சர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்று (மே 01) உலகளாவிய ரீதியில் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நாட்டில் பல இடங்களில் இன்றைய தினம் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினரின் ஏற்பாட்டில் மே தின கூட்டங்களும் ஊர்வலங்களும் இடம்பெற்று வருகின்றன.
கொட்டகலை
கொட்டகலை பொது விளையாட்டரங்கில் இன்று (01) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில் இ.தொ.கா. கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், கட்சியின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நிதிச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கண்காணிப்புக் குழு பாராளுமன்ற உறுப்பினருமான மருதுபாண்டி ராமேஸ்வரன் போன்றோரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில், தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு - புறக்கோட்டை
கொழும்பு புறக்கோட்டையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார்.
மாத்தறை
மாத்தறையில் இன்று தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணியும் கூட்டமும் இடம்பெற்றது.
இதில் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
வவுனியா
'உழைக்கும் மக்கள் ஒன்றிணைவோம்; நாட்டின் வளங்களை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இன்று (01) காலை வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்துக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம் பஜார் வீதி ஊடாக வவுனியா நகர மண்டபத்தை அடைந்தது. அதன் பின்னர் அங்கு பிரதான மே தினக் கூட்டம் இடம்பெற்றது.
இம்முறை மே தினப் பேரணியில் 'உணவுப் பொருட்கள் எரிபொருட்களின் விலைகளைக் குறை', 'IMF ஆலோசனைகள், நிபந்தனைகளால் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை நாசமாக்காதே', 'வற் (VAT) வரி, மின்சாரம் உள்ளிட்ட கட்டணங்களின் அதிகரிப்பை உடன்குறை', 'அந்நியக் கம்பனிகளுக்கும், பெரு முதலாளிகளுக்கும் வழங்கும் வரிச்சலுகையை உடன் நிறுத்து', 'தேசிய இனங்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறைகளை உடன் நிறுத்து', 'தமிழ், முஸ்லிம், மலையகத் தேசிய இனங்களின் சுயாட்சி உரிமைகளை வழங்கு' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.
இப்பேரணியில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்தனர்.
வவுனியா, குருமன்காடு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதான மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் வவுனியாவில் இன்று எழுச்சியுடன் இடம்பெற்றது.
முன்னதாக வவுனியா பண்டாரவன்னியன் சிலை முன்பாக ஆரம்பமான மே தின ஊர்வலம் அங்கிருந்து குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானம் வரை சென்றது. அங்கு மே தின கூட்டம் இடம்பெற்றது.
முண்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் தவபாலன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன், முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், சட்டத்தரணி க.சுகாஸ் மற்றும் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் 'எங்கள் நிலம் எமக்கு வேண்டும்', 'இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும்', 'வெடுக்குநாறி எங்கள் சொத்து' போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
மானிப்பாய்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு இன்றைய தினம் (01) மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
“அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த தொழிலாளர் தின நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு காலை 9.45 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து தலைமை உரை, விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.
மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சபா குகதாஸ், திரு.கஜதீபன், ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர்கள், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம்
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் "நாட்டைக் கட்டியெழுப்பும்; தீர்வுக்கு ஓரணியில் இனம், மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்துக்காகப் போராடுவோம்" என்னும் கருப்பொருளிலான மே தின கூட்டம் இன்று (01) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் கலந்துகொண்டு இனம், மதம், சாதி, பேதம் இல்லாத புதிய சுதந்திர போராட்டத்துக்காக குரல் கொடுப்போம் எனும் கருப்பொருளில் உரையாற்றினர்.
இதில் தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட பிரதான அமைப்பாளர் இ.சந்திரசேகரம், மதத்தலைவர்கள், மகளிர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள், மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், இணைப்பாளர், தோட்ட தொழிலாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
கட்டுநாயக்க
சுரண்டலுக்கு, அடக்கு முறைக்கு மற்றும் பல்வகை அழுத்தங்களுக்கு எதிரான பெண் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த மே தின ஊர்வலம் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) முற்பகல் 10 மணியளவில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் பிரதான நுழைவாயில் அருகில் இருந்து ஆரம்பமானது.
இந்த ஊர்வலத்தை பெண்கள் மத்தியஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பெண்கள் மத்திய ஸ்தானத்தின் கிளை உறுப்பினர்கள், பல்வேறு சிவில் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் பங்குபற்றினர்.
காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க பேஸ்லைன் வீதியூடாக ஊர்வலம் இடம்பெற்றது.
பின்னர், ஊர்வலம் மீண்டும் அதே வீதி வழியாக திரும்பி வந்து, கட்டுநாயக்க மரக்கறி சந்தை முன்பாக அமைக்கப்பட்டிருந்த மே தின ஊர்வல மேடையருகில் வந்து நின்றது.
அதன் பின்னர், அங்கு கூட்டம் இடம்பெற்றது. அதில் தொழிலாளர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
யாழ்ப்பாணம் - நல்லூர்
(எம்.நியூட்டன்)
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் இன்று புதன்கிழமை (01) நடைபெற்ரது.
சங்கத்தினர் பங்கேற்ற பேரணியானது நல்லூர் ஆலயத்துக்கு அருகில் இருந்து ஆரம்பித்து நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நிறைவடைந்ததை தொடர்ந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் என பலரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சாய்ந்தமருது
சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த 'உழைப்பாளிகளை உழைப்பால் உயர்ந்தவர்களை கௌரவிக்கும் மே தின நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக முன்றலில் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வர்த்தக சங்க தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வு கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.எம். சம்சுதீன், சிரேஷ்ட வர்த்தகர் ஆதம்பாவா மீராசாஹிப், சிரேஷ்ட கல்விமான் ஏ.எல்.எம்.பஷீர், சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்க நிர்வாகிகள், வர்த்தகர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சுகாதார பிரிவின் ஊழியர்கள், திண்மக்கழிவகற்றல் பிரிவின் ஊழியர்கள் சகலருக்கும், அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி இதன்போது பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொத்துவில் பிரதேசத்தில் இன்று முழுநாளும் தொழிலாளிகளை கௌரவிக்கும் வகையில் சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
திருகோணமலை
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தின ஊர்வலமொன்று திருகோணமலையில் இன்று (01) இடம்பெற்றது.
இந்த ஊர்வலத்தை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கட்சி முக்கியஸ்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர். 'உழைப்பே உயர்வு' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த ஊர்வலமானது உவர்மலை சந்தியில் இருந்து லிங்க நகர் வரை பேரணியாக சென்றது.
அதன் பின்னர், மே தினம் தொடர்பான கூட்டம் இடம்பெற்றது. இதன்போது பொது மக்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி
இலங்கை தமிழரசு கட்சியின் மே தின பேரணி சற்று முன்னர் பேரெழுச்சியுடன் நிறைவடைந்து.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் முன்றலில் இருந்து ஆரம்பமானது.
இப்பேரணி தொழிலாளர்களின் அடக்குமுறைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை காட்சிப்படுத்தியதாக அமைந்தது.
இதில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், சாந்தினி, மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், முன்னாள் தவிசாளர்கள், தமிழரசு கட்சியின் மாதர் முன்னணியினர், இளைஞர் அணி, தொழிற்சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பருத்தித்துறை
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்றைய தினம் (01) மே தின நிகழ்வுகளை பருத்தித்துறையில் ஏற்பாடு செய்திருந்தது.
அதன் அடிப்படையில் ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின கூட்டம் பருத்தித்துறை நகரில் பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தலைமையேற்றார்.
முன்பதாக மே தின நிகழ்வுகளில் ஓர் அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் பிரசன்னத்துடன் வாகனப் பேரணியொன்று இடம்பெற்றது.
இப்பேரணி யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதி வழியாக பருத்தித்துறை நகரை சென்றடைந்தது.
அதேவேளை மற்றொரு வாகன பேரணி கட்சியின் சாவகச்சேரியிலுள்ள பிரதேச அலுவலக முன்றலிலிருந்து பேரெழுச்சியுடன் ஆரம்பமாகி பருத்தித்துறையை நோக்கி சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் பலநோக்கு கூட்டறவு சங்க கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெற்றன.
இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் உழைப்பாளர் தின செய்தி வாசிக்கப்பட்டதுடன் உறுதியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் தொழிற்சங்ககங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு - பெரியகல்லாறு
இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தின நிகழ்வு மட்டக்களப்பு பெரியகல்லாறு பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று புதன்கிழமை (01) நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.
கம்பஹாவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டம்
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேதின பேரணி...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணி
கொழும்பு கெம்பல் பார்க்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதின பேரணி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM