ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையே உருவாகியுள்ள நெருங்கிய நட்பானது, இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளுக்கு புதியதோர் மைல்கல்லாக அமையுமென ரஷ்யாவின் வெளிநாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் ஈதெர் மர்குவப் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் ரஷ்ய நாடுகளுக்கிடையில் இருதரப்பு தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை கௌரவிக்கும் வகையிலும் ரஷ்யாவின் ரிட்ஸ் கால்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வைபவத்தின்போதே ரஷ்ய பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வைபவத்தின் விசேட அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டார். இலங்கை மற்றும் ரஷ்ய நாடுகளின் கலாசார நிகழ்வுகளினால் வைபவம் வண்ணமயமாகியது. இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதியமைச்சர், இலங்கையின் இறைமை மற்றும் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காக ரஷ்யா என்றும் இலங்கையுடன் இணைந்து செயற்படும் எனக் குறிப்பிட்டார்.

சர்வதேச மட்டத்திலும் தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்க ரஷ்ய அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்த ரஷ்ய வெளிநாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் இலங்கையின் பொருளாதாரம், வர்த்தகம், கல்வி மற்றும் கலாசார துறைகளின் எதிர்கால அபிவிருத்திக்கு ரஷ்யாவின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இலங்கைக்கும், சோவியத் ரஷ்யாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவு 1957 ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி ஆரம்பமாகியது. தற்போது உலகில் பலம்பொருந்திய நாடாக வளர்ச்சியடைந்துள்ள ரஷ்யாவும், இலங்கையும் தமது நட்புறவின் 60 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் இந்த உத்தியோகபூர்வ விஜயமானது மிகவும் முக்கியத்துவமுடையது என நிகழ்வில் கலந்துகொண்ட ரஷ்ய அரசின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

விண்வெளியை வலம்வந்த உலகின் முதலாவது பெண்மணியான வெலன்டீனா டெரஸ்கோவா அம்மையார் மற்றும் விண்வெளி வீர்ர் விளாடிமிர் லேதோவ் உள்ளிட்ட அந்நாட்டின் விசேட அதிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன மற்றும் அமைச்சர்களான மங்கள சமரவீர, எஸ்.பீ. நாவின்ன, மஹிந்த சமரசிங்க, சுசில் பிரேமஜயந்த, ஜோன் அமரதுங்க, தயாசிறி ஜயசேகர ஆகியோரும், பிரதியமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ உள்ளிட்ட இலங்கையின் தூதுக்குழுவினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.