(நெவில் அன்தனி)
லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் மீள்பிரவேசம் செய்வதற்கு முன்னர் அமெரிக்க விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் ஆர்வத்தை தூண்டும் வகையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை சர்வதேச கிரிக்கெட் பேரவை பயன்படுத்தவுள்ளது.
எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக அரங்கேற்றப்படவுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவில் பிரதான கிரிக்கெட் போட்டி நடைபெறவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் பிரபல்யம் பெற்ற விளையாட்டாகத் திகழ்வது பேஸ் போல் விளையாட்டாகும். எனினும் கடந்த வருடம் நடைபெற்ற அங்குரார்ப்பண மேஜர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் MI New York சம்பியனான பின்னர் அமெரிக்காவல் கிரிக்கெட் பிரபல்யம் அடைந்து வருகிறது.
இந்த வருடம் ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முடிவடைந்த சில தினங்களில் இரண்டாவது மேஜர் லீக் கிரிக்கெட் பருவகாலம் ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் இங்கிலாந்து உட்பட 20 நாடுகள் பங்குபற்றவுள்ளன. ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 20 அணிகள் பங்குபற்றுவது இதுவே முதல் தடவையாகும்.
அமெரிக்காவில் 3 மைதானங்களில் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
ப்ளோரிடா, லவ்டர்ஹில் சென்ட்ரல் ப்ரோவார்ட் ரீஜினல் பார்க் விளையாட்டரங்கு, டெக்சாஸ் க்ராண்ட் ப்ரெய்ரி விளையாட்டரங்கு, நியூ யோர்க, ஈஸ்ட் மேடோ நசவ் கன்ட்றி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய 3 விளையாட்டரங்குகளே ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள அமெரிக்க மைதானங்களாகும்.
நசவ் கன்ட்றி சர்வதேச கிரிக்கட் அரங்கிற்கான புற்தரைகள் அவுஸ்திரேலியாவிலிருந்து கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டது. தூக்கிச் செல்லவதற்கு வசதியாக செவ்வக வடிவில் வெட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்ட புற்தரைகள் நசவ் விளையாட்டரங்கில் மனிதர்களால் நடப்பட்டு மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
138 வருட ஒலிம்பிக் வரலாற்றில் கிரிக்கெட் ஒரே ஒரு முறை ஒலிம்பிக்கில் அரங்கேற்றப்பட்டது.
பாரிஸ் 1900 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலேயே முதன் முதலில் கிரிக்கெட் அறிமுகமானது.
அப் போட்டியில் நான்கு அணிகள் பங்குபற்றுவதாக இருந்தது. ஆனால், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகியன வாபஸ் பெற்றதால் பெரிய பிரித்தானியாவும் பிரான்ஸும் நேரடியாக தங்கப் பதக்கத்துக்காக போட்டியிட்டன. அதில் பெரிய பிரித்தானியா வெற்றபெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. பிரான்ஸுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
அப்போது 'பிரித்தானியரல்லாதவர்கள் மத்தியில் கிரிக்கெட் கேள்விப்படாத ஒன்று' என நவீன ஒலிம்பிக்கின் ஸ்தாபரும் ஞானத்தந்தை என வர்ணிக்கப்பட்டவருமான பாரன் பியரே டி கூபேர்ட்டின் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் கடந்த சில தசாப்தங்களாக உலகளாவிய ரீதியில் கிரிக்கெட் பிரபல்யம் அடைந்து வருவதை அவதானிக்கலாம். குறிப்பாக இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பமான பின்னர் உலகம் முழுவதிலும் கிரிக்கெட் இரசிகர்களின் எண்ணிக்கை கோடி கோடியாக அதிகரித்துச் செல்கிறது.
இற்றைக்கு 147 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த இங்கிலாந்து வர்த்தகக் குழுவினருக்கும் அவுஸ்திரேலியர்களுக்கும் இடையில் அங்குரார்ப்பண டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டபோது, கிரிக்கெட் விளையாட்டு உலகெங்கும் வியாபிக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
படிப்படியாக தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா ஆகிய நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டதுடன் இலங்கை உட்பட 8 நாடுகளில் சுமார் 6 தசாப்பதங்களுக்கு முன்னர் கிரிக்கெட் பிரபல்யம் அடைந்திருந்தது.
ஆனால், இப்போது நிலைமை மாறி 100 நாடுகள் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுகின்றன.
மிக அண்மையில் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான ஆப்கானிஸ்தான் பிரதான நாடுகளுக்கு சவால் விடுக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளதை அவதானிக்கலாம்.
மகளிர் கிரிக்கெட்டும் இன்று வெகுவாக பிரபல்யம் பெற்றுள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து விளையாடியிருந்தது.
மிக அண்மையில் இந்தோனேசியாவின் ரொஹ்மாலியா என்ற வீராங்கனை மொங்கோலியாவுக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில் 3.2 ஓவர்களில் ஓட்டங்ளே கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இருபாலாருக்குமான உலக சாதனையைப் படைத்திருந்தார்.
இவற்றை எல்லாம் நோக்கும் போது அடுத்தடுத்த ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் கிரிக்கெட் பிரபல்யம் அடையும் என்பது உறுதி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM