சென்னை, ஆர்.கே.நகரில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராகக் களமிறங்கும் கங்கை அமரனுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிப்பதாக எழுந்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தின் தேர்தல் காலங்களில் ரஜினிகாந்தின் ஆதரவு குறித்துப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுவது வழக்கம். அதன்படி, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அவரது தொகுதியான ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெற ஏற்படாகியுள்ளது. இதில், பா.ஜ.க. சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், கங்கை அமரனை ரஜினிகாந்த் கட்டியணைத்தவாறான ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட வெங்கட் பிரபு, சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தந்தையை சந்தித்து தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்ததாகவும், தனது ஆதரவு கங்கை அமரனுக்கே என்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து பரபரப்புக்கள் கிளம்பின. இந்துக்களுக்கு மட்டுமே ஆதரவான நிலைப்பாடு கொண்டதாகக் கருதப்படும் பா.ஜ.க.வுக்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பதன் மூலம், ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்ற ரீதியில் கருத்துக்கள், விமர்சனங்கள் பரவத் தொடங்கின.

இதுபற்றி அறிந்த ரஜினிகாந்த், தனது ட்விட்டர் கணக்கின் வாயிலாக, ‘தான் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை’ என்று தெரிவித்தார்.