(எம்.சி.நஜிமுதீன்)

தேர்தல் திணைக்களம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவாக மாற்றப்பட்டதன் பின்னர் சிறிது காலம் அவ்வாணைக்குழு அரசாங்கத்திற்கு மாத்திரமல்லாமல் சாதாரண அமைச்சருக்கும் அடிபணியும் நிலையில் செயற்பட்டதாக முன்ளாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவிலாளர் சந்திப்பு இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பத்தரமுல்லையிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் அண்மைக்கால செயற்பாடுகளில் சிறிது பின்னடைவு தென்பட்டதைத் அவதானிக்கமுடிந்தது. ஏனெனல் தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட முனைபவர்களின் காலில் அல்ல தலையில் சுட வேண்டும் என்கின்ற இறுக்கமான உத்தரவை அவர் கடந்த காலங்களில் பிறப்பித்து உரிய முறையில் செயற்பட்டார். 

எனினும் அவரின் அந்த உறுதிமிக்க செயற்பாடுகளை அண்மைய காலங்களில் காணமுடியாதிருந்ததது. ஆகவே தேர்தல் ஆணையாளராக செயற்பட்ட போது அவர் உறுதிமிக்கத் தீர்மானங்களை மேற்கொண்டிருந்தார். ஆனபோதிலும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரான பின்னர் அந்த உறுதிமிக்க தீர்மானங்களை காணமுடியாதிருந்தது.

இருந்தபோதிலும் மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் எனக்கூறியதன் மூலம் அவர் முன்னைய உறுதிமிக்க நிலைக்கு மீண்டும் வந்துள்ளமை தென்படுகிறது. மேலும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பணி தேர்தலை நடத்துவது மாத்திரமல்ல, தேர்தல் தொடர்பிலான அறிவித்தல்களை வெளியிடல், சர்வஜன வாக்குரிமையை  உறுதிப்படுத்தல் போன்ற பணிகளும் ஆணைக்குழுவுக்கு உள்ளது.

18 வயதையடைந்த சகலருக்கும் வாக்குரிமையை உறுதி செய்வதற்காக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினால் பல்வேறுப்பட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளவர்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு அண்மைக்காலமாக நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல் ஆணையாளராக பதவி வகித்தபோது அரசாங்கத்திற்கு அடிபணியவில்லை. இருந்தபோதிலும் சுயாதீன ஆணைக்குழவின் தலைவராகப் பதவிக்கு வந்த பின்னர் சிறிது காலம் அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல சாதாரண அமைச்சருக்கும் அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.