இலங்கை அரசாங்கம் போர் குற்றங்கள் குறித்த விசாரணைக்கு, சர்வதேச நீதிபதிகள் முறையை எதிர்த்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர், விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள் முறையை பின்பற்றவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இச்சூழலில் யுத்த குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் சர்வதேச தரப்பிடம் வாக்குறுதிகளை கொடுத்தாலும், ஜனாதிபதியின் நிலைப்பாடு உள்ளக விசாரணை பொறிமுறை என்பதே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் சர்வதேச நீதிபதிகள் என்பது சாத்தியப்படாது, மாறாக சர்வதேச நிபுணர்கள் மற்றும் அவதானிப்பற்களை கொண்டியங்காலம் ஆனால் வெளிநாட்டு நீதிபதிகள் உள்நாட்டு நீதிமுறையில் தலையிடுவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை எனவும், தாம் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க போவதில்லை எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் சைட் அல் ஹுசைன், வெளியிட்டுள்ள 34ஆவது மனித உரிமைகள் பேரவை மாநாட்டு அறிக்கையில், இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் மெதுவாக நகர்ந்தாலும், அவை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ஒப்புக்கொண்டிருந்தார்.

இருப்பினும் இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டிற்கான கலந்தாய்வு குழு வெளியீட்டுள்ள, அறிக்கையை இலங்கை அரசாங்கம் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனவும், போர்க்குற்றம் குறித்த விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் உள்நாட்டு சட்டத்தரணிகள் அடங்கிய ஒரு கலப்பு நீதிமன்ற முறையை வலியுறுத்தி வருகிறார் மனித உரிமை பேரவையின் ஆணையாளர்.

அத்தோடு இலங்கையின் நல்லிணக்கத்தை அடைவதற்கான கலந்தாய்வு குழுவின் அறிக்கையை, செயற்படுத்துமுறைக்கான திட்ட வடிவமைப்பொன்றை கோரியிருந்ததோடு, ஏனைய விசாரணை ஆணைக்குழுக்களும் சிறந்த செயல் முறை அறிக்கைகளை தயாரித்திருந்த நிலையில் அவற்றின் செயற்பட்டின்மையை நினைவூட்டி வருத்தம் வெளியிட்டிருந்தார்.

சர்வதேச மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைகளுக்கிணங்க, இலங்கையில் சர்வதேச நீதிபதிகள் முறையை அமுல்படுத்துவதற்கான தீர்மானங்களே பரவலாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கால அவகாசத்திற்கான வாய்ப்பை பெற்றிருக்கும் இலங்கை, போர்க்குற்ற விசாரணைகளுக்காக, கலப்புநீதிமன்ற முறையை பின்பற்றுவதற்கான அழுத்தங்களை பெறக்கூடிய வாய்ப்பை அதிகமாக கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.