ஹைதராபாத்தை அதிரவைத்து 35 ஓட்டங்களால் வென்றது பெங்களூரு

Published By: Vishnu

25 Apr, 2024 | 11:43 PM
image

(நெவில் அன்தனி)

ஹைதராபாத், ரஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற இந்த வருடத்திற்கான இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 41ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 35 ஓட்டங்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றிகொண்டது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு இந்தத் தோல்வி பெரும்  ஏமாற்றத்தைக் கொடுத்த அதேவேளை, கடைநிலையில் இருக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்த வெற்றி ஆறுதலைக் கொடுத்தது.

விராத் கோஹ்லி, ரஜாத் பட்டிடார் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் கெமரன் க்றீனின் சகலதுறை ஆட்டமும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கு வழிவகுத்தன.

எவ்வாறாயினும் இந்த தோல்விக்கு மத்தியிலும் சன்ரைசர்ஸ் ஹைதாராபத் 10 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 3ஆம் இடத்தில் இருக்கிறது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 23 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பவ் டு ப்ளெசிஸ் 25 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஆட்டம் இழந்த வில் ஜெக்ஸ் 6 ஓட்டங்களை மாத்திம் பெற்றார்.

அதன் பின்னர் விராத் கோஹ்லி, ரஜாத் பட்டிடார் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

பட்டிடார் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 20 பந்துகளில் 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களைக் குவித்தார். (130 - 5 விக்.)

மொத்த எண்ணிக்கை 140 ஓட்டங்களாக இருந்தபோது விராத் கோஹ்லி 51 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மத்திய வரிசையில் கெமரன் க்றீன் 20 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களையும் தினேஷ் கார்த்திக் 6 பந்துகளில் 11 ஓட்டங்களையும் ஸ்வப்னில் சிங் 6 பந்துகளில் 12 ஓட்டங்களையும் பெற்று மொத்த எண்ணிக்கை 200ஐக் கடக்க உதவினர்.

பந்துவீச்சில் தங்கராசு நடராஜன் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆரம்ப வீரர் ட்ரவிஸ் ஹெட் ஒரு ஓட்டத்துடன் முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அபிஷேக் ஷர்மா 31 ஓட்டங்களை பெற்று இரண்டாவதாக ஆட்டம் இழந்தபோது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் மொத்த எண்ணிக்கை 37 ஓட்டங்களாக இருந்தது.

அதன் பின்னர் ஏய்டன் மார்க்ராம் (7), ஹென்றிச் க்ளாசென் (7), நிட்டிஷ் குமார் ரெட்டி (13), அப்துல் சமாத் (13) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நெருக்கடியை எதிர்கொண்டது. (85 - 6 விக்.)

எனினும் ஷாபாஸ் அஹ்மத், அணித் தலைவர் பெட் கமின்ஸ் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டனர்.

பெட் கமின்ஸ் 15 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ்களுடன் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

அடுத்து களம் புகுந்த புவணேஷ்வர் குமார் 13 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிய நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய மத்திய வரிசை வீரர் ஷாபாஸ் அஹ்மத் 40 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஜெய்தேவ் உனத்கட் ஆட்டம் இழக்காமல் 8 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கெமரன் க்றீன் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கர்ண் ஷர்மா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்வப்னில் சிங் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08
news-image

சர்வதேச தரத்தில் சீகிரியாவில் புதிய கோல்ஃப்...

2025-01-19 19:56:12
news-image

துடுப்பாட்டத்தில் சனெத்மா, பந்துவீச்சில் ப்ரபோதா அற்புதம்;...

2025-01-19 12:39:42
news-image

சுப்பர் சிக்ஸுக்கு இலக்குவைத்துள்ள இலங்கை  ஏ...

2025-01-18 21:42:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட்...

2025-01-18 21:36:53
news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39
news-image

பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா வெற்றி

2025-01-18 17:16:04
news-image

ஆரம்ப நாளன்று ஆஸி. வெற்றி;  மூன்று ...

2025-01-18 15:21:59
news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38