மறுசீரமைப்புக்களில் ஏற்படக்கூடிய தடைகள் பொருளாதார மீட்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துமென எச்சரிக்கிறது மத்திய வங்கி

Published By: Vishnu

08 May, 2024 | 01:03 AM
image

(நா.தனுஜா)

நாட்டின் பொருளாதாரம் இவ்வாண்டு இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதமாகவும், ஆண்டுக்கான சராசரி பணவீக்கம் 5 சதவீதமாகவும் பதிவாகும் என எதிர்வுகூறியிருக்கும் இலங்கை மத்திய வங்கி, இருப்பினும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு செயன்முறைகளில் ஏற்படக்கூடிய தடைகள் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துமென எச்சரித்துள்ளது.

அதேபோன்று கடந்த ஆண்டு ஊழியர் சேமலாப நிதிய மீதியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பலரும் தமக்குரிய நிதியை மீளப்பெற்றுக்கொண்டமையே காரணமாக அமைந்ததாக சுட்டிக்காட்டியிருக்கும் மத்திய வங்கி, இவ்வருடம் அந்நிதியத்துக்கான பங்களிப்பு மீண்டும் உயர்வடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 80  ஆம் பிரிவின்படி 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை மற்றும் 99 ஆம் பிரிவின்படி கடந்த ஆண்டுக்கான மத்திய வங்கியின் நிதியியல் கூற்றுக்கள் என்பன இரு வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நிலையில், அதன் உள்ளடக்கம் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று செவ்வாய்கிழமை (7) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையில் நாட்டின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

 இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் முகங்கொடுத்த மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவிலான மீட்சியைக் காண்பித்தது. அரசாங்கத்தினாலும், மத்திய வங்கியினாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட வலுவான கொள்கை சீராக்கங்களும், கட்டமைப்பு மறுசீரமைப்புக்களும் பேரண்டப்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதற்குப் பெரிதும் பங்களிப்புச்செய்தன.

அதேபோன்று பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டங்கள் கடந்த ஆண்டு நம்பிக்கைக்குரிய பெறுபேறுகளை தந்திருக்கின்றன. 2022 ஆம் ஆண்டு மிக உயர்வான மட்டத்தில் பதிவான பணவீக்கம், கடந்த ஆண்டின் இறுதியில் ஒற்றை இலக்க மட்டத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து 6 காலாண்டுகளாகப் பதிவான பொருளாதார சுருக்கம் முடிவுக்கு வந்து, 2023 இன் இரண்டாம் அரையாண்டில் பொருளாதார வளர்ச்சி பதிவானது. அரச வரவு, செலவுத்திட்டப் பற்றாக்குறை மற்றும் வெளிநாட்டு நடைமுறைக்கணக்குப் பற்றாக்குறை என்பன சீரடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

2022 இல் மிகமோசமான சரிவைச் சந்தித்த வெளிநாட்டுக்கையிருப்பு 2023 இல் மீளக்கட்டியெழுப்பப்பட்டது. இத்தகைய முன்னேற்றங்களை அடுத்து 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ரூபாவின் பெறுமதி உயர்வடைந்தது. ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தியதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.

 அதேவேளை நாட்டின் பொருளாதாரம் கடந்த ஆண்டு -2.3 சதவீத சுருக்கத்தைப் பதிவுசெய்திருந்ததுடன், இதில் விவசாயத்துறை -2.6 சதவீதமாகவும், கைத்தொழில்துறை -9.2 சதவீதமாகவும், சேவைத்துறை -0.2 சதவீதமாகவும் பங்களிப்புச்செய்திருந்தது. இருப்பினும் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 இல் தொழிலின்மை வீதமானது 4.7 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. மேலும் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் நிதியியல் துறையின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 33.2 ட்ரில்லியன் ரூபாவாகப் பதிவானது.

 இது இவ்வாறிருக்க இவ்வருடம் (2024) உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதமாகவும், ஆண்டுக்கான சராசரி பணவீக்கம் 5 சதவீதமாகவும், வெளிநாட்டு அலுவல்சார் ஒதுக்குகள் 3.4 சதவீதமாகவும் பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி நாணயக்கொள்கை நிலைப்பாடு தொடர்ந்தும் தளர்வாகக் காணப்படும் எனவும், சந்தை வட்டிவீதங்கள் மேலும் இயல்புநிலைக்குத் திரும்பும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது அவதானிப்புக்களை வெளியிட்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் விசேடமாகக் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் வருமாறு:

மறுசீரமைப்புக்கள் தொடர்வது அவசியம்

கடந்த காலங்களிலும் அரசு மற்றும் மத்திய வங்கியினால் நாணய மற்றும் நிதிக்கொள்கை சார்ந்து முன்னெடுக்கப்பட்ட இறுக்கமான மறுசீரமைப்புக்களால் பொருளாதாரம் மீட்சியடைந்திருக்கின்றது. பொருளாதாரத்தை தொடர்ந்து இதே பாதையில் கொண்டுசெல்லவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

குறிப்பாக விலை உறுதிப்பாட்டைப் பேணுவதும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதும், பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவதும் எமது முன்னுரிமைக்குரிய விடயங்களாகக் காணப்படுகின்றன. இருப்பினும் பொருளாதாரத்தின் வலுவான மீட்சியானது இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதிலேயே தங்கியிருக்கின்றது.

இதனுள் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தல் மற்றும் கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பூர்த்திசெய்தல் என்பனவும் உள்ளடங்குகின்றன. இதனைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே கூறுகின்றேன்.

ஊழியர் சேமலாப நிதிய மீதியில் வீழ்ச்சி

அடுத்ததாக ஊழியர் சேமலாப நிதிய மீதியைப் பொறுத்தமட்டில், அவை கடந்த ஆண்டு கணிசமான அளவிலான வீழ்ச்சியைப் பதிவுசெய்திருந்தன. ஏனெனில் அதுவரை காலமும் அந்நிதியை மீளப்பெறாமல் இருந்தவர்கள், கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதனை மீளப்பெற்றனர். ஆகையினால் 2023 இல் இந்நிதியங்களில் நிதி பங்களிப்பை விடவும், நீதி மீளெடுத்தல் உயர்வாகக் காணப்பட்டது. இருப்பினும் இவ்வாண்டு அவற்றில் மீண்டும் நிதி பங்களிப்பு உயர்வடைந்துள்ளது.

கடன்மறுசீரமைப்பு செயன்முறை

 மேலும் கடன்மறுசீரமைப்பு செயன்முறையைப் பொறுத்தமட்டில் உள்நாட்டுக் கடன்மறுசீரமைப்பு முழுமையாகப் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு உத்தியோகபூர்வ கடன்மறுசீரமைப்பு விடயத்தில் ஆரம்பகட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதுடன், இருதரப்புக் கடன்வழங்குனர்களுடனும் தொடர் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதேபோன்று வர்த்தகக் கடன்வழங்குனர்களுடனும் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இவ்விரு தரப்பினருடனும் வெகுவிரைவில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படுமென எதிர்பார்க்கின்றோம். அதனூடாக எதிர்வருங்காலத்தில் நிலையான கடன்மீள்செலுத்துகையை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும்.

இணையவழி கடன்வழங்கல் மற்றும் நிதிமோசடி

அதேபோன்று இணையவழி கடன்வழங்கல் செயற்பாடுகள் அதிகரித்துவருகின்றது. இருப்பினும் தனிப்பட்ட ரீதியிலான கடன்வழங்கலை முறையாகக் கண்காணிக்கமுடியாது. எனவே இவ்வாறான செயன்முறைகளின் ஊடாகக் கடன்பெறுவதைப் பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

அதுமாத்திரமன்றி தமது கடன்மீள்செலுத்துகை ஆற்றலின் அடிப்படையிலேயே அவர்கள் கடன்பெறவேண்டும். அத்தோடு அண்மையகாலங்களில் அதிகரித்துவரும் நிதி மோசடிகள் தொடர்பிலும் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். தமது வங்கிக்கணக்கு இலக்கங்களையோ அல்லது ஓ.ரி.பி இலக்கங்களையோ யாருடனும் பகிர்ந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து மற்றுமொரு...

2025-03-27 12:21:18
news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:39:27
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55
news-image

அம்பாறை ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள...

2025-03-27 11:03:31
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுகிறேன்...

2025-03-27 10:55:22
news-image

நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...

2025-03-27 10:46:51