பிரான்ஸை சென்றடைந்தது ஒலிம்பிக் சுடர்

09 May, 2024 | 01:55 PM
image

(ஆர்.சேதுராமன்)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் சுடர் நேற்று (08) பிரான்ஸை சென்றடைந்தது.

இப்போட்டிகளுக்கான ஒலிம்பிக் சுடர், புராதன கிரேக்க நகரான ஒலிம்பியாவில் ஏப்ரல் 16ஆம் திகதி கடந்த பாரம்பரிய முறையில் ஏற்றப்பட்டிருந்தது.

பின்னர், சுமார் 5,000 கிலோமீற்றர் தொடர் ஓட்டத்தின் மூலம் கிறீஸின் அக்ரோபோலிஸ் நகருக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் சுடர், அங்கிருந்து 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட 'பேலம்' எனும் பாய்மரக் கப்பல் மூலம் பிரான்ஸை நோக்கிய பயணத்தை  கடந்த 28ஆம் திகதி ஆரம்பித்தது. லாந்தர் ஒன்றில் வைக்கப்பட்டு ஒலிம்பிக் சுடர் கொண்டு செல்லப்பட்டது.

இச்சுடரை கொண்டு சென்ற 'பேலம்' கப்பல், பிரான்ஸின் தென் பகுதி நகரான மேர்செய்லை நேற்று சென்றடைந்தது. இச்சுடரை வரவேற்பதற்கு விமர்சையான ஏற்பாடுகள் செய்ற்பட்டிருந்தன. 1,024 படகுகள் இக்கப்பலை வரவேற்றன.

சுமார் 150,000 பேர் இந்நிகழ்வை பார்வையிட வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மேர்செய்ல் நகரிலிருந்து சுமார் 12,000 கிலோமீற்றர் தூரம் தொடர் ஓட்டம் மூலம் எடுத்துச் செல்லப்படவுள்ள ஒலிம்பிக் சுடர் ஜூலை 26ஆம் திகதி பாரிஸ் 2024 ஆரம்ப விழா இடத்தை சென்றடையும்.

33ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்