இவ்வாண்டு இடம்பெறவுள்ள ஐ.சி.சி . சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில்  குறித்த கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் 8 நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ கிண்ணம் எடுத்துச்செல்லப்படுகின்றது. அந்தவகையில் நேற்று உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது.

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சம்பியன் கிண்ணத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வாயிலில் பிரத்தியேகமாக தயார்படுத்தப்பட்டிருந்த ஊர்தியில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஸ்லி டி சில்வா மற்றும் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோரால் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவரும் நோக்குடன் இன்று வியாழக்கிழமை நாட்டின் பலபாகங்களுக்கும் குறித்த உத்தியோகபூர்வ கிண்ணம் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

உத்தியோகபூர்வ சம்பியன் கிண்ணம் பிரத்தியேகமாக தயார்படுத்தப்பட்ட வண்டியில் மொரட்டுவையில் இருந்து எடுத்துவரப்பட்டு மஹரகம, நுகோகொடை, கொழும்பு நகர மண்டபம் வழியாக காலி முகத்திடலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதியாக பொதுமக்கள் பார்வைக்காக சுதந்திர சதுர்க்கத்தில் வைக்கப்படும்.

இதன் போது கிரிக்கெட் ரசிகர்கள் உத்தியோகபூர்வ சம்பியன் கிண்ணத்துடன் புகைப்படமெடுக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கு கொணடுவரப்பட்டுள்ள உத்தியோகபூர்வ சம்பியன் கிண்ணத்தின் உயரம் 46 சென்றி மீற்றரும் நிறை 3.1 கிலோகிராம் என்பது குறிப்பிடத்தக்கது.