(நெவில் அன்தனி)
இலங்கை றக்பி ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய றக்பி முதலாம் பிரிவு நொக் அவுட் போட்டி கொழும்பு குதிரைப் பந்தியத் திடலில் இன்று (30) பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டியில் கஸக்ஸ்தான், இந்தியா, கத்தார், வரவேற்பு நாடான இலங்கை ஆகிய நான்கு நாடுகள் பங்குபற்றுகின்றன.
அணிக்கு 15 பேரைக் கொண்ட இந்த நொக் அவுட் போட்டி ஆசிய முதலாம், இரண்டாம் பிரிவுகளைக் கொண்ட இணைப் போட்டியாக நடத்தப்படுவதாக ஆசிய றக்பி நிறுவனம் தெரிவித்தது.
நொக் அவுட் முறையில் நடத்தப்படும் இப் போட்டியின் ஆரம்ப நாளான இன்று பிற்பகல் 4.00 மணிக்கு தொடங்கவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் கஸக்ஸ்தானை கத்தார் எதிர்த்தாடும்.
இரவு 7.00 மணிக்கு மின்னொளியில் நடைபெறவுள்ள 2ஆவது அரை இறுதிப் போட்டியில் இலங்கையும் இந்தியாவும் மோதவுள்ளன.
இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் மே 4ஆம் திகதி இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடும். அரை இறுதியில் தோல்வி அடையும் அணிகள் அன்றைய தினம் பிற்பகல் 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் சந்திக்கும்.
இப் போட்டி ஆசிய றக்பியின் பிரதான சுற்றுக்கு தரமுயர்த்தும் போட்டியாக அமைவதால் அரை இறுதிகளில் நான்கு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்த கடுமையாக முயற்சிக்கும். இதேவேளை அரை இறுதிகளில் தோல்வி அடையும் அணிகள் தரமிறக்கப்படும் அணியைத் தீர்மானிக்கும் போட்டியில் விளையாடும். இதன் காரணமாக இப் போட்டிகள் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.
பிரதான சுற்றில் ஹொங்கொங், தென் கொரியா, மலேசியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன இடம்பெறுகின்றன.
உலக றக்பி தரவரிசையில் இலங்கை 44ஆவது இடத்திலும் இந்தியா 87ஆவது இடத்திலும் இருக்கின்றன. எனவே இலங்கைக்கு அனுகூலமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா றக்பியும் ஆசிய றக்பியும் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையின்போது ஆசிய றக்பி முதலாம் பிரிவு போட்டியை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்ற தொணிப்பொருளில் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இப் போட்டி தொடர்பாக கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா றக்பி தலைவர் குறூப் கெப்டன் நலின் டி சில்வா தெரிவித்தார்.
இலங்கையில் 7 வருட இடைவெளிக்குப் பின்னர் ஆசிய றக்பி முதலாம் பிரிவு போட்டி நடைபெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
145 வருட றக்பி வரலாற்றைக் கொண்ட இலங்கை இப் போட்டியை முன்னின்று நடத்துவதாகவும் நிப்பொன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் இப் போட்டி நடைபெறுவதாகவும்
இன்னும் சில நிறுவனங்கள் இணை அனுசரணையாளர்களாக இணைந்துள்ளதாக வும் அவர் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, றக்பி உலகில் அணிக்கு எழுவர் போட்டி பிரல்யம் பெற்றுவருகின்றபோதிலும் அணிக்கு 15 பேர் கொண்ட றக்பி போட்டி நிலைத்திருக்கும் எனவும் போட்டிகளை விரிவுபடுத்த ஆசிய றக்பி நிறுவனம், உலக றக்பி நிறுவனம் ஆகியன உறுதியாக இருப்பதாகவும் ஆசிய றக்பி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பெஞ்சமின் வென் ரோயன் தெரிவித்தார்.
இப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு வழங்கப்படவுள்ள கண்கவர் கிண்ணம் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டதாகும். இந்தக் கிண்ணம் றக்பி உலகக் கிண்ணமான வெப் எலிஸ் கிண்ணத்தின் வடிவத்தை ஒத்ததாக உள்ளது.
இது இவ்வாறிருக்க, ஆசிய றக்பி முதலாம் பிரிவு போட்டிக்கு அனுசரணை வழங்குவதையிட்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக நிப்பொன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் பொது முகாமையானர் நெமன்த அபேசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் இளைஞர், யுவதிகளின் விளையாட்டுத்துறை ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு எப்போதும் தமது நிறுவனம் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
இலங்கை அணி தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை றக்பி நிறுவனத்தின் உதவித் தலைவர் ரெயார் அட்மிரல் (ஓய்வுநிலை) உதய ஹெட்டிஆராச்சி, 'இலங்கை அணியினர் சுமார் ஒரு மாதகாலமாக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவந்தனர். இந்த நொக் அவுட் போட்டியில் இலங்கை அணியினர் சாதிப்பார்கள் என நம்புகிறேன்' என்றார்.
இலங்கை அணி
சுஹிரு அன்தனி (தலைவர்), சரித் சில்வா, புலஸ்தி தசநாயக்க, ஜனிது பெர்னாண்டோ, ரவீன் டி சில்வா, ஆதீஷ வீரதுங்க, தரிந்து சத்துரங்க, லசிந்து கருணாதிலக்க, ஹேஷான் ஜென்சன், தேனுக்க நாணயக்கார, டினால் ஏக்கநாயக்க, தரிந்த ரத்வத்த (உதவித் தலைவர்), ஆகாஷ் மதுசன்க, சுதாரக்க டிக்கும்புர, முர்ஷீத் தொரே.
இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநராக சனத் மார்ட்டிஸ் செயற்படுகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM