சிவலிங்கம் சிவகுமாரன்
உழைக்கும் வர்க்கத்தினரின் பெருமைகளையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் பேசும் மே தினங்கள் இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்டு பல தசாப்தங்களாகின்றன. தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து வந்த பாரம்பரிய தொழிற்சங்கங்கள் அனைத்துமே அரசியல் மயமாகி விட்ட நிலையில் இடதுசாரி அமைப்புகள் கூட இப்போது மே தின மேடைகளில் அரசியலையே பேசி வருகின்றன. அவ்வாறானதொரு சூழலுக்கு அனைத்துத் தரப்பினரையும் தள்ளி விட்டுள்ளன இலங்கை நாட்டின் அரசியல் போக்குகள்.
இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் இடம்பெறும் என்ற எதிர்ப்பார்ப்பில் நாட்டு மக்களும் தேசிய கட்சிகளும் தமது பிரசாரத்தை எப்போது எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனையிலிருந்த போது அதற்கு களம் அமைத்துக்கொடுத்துள்ளன 2024 ஆம் ஆண்டு மே தின மேடைகள்.
தலைநகர் மற்றும் மலையகம் உட்பட நாடெங்கினும் மே தின நிகழ்வுகள் இடம்பெற்றாலும் நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்ற இரண்டு மே தின நிகழ்வுகள் மலையக பெருந்தோட்ட மக்களை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகளாகவே மாறி விட்டிருந்தன.
இலங்கையில் உழைக்கும் வர்க்கத்தினர் பல்வேறு தொழில்களில் தம்மை ஈடுபடுத்தி வந்தாலும், தேசிய வருமானத்துக்கு பங்களிப்பு செய்யும் பிரதான தொழிற்படையினராக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பார்க்கப்படுகின்றனர்.
இந்த நாட்டில் இருநூற்றாண்டு காலமாக உழைக்கும் வர்க்கத்தினராக மாத்திரம் விளங்கி வரும் மலையக பெருந்தோட்ட மக்களின் நலன்கள் குறித்தும் அவர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் ,பெருமைகள் பற்றி மலையக தொழிற்சங்கங்களே வாய் திறப்பதில்லை.
மே தின நிகழ்வுகளில் தேசிய கட்சிகளின் தலைவர்களையோ அல்லது தாம் சார்ந்திருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளையோ கலந்து கொள்ள வைப்பது அநேகமாக மலையக பிரதேசங்களில் மாத்திரம் இடம்பெற்று வரும் சம்பவங்களாகும்.
அந்த வகையில் கொட்டகலையில் மே தினத்தை நடத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், தலவாக்கலையில் மே தின நிகழ்வை நடத்திய தொழிலாளர் தேசிய சங்கம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும் அழைத்திருந்தன.
நாட்டின் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இவர்கள் இருவரும் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி அல்லது கூட்டணியின் மே தின நிகழ்வுகள் அன்றைய தினம் தலை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் கூட, அதற்கு வெளியே அவர்கள் பங்கு கொண்ட மேற்படி இரு நிகழ்வுகள் நோக்கத்தக்கன.
அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் மாத்திரம் இ.தொ.காவானது ஜனாதிபதியை தமது நிகழ்வுக்கு அழைத்திருக்கவில்லை. தொழிலாளர் வேதன விடயத்தில் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இ.தொ.கா, அதற்கான தீர்வை ஜனாதிபதியின் வாயால் கூற வைப்பதற்கான தந்திரோபாயத்தை கையாண்டது. அதற்கு மே தின மேடையைப் பயன்படுத்திக்கொண்டது. அதன்படி ஏப்ரல் 30 ஆம் திகதி தொழிலாளர்களுக்கான நாட்சம்பளம் 1700 ரூபாய் பற்றிய வர்த்தமானி அறிவித்தலை ரணில் தொழிலாளர்கள் மத்தியில் கூறினார். தற்போது அது வெறும் வர்த்தமானி அறிவித்தலாக மாத்திரம் மாறிவிட்டிருப்பது வேறு கதை.
எனினும் கொட்டகலை மே தின மேடையை தனது பிரசார மேடையாக கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார் ரணில். தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 1700 வழங்கப்படும் என்று கூறியதோடு தொழிலாளர்களின் தியாகங்களையும் ,அர்ப்பணிப்புகளையும் கொரோனா காலத்தோடு தொடர்புபடுத்தி வர்ணித்தார். தனது ஆட்சியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என்று கூறினார். அப்படியானால் அவர் மீண்டும் ஜனாதிபதியாகும் வரை இப்போது தொழிலாளர்கள் முன் உள்ள எந்த விடயங்களும் சாத்தியமாகாது என்று தான் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி கதைத்த அவர் அந்த உரிமைகள் என்னவென்பதை விலாவரியாகக் கூறவில்லை. மிக முக்கியமாக நிலவுரிமைகள் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. தொழிலாளர்களின் வேதனத்தை தர மறுக்கும் கம்பனிகளைப் பற்றி ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. கல்வியை முன்னேற்ற வேண்டியுள்ளது என கூறிய அவர் கணித விஞ்ஞான பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர் தேவைகள் பற்றி மாத்திரமே கதைத்தார். மொத்தத்தில் தானே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்றும் இ.தொ.கா ஊடாக தனக்கு ஆதரவளித்தால் மாத்திரமே எல்லாமே நடக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி விடை பெற்றார் ஜனாதிபதி. இனி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டாலும் கூட , நுவரெலியா மாவட்டத்துக்கு பிரசார நடவடிக்கைகளுக்கு ரணில் வர வேண்டிய அவசியமிருக்காது என்று கூறும் அளவுக்கு தனது தேர்தல் பரப்புரைகளை அவர் அங்கு செய்திருந்தார்.
அதே போன்று தொழிலாளர் தேசிய சங்கம் ஏற்பாடு செய்திருந்த தலவாக்கலை கூட்டத்தில் பங்கு கொள்ள வருகை தந்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்குறுதிகள் மாத்திரமே கொடுக்கக் கூடியதாக இருந்தது. தனது தந்தை ஆர்.பிரேமதாசவே மலையக மக்களுக்கு பிரஜா உரிமை பெற்றுக்கொடுத்தார் என அவர் அழுத்தி கூறியதற்கு காரணங்களிலிருந்தன. அக்காலகட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தரும் அமைப்பாக இருந்தது. பிரஜா உரிமை என்ற விடயத்தை முன்வைத்தே பிரேமதாசவும் இ.தொ.காவின் ஆதரவை பெற்றார். அதைத் தொடர்ந்தே மலையக மக்கள் தொடர்ச்சியாக 17 வருடங்கள் ஐ.தே.கவுக்கு ஆதரவளித்து வந்தனர். ஐ.தே.கவின் யானை சின்னம் மலையக மக்களின் மனதில் நிரந்தரமாக பதிந்து விட்டிருந்தது.
தனது தந்தையே மலையக மக்களுக்கு பிரஜா உரிமை கொடுத்தார் என சஜித் கூறினாலும் அப்போது ஆர்.பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தார். எனவே கட்சியே அந்த வரப்பிரசாதத்தை மலையக மக்களுக்கு வழங்கியது. இந்த விடயத்துக்கு சஜித் சொந்தம் கொண்டாட முடியுமா என்பது மக்கள் முன் உள்ள கேள்வி.
மேலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பற்றி சஜித் பேசிய விடயங்கள் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பது முக்கிய விடயம். தான் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றுவேன் என அவர் தலவாக்கலை மேடையில் கூறினார். இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அவர் அவ்வாறே கூறி வருகின்றார். ஆனால் அதற்கான பொறிமுறைகள் என்ன. என்பது குறித்து அவரும் அவர் சார்ந்து நிற்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் இது வரையில் கூறவில்லை.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த நல்லாட்சி காலத்தில் சஜித் பிரேமதாச தேசிய வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சராக இருந்தார். அக்காலத்திலேயே ரணில் தொழிலாளர்களின் காணி உரிமை பற்றி வாய்திறக்கவில்லை. தொழிலாளர்களுக்கு காணிகளை பிரித்து கொடுப்பது பற்றி சஜித்தும் பேசவில்லை. தேசிய வீடமைப்புத் திட்டங்களுக்குள் மலையக பெருந்தோட்ட மக்களையும் உள்ளடக்க வேண்டும் என அந்த துறை சார்ந்த அமைச்சராக விளங்கிய சஜித் எங்கேயும் எவ்விடத்திலும் பேசியிருக்கவில்லை.
தற்போது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி தலவாக்கலையில் கண்ணீர் வடிக்கும் சஜித், சமூர்த்தி அமைச்சராக விளங்கிய போது எத்தனை புதிய தொழிலாளர் குடும்பங்களுக்கு சமூர்த்தி நிவாரணம் கிடைக்க காரணகர்த்தாவாக இருந்தார்?
அதிகாரங்கள் இருக்கும் போது தொழிலாளர்களின் நலன்கள் பற்றி ஒன்றுமே செய்யாத அரசியல்வாதிகளை பின்பு எந்த சந்தர்ப்பத்தில் நம்புவது? மே தின நிகழ்வுகளில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவும் வெவ்வேறு பாத்திரங்களில் பங்கு கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இருவருமே அரசியல்வாதிகள் என்ற ஆடையை அணிந்தவர்கள் தாம் என்பதே உண்மை.
அதே போன்று அவர்களை அழைத்து வந்தவர்களும் சராசரி அரசியல்வாதிகள் தான். நுவரெலியாவுக்கு வெளியே தலைநகரில் தமது கட்சி ஏற்பாடு செய்திருந்த மே தின நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தேர்தல் பிரசாங்களிலேயே ஈடுபட்டனர். எனினும் பல்வேறு காரணங்களால் 2018 ஆம் ஆண்டுக்குப்பிறகு இம்முறையே மே தினம் களை கட்டியது. அது நாட்டில் வாழ்ந்து வரும் உழைக்கும் வர்க்கத்தினரை நலன்களையோ அல்லது அவர்களின் பிரச்சினைகள் பற்றியோ பேசும் மேதினமாக இடம்பெறவில்லை. இவ்வருடம் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்காக கட்சிகள் முன்னெடுத்த முதலாவது பிரசார கூட்டங்களாகவே இருந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM