிகழ்ச்சிகளின் எதிர்பார்க்கை என்பதை தெளிவுறுத்தியிருந்தார்.

பால ரஞ்ஜனி மொழியியல் சார்ந்த நூலைப் பற்றி பகிர்கையில், நோம் சோம்ஸ்கி என்பவர் யார்? அவரது முக்கியத்துவம் என்ன? இந்நூலாசிரியர் அரங்கனுக்கும் மொழியியலுக்கும் இடையிலான தொடர்பு யாது? சோம்ஸ்கியை அரங்கன் கண்டடைந்த வரலாற்றுத் தடங்கள், கருத்துநிலை, அரசியல் தொடர்ச்சி....... முதலான விடயங்களை முன்வைத்து உரையாற்றினார்.

மேலும் அவர், இந்த நூலிலுள்ள விடயங்களான சோம்ஸ்கியும் மொழியியலும், சோம்ஸ்கியும் உளவியலும், சோம்ஸ்கியும் தத்துவமும், சோம்ஸ்கியும் அரசியலும் உள்ளிட்ட நான்கு கூறுகளின் விரிவாக்கத்தை எடுத்துரைத்ததோடு, மொழியியல் வரலாற்றில் சோம்ஸ்கியின் காத்திரமான பங்களிப்பானது நவீன மொழியியல் சிந்தனை விரிவாக்கத்துக்கு வித்திட்டமை பற்றியும் விரித்துரைத்தார்.

அவரை தொடர்ந்து, ‘ஒரு இளம்பெண்ணின் நாட்குறிப்பு’ நூலை முன்வைத்து அம்பிகை போர்மன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். 

ஆன்ஃபிராங் பற்றியும், நூல் எழுதப்பட்ட பின்னணி பற்றியும் அவர் எடுத்துரைத்ததோடு, பல்வேறு மொழிகளில் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டதன் மூலம் இந்த நூலின் தேவைப்பாட்டின் முக்கியத்துவத்தையும் விரிவாகப் பேசியிருந்தார். 

பதின்மூன்று வயது சிறுமிக்கு ஏற்பட்ட நெருக்கடி, போரியல் அவலம், துன்பம், இழப்பு யாவற்றையும் நமது போரியல் வாழ்வனுபவத்தின் ஊடாக கடத்தியிருந்த பாங்கு உண்மையில் மிகவும் சிறப்பாக இருந்தது.

இரண்டாம் உலகப்போர், ஈழப்போர் அந்தப் போர்க்கால நீட்சி மனிதப்பாடுகளில் ஏற்படுத்திய வலிகள், இழப்புகள், மனித விழுமியங்கள், விடுதலை உணர்வில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியெல்லாம் பேசப்பட்டன.

பதின்மூன்று வயது யூதச் சிறுமி எழுதிய நாட்குறிப்புகள் வரலாற்றில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகியுள்ளது. இதுபோல் நம் மத்தியிலும் பல்வேறு ஆவணங்கள், பதிவுகள் நோக்கிய கவனக்குவிப்பின் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆன் தனது பதினைந்தாவது வயதில் மரணமடைந்தபோதும் தனது எழுத்தின் வழியே உலகெங்கும் இன்றும் வாழ்ந்துகொண்டேயிருக்கிறாள். நூலை வாசிக்கையில், அந்தச் சிறுமியின் சொற்களில் அவளது ஆறாத மனத்தவிப்பை, வாழ்தலின் ஏக்கத்தை உணரமுடிகிறது. இந்தப் புரிதலை, உணர்வை, அனுபவத்தை நமக்குக் கடத்தும் வாசிப்பு, ஆற்றுகைசார் புது அனுபவமாகக் காணப்பட்டது. 

அம்பிகையின் வாசிப்பாற்றல் ஆற்றுகையின் உள்ளீடுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

அடுத்து, கோ.நடேசய்யர் எழுதிய ‘இந்தியா – இலங்கை ஒப்பந்தம்’ (பதிப்பாசிரியர் பெருமாள் சரவணகுமார்) நூல் குறித்து மல்லியப்புசந்தி திலகர் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

1941இல் வெளிவந்த இந்நூலை பெருமாள் சரவணகுமார் பெருமுயற்சியுடன் மறுபதிப்புச் செய்து 2022இல் வெளிக்கொணர்ந்துள்ளார். 

இந்நூலின் முக்கியத்துவம் என்ன? சமகாலத்தில் இந்த நூலுக்குரிய பொருத்தப்பாடு எத்தகையது? இந்நூலின் தொடர்ச்சியாக இன்னொரு நூலை எழுத வேண்டியதன் அவசியம் என்ன? போன்ற பல்வேறு கேள்விகளையும் முன்னிறுத்தி, புதிய பொருள் கோடலுக்கான சமூக முக்கியத்துவம் எவ்வாறுள்ளது என்பது பற்றியும் அரசியல் சிந்தனையையும் செயற்பாட்டுக்கான அரசியலையும் திலகர் முன்மொழிந்தார்.

பதிப்புரையில் இருந்து சில மேற்கோள்கள் இவரால் எடுத்துக்காட்டப்பட்டன. 

“ஆதிக்கம் செலுத்தும் சிங்கள அமைச்சு தனது சமநிலையை இழந்துள்ளதுடன் இலங்கையின் சட்டப் புத்கதம், இந்திய – விரோத சட்டமிடபற்றுபவர்களால் களங்கப்பட்டுள்ளது. இந்திய விரோதசக்திகள் அனைத்தும் அரசியல் வாழ்வின் உயிர்களைத் தின்றுகொண்டிருக்கும் புற்றுநோய் போன்றது....” (கோ. நடேசய்யர் - 1941) இக்கூற்று இன்றைக்கும் பொருந்துகிறது.

சமகாலத்தில் மலையகத் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்கும்போது இந்நூல் கவனிப்புக்குரியதாக மாறுகிறது. இந்திய அரசு, இலங்கை அரசு உள்ளிட்ட அதிகாரவர்க்க சக்திகளின் பொறுப்புக்கூறல், மலையகத் தமிழர்களின் தேசியத்துவத்தை அங்கீகரித்தல் போன்ற உயரிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து சிந்திப்பதற்கும் செயலாற்றுவதற்கும் உரிய களங்களை இந்நூல் திறந்துவிடுகிறது என்பதை திலகர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மூன்று பனுவல்களையும் முன்வைத்து மேற்கிளம்பிய சிந்தனைகள் யாவும் சமூக சிந்தனைக்கும் செயற்பாட்டுக்கும் உரிய ஆற்றுப்படுத்தலுக்கான தருணங்களை உருவாக்கிவிட்டது.

வெறுமனே புத்தக வாசிப்பு, நயத்தல் எனும் நிலைகளைக் கடந்து, செயற்பாட்டுக்கான, சிந்தனை விரிவுக்கான, பொருத்தமான வாசிப்புத் தருணங்களை இந்நிகழ்ச்சி உருவாக்கியுள்ளது என்பது உண்மை.

‘தமிழி’ உருவாக்கியுள்ள இந்த வாசிப்பு புறச்சிந்தனைக்கும் அரசியல் உணர்வுக்கும் மனித விடுதலைக்கும் உரிய கருத்தியல் சேர்மானமாக, கருத்து நிலைத் திரட்சியாக மடைமாற்றம் கண்டு வந்ததை உணர முடிந்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் இன்னும் தமிழுக்கு வளம் சேர்க்கட்டும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32