வெற்றிக் கனவு கலைந்துபோன கவலையுடன் பி.எஸ்.ஜி.,இலிருந்து விடைபெற்றார் எம்பாப்பே

09 May, 2024 | 02:02 PM
image

(நெவில் அன்தனி)

வெற்றிக் கனவு கலைந்துபோன கவலையுடன் பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகத்திலிருந்து விடைபெற்றார் நட்சத்திர முன்கள கால்பந்தாட்ட வீரர் கிலியான் எம்பாப்பே.

ஐரோப்பிய சம்பியன் கழகங்களுக்கு இடையில் நடைபெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகம் சார்பாக எம்பாப்பே விளையாடிவந்தார்.

இந்த வருடம் பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகத்திலிருந்து விடைபெறும் எம்பாப்பே, பெரும்பாலும் அடுத்த கால்பந்தாட்ட பருவகாலத்தில் ரியல் மெட்றிட் கழகத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிஸ் சென் ஜேர்மெய்ன் கழகத்துக்காக தனது கடைசி பருவகாலத்தில் விளையாடிவந்த எம்பாப்பே, எல்லோரையும் போன்று சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டும் என்ற கனவில் திளைத்திருந்திருக்கக்கூடும்.

ஆனால், பார்க் டெஸ் பிறின்சஸ் அரங்கில் ஜெர்மனியின் டோர்ட்மண்ட் கழகத்துடனான 2ஆம் கட்ட அரை இறுதிப் போட்டியில் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் நேற்றுமுன்தினம் தோல்வி அடைந்ததால் அவரது வெற்றிக்கனவு கலைந்ததுடன் ஆசையும் நிராசையானது.

முதல் கட்ட அரை இறுதிப் போட்டியிலும் 1 - 0 என வெற்றிபெற்றிருந்த டோர்ட்மண்ட் கழகம் ஒட்டுமொத்தமாக 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பெரிஸ் சென் ஜெர்மெய்ன் கழகத்திற்காக விளையாடும் தனது கடைசி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் பருவகாலத்தில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் டோர்ட்மண்ட் கழகத்துடனான போட்டியில் எம்பாப்பே விளையாடினார்.

அப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் கோல் போடுவதற்கு ஏதுவாக அற்புதமாக பரிமாறப்பட்ட பந்தை எம்பாப்பே தவறவிட்டதால் அவரது எதிர்பார்ப்பும் தவறிப்போனது.

இரண்டாம் கட்ட அரை இறுதிப் போட்டியில் டோர்ட்மண்ட் சார்பாக மெட்ஸ் ஹமெல்ஸ் 50ஆவது நிமிடத்தில் கோல் போட்டிருந்தார்.

அதேவேளை, பெரிஸ் சென் ஜேர்மெய்ன்ஸ் கழகத்திற்கு கிடைத்த பல கோல் போடும் வாய்ப்புகள் தடுக்கப்பட்டன அல்லது தவறிப்போயின.

இதனை அடுத்து இந்தத் தோல்விக்கு தானே பொறுப்பு என  எம்பாப்பே  ஒப்புக்கொண்டார்.

பொதுவாக அவரது அணி வெற்றிபெறும்போதெல்லாம் அந்த வெற்றிக்கான புகழ் எம்பாப்பேவை சாருகிறது. ஆனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டோர்ட்மண்ட் கழகத்துடனான தோல்விக்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

டோர்ட்மண்ட் கழகத்துடனான தோல்விக்கு கோல் போடும் வாய்ப்புகள் தவறவிடப்பட்டமையே காரணம் என பிரான்ஸ் தேசிய வீரர் எம்பாப்பே தெரிவித்தார்.

'அதிசிறந்த ஆற்றல் மூலம் என்னால் முடிந்தவரை எனது அணிக்கு உதவ முயற்சித்தேன். ஆனால், நான் போதுமான அளவு சாதிக்கவில்லை' என போட்டி முடிவில் எம்பாப்பே கவலை தோய்ந்த முகத்துடன் தெரிவித்தார்.

'போட்டிகளின்போது திறமை பற்றி நாங்கள் பேசும்போது, இந்தப் போட்டியில் என்னை எல்லோரும் நம்பினார்கள் என நினைக்கிறேன். கோல்களைப் போட்டு போட்டியைத் தீர்மானிக்க வேண்டியவனாக இருந்தேன். ஆனால், அது பலிக்கவில்லை. எல்லாம் நலமாக அமையும் போது பாராட்டுதல்களைப் பெறுகிறேன். அப்படி நடைபெறாவிட்டால் அதற்கான பொறுப்பை ஏற்றுத்தான் ஆகவேண்டும். அது ஒன்றும் பிரச்சினை இல்லை.

'அந்த அணி எம்மைவிட சிறந்ததா இல்லையா என்பதை நாங்கள் எடைபோட மாட்டோம். எனது பணிவான கருத்து என்னவென்றால், அவர்கள்  எமது  கோல் எல்லையில் அற்புதமாக விளையாடினார்கள். எமது கோல் எல்லைக்குள் ஓரிரு தடவை ஆக்கிரமித்த அவர்கள் அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கோல் போட்டனர். நாங்களும் அவர்களது கோல் எல்லையை அவ்வப்போது ஆக்கிரமித்தோம். ஆனால் எங்களால் கோல் போட முடியவில்லை' என்றார் எம்பாப்பே.

'துரதிர்ஷ்டம் பற்றி நான்  பேச   விரும்பவில்லை. நீங்கள் சிறப்பாக விளையாடும்போது பந்து கோல் கம்பத்தில் பட்டுப் போகாது. அது கோலினுள் தான் புகும். ஆனால், எமது முன்கள வீரர்கள்   இன்று சிறப்பாக விளையாடவில்லை' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரண்டாம் கட்டப் போட்டியில் 70 வீதம் பந்தை தன்னகத்தே கொண்டிருந்த பெரிஸ் சென் ஜேர்மெயன் கழகம், கோலை நோக்கி 30 தடவைகள் முயற்சித்தபோதிலும் இறுதியில் அவ்வணிக்கும் எம்பாப்பேவுக்கும் தோல்வியே மிஞ்சியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12