சதுரங்க விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுவனை பற்றி பேசும் 'நாற்கரப்போர்'

Published By: Digital Desk 7

30 Apr, 2024 | 04:06 PM
image

சதுரங்க விளையாட்டில் கருப்பு வண்ண காய்களும், வெள்ளை வண்ண காய்களும் உள்ளதை அனைவரும் அறிவர். இந்த இரு வண்ண காய்களை மேல்தட்டு மற்றும் கீழ்த்தட்டு மக்களுடன் ஒப்பிட்டு, தற்போதுள்ள சமமற்ற சமூக நீதியை பேசும் வகையிலும், விளையாட்டுத்துறையில் சாதிக்கத் துடிக்கும் கீழ்த்தட்டு மக்களுக்கு மேல் தட்டு மக்கள் எம்மாதிரியான இடையூறுகளையும், தடைகளையும் ஏற்படுத்துகிறார்கள் என்பதை பற்றி பேசும் வகையிலும், தமிழில் 'நாற்கரப் போர்' எனும் பெயரில் திரைப்படமொன்று தயாராகி இருக்கிறது.

இது தொடர்பாக 'நாற்கரப் போர்' எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஸ்ரீ வெற்றி பேசுகையில், ''  தூய்மை பணியை மேற்கொள்ளும் சமூகத்திலிருந்து ஒருவன் எப்படி சதுரங்க விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் ஆகிறான் என்பதையும், அதற்காக அவன் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும் விவரிக்கும் வகையில் ஸ்போர்ட்ஸ் டிராமா ஜேனரில் 'நாற்கர போர்' திரைப்படம் உருவாகி இருக்கிறது.

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்பும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் மனித மலத்தை மனிதனே அள்ளும் இழிநிலை இன்றும் இந்தியாவில் தொடர்கிறது. இதற்கான ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கவோ அல்லது உருவாக்கி பயன்பாட்டில் இருக்கும் ஒரு தொழில்நுட்பத்தை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யவோ மனமில்லை என்பதுதான் பிரச்சனை.

ஏனெனில் இந்தியாவில் கழிவுகளையும், குப்பைகளையும் அகற்றுவதற்கு அல்லது அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சாதி அடையாளம் பூசப்பட்டு, 'அவர்களுக்கு அது விதிக்கப்பட்ட கடமை' என ஆதிக்க சாதியினர் உறுதியாக இருக்கிறார்கள். 

இதனை தகர்த்தெறியும் வகையிலும், இது தொடர்பான விழிப்புணர்வை ஆதிக்க சாதியினரிடத்தில் ஏற்படுத்தவும் இப்படைப்பு ஒரு சிறிய உந்துதலாகவும், காரணியாகவும் இருக்கும் என நம்புகிறேன்.‌ இது மாற்றத்திற்கான தருணம்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்