(நெவில் அன்தனி)
பங்களாதேஷில் செப்டெம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண பிரதான சுற்றில் பங்குபற்றும் தகுதியை இலங்கை பெற்றுக்கொண்டது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி ஸய்யத் விளையாட்டரங்கில் ஞாயற்றுக்கிழமை (05) நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றே உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதிபெற்றது.
விஷ்மி குணவர்தனவின் நிதானமான துடுப்பாட்டம், பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகள் என்பன மகளிர் ரி20 உலகக் கிண்ண வாய்ப்பை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்தன.
இந்த முடிவை அடுத்து உலகக் கிண்ண பிரதான சுற்றில் ஏ குழுவிலும் பி குழுவிலும் இணையப் போகும் அணிகளைத் தீர்மானிக்கும் இலங்கைக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி அபுதாபியில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெறவுள்ளது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவி சமரி அத்தபத்து (21), இளம் வீராங்கனை விஷ்மி குணரட்ன ஆகிய இருவரும் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து 24 ஓட்டங்களைப் பெற்ற ஹர்ஷித்தா சமரவிக்ரமவுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 42 ஓட்டங்களை விஷ்மி குணரட்ன பகிர்ந்தார். (92 - 2 விக்.)
மொத்த எண்ணிக்கை 112 ஓட்டங்களாக இருந்தபோது திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த விஷ்மி குணரட்ன 45 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
மத்திய வரிசையில் ஹாசினி பெரேரா (15), கவிஷா டில்ஹாரி (17) நிலக்ஷிகா சில்வா (18) ஆகியோர் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்க இலங்கை சுமாரான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.
பந்தவீச்சில் ஈஷா ஓஸா 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வைஷ்ணவி மஹேஷ் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. தீர்த்தா சதிஷை முதல் ஓவரிலேயே இனோஷி ப்ரியதர்ஷனி ஆட்டம் இழக்கச் செய்து இலங்கைக்கு நம்பிக்கையைக் கொடுத்தார்.
ஆனால், அணித் தலைவி ஈஷா ஓஸா, குஷி ஷர்மா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து தங்களது அணிக்கு நம்பிக்கை ஊட்டினர்.
குஷி ஷர்மா நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 22 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
15ஆவது ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்த ஐக்கிய அரபு இராச்சியம் அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்து பெரும் அழுத்தத்திற்கு உள்ளானது.
ஈஷா ஓஸாவுடன் ஜோடி சேர்ந்த கவிஷா எகொடகே 3ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் 16 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார்.
மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஈஷா ஓஸா 44 பந்துகளில் 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 66 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து ஹீனா ஹொட்சாந்தனி (2) களம் புகுந்த சற்று நேரத்தில் ஆட்டம் இழந்தார்.
கடைசி 2 ஓவர்களை சமரி அத்தபத்துவும் கவிஷா டில்ஹாரியும் சிறப்பாக வீசி இலங்கையை மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெறச் செய்தனர்.
பந்துவீச்சில் சமரி அத்தபத்து 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இனோஷி ப்ரியதர்ஷனி, சுகந்திகா குமாரி, உதேஷிகா ப்ரபோதனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM