புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளான ஏப்ரல் 29ஐ உலகத் தமிழ் நாளாக அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து உலகளவில் செயல்பட்டு வரும் பல்வேறு தமிழ் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை, நியூயோர்க் தமிழ்ச் சங்கம், சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம், பாவேந்தர் பேரியக்கம், திருவள்ளுவர் சங்கம்-பெங்களூரு, பாரதிதாசன் அறக்கட்டளை - புதுச்சேரி, மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம் மற்றும் உலகளவில் செயல்பட்டு வரும் ஏராளமான தமிழ் அமைப்புகளின் ஆதரவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்-அமெரிக்கா, கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் - பெங்களூரு, இலெமுரியா அறக்கட்டளை-மும்பை, தமிழ் அறக்கட்டளை பெங்களூரு, உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம்-சென்னை, பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம்-பெங்களூரு ஆகிய அமைப்புகளின் சார்பில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஏப்ரல்-29ஆம் திகதியை 'உலகத் தமிழ் நாள்' என அறிவிக்கவும், சென்னையில் பாரதிதாசன் ஆய்வு மணிமண்டபம் அமைக்கவும் கோரும் இணையவழி கருத்தரங்கம் கடந்த 14ஆம் திகதி மாலை நடைபெற்றது.
இலெமுரியா அறக்கட்டளை மும்பையின் நிறுவனத் தலைவரும், தமிழ் அறக்கட்டளை பெங்களூரின் தலைவருமான சு.குமணராசன் தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில் பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் முன்னிலை வகிக்க, தமிழ் அறக்கட்டளை பெங்களூரின் செயலாளர் அ.தனஞ்செயன் (எ) வெற்றிச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், அமெரிக்காவின் ஒருங்கிணைப்பாளர் சு.துரைக்கண்ணன் இக்கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கி பேசினார்.
பாரதிதாசனின் பெயரனும், பாரதிதாசன் அறக்கட்டளை-புதுச்சேரியின் நிறுவனத் தலைவருமான கோ.பாரதி, மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நல்லுரையாளர் மன்னர் மன்னர் மருதை, மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத்தலைவர் இரா.திருமாவளவன் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள்.
அதை தொடர்ந்து, கருத்தரங்கின் நோக்கங்களை விளக்கும் முத்தான மூன்று தீர்மானங்களை முன்மொழிந்து வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை-அமெரிக்காவின் தலைவர் முனைவர் பாலா.சுவாமிநாதன் கருத்துரை வழங்கினார்.
இந்த தீர்மானங்களை முன்மொழிந்து உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநரும் தமிழறிஞருமான பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் விளக்கவுரை ஆற்றினார்.
இறுதி நிகழ்வாக, பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம்-பெங்களூரின் இணை ஒருங்கிணைப்பாளர் புலவர் மா.கார்த்தியாயினி நன்றி கூறினார்.
இக்கருத்தரங்கில் தமிழ் அறிஞர்கள் முன்மொழிந்து, தமிழ் அமைப்புகள் வழிமொழிந்து நிறைவேற்றப்பட்ட முத்தான மூன்று தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் - 1
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளாம் ஏப். 29ஆம் நாளை உலகத் தமிழ் நாள் (World Tamil Day) அல்லது பன்னாட்டு தமிழ் நாள் (International Tamil Day) என அறிவிக்க வேண்டும் என உலகத் தமிழர்களின் சார்பாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம். அன்றைய நாளில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தமிழ் மக்களும் மாணவர்களும் கொண்டாடி மகிழ்ந்திடவும் தமிழ் மொழிக்காப்பு உறுதிமொழியை எடுக்கவும் இந்த அறிவிப்பு வழிவகுக்கும்.
எனவே உலகத் தமிழர்களின் பாதுகாவலனாகவும் தமிழ் மொழியின் பாதுகாவலனாகவும் தற்போது அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசு ஏப்ரல் 29ஆம் திகதியை “உலகத் தமிழ் நாள்” என்ற அறிவிப்பை வெளியிட்டு இந்த ஆண்டு முதலே தமிழர்கள் கொண்டாட வகை செய்ய வேண்டும் என இத்தீர்மானத்தின் மூலம் உலகத் தமிழ் அமைப்புகளின் சார்பாக தமிழ்நாடு அரசை இந்த அறிஞர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் - 2
தமிழ் இலக்கியத்துக்கு தனது சிந்தனையாலும் கவிதைகளினாலும் பொன்னாரம் சூட்டிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் தமிழ் இலக்கியங்களுக்கு மகுடம் சூட்டும் வகையிலும் அவருடைய இலக்கியப்படைப்புகள், உரைவீச்சுகள், ஆளுமைத் திறன்களை வெளிப்படுத்தும் வகையிலும் புரட்சிக்கவிஞரின் சிலை மற்றும் நூலகம் உள்ளடக்கிய மணிமண்டபம் ஒன்றினை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகரில் அமைத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை உலகத் தமிழ் அமைப்புகளின் சார்பில் இத்தீர்மானத்தின் மூலம் வேண்டுகின்றோம்.
தீர்மானம் - 3
உலகின் பல்வேறு நாடுகளில் பரந்து விரிந்து வாழும் தமிழர்களும் அவர்தாம் நடத்திவரும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் ஒவ்வோர் ஆண்டும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29ஆம் திகதியை உலகத் தமிழ் நாள் (World Tamil Day) அல்லது பன்னாட்டு தமிழ் நாள் (International Tamil Day) என கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமென அனைத்து உலகத் தமிழ் அமைப்புகளை இத்தீர்மானத்தின் மூலம் வேண்டிக்கொள்வதாக அமெரிக்காவின் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM