(நெவில் அன்தனி)
துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் எதிர்வரும் மே 3, 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீ மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் தலைசிறந்த நான்கு மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இப் போட்டியில் தருஷி டில்சரா கருணாரட்ன, கயன்திகா அபேரட்ன, நதீஷா ராமநாயக்க ஆகிய 3 பெண்கள் பங்குபற்றவுள்ளனர்.
ஆண்களில், யுப்புன் ப்ரியதர்ஷன அபேகோன் பங்குபற்றவுள்ளார்.
இந்த நால்வருக்கும் துபாயில் பெரும் சவால் காத்திருக்கிறது. அப்போட்டியில் வெற்றி பெறுவது ஒரு புறமிருக்க, ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான திறன்காண் போட்டியாக இது அமைவதால் இலங்கை மெய்வல்லுநர்கள் அதி சிறந்த நேரப் பெறுதிகளை பதிவு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
பாரிஸில் ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நேர மற்றும் தூரப் பெறுதிகளைப் பதிவுசெய்வதற்கு உலக மெய்வல்லுநர்களுக்கு ஜூன் 30ஆம் திகதிவரை வேர்ல்ட் அத்லெட்டிக்ஸினால் (உலக மெய்வல்லுநர் சங்கம்) அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை குழுவில் இடம்பெறுவோரில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர் 20 வயதான தருஷி டில்சரா கருணாரத்ன ஆவார்.
வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியில் மாணவியாக இருந்தபோது கடந்த வருடம் ஆசிய விளையாட்டு விழா, ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டி ஆகியவற்றில் தருஷி தொடர்ச்சியாக (800 மீற்றர் ஓட்டப் போட்டி) தங்கப் பதக்கங்களை சுவீகரித்திருந்தார். 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தருஷி பதிவுசெய்துள்ள அதிசிறந்த நேரப் பெறுதி 2:00.66 செக்கன்களாகும்.
அவர் 400 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் சாதிப்பார் என நம்பப்படுகிறது.
அவருடன் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கயன்திகா அபேரத்னவும் பங்குபற்றவுள்ளார். அவரது அதிசிறந்த நேரப் பெறுதி 2:01.20 செக்கன்களாகும்.
அவர்கள் இருவரும் ஒலிம்பிக் தகுதியைப் பெறுவதாக இருந்தால் ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் 1:53.30 செக்கன்கள் என்ற நேரப் பெறுதியை அல்லது அதனைவிட குறைந்த நேரப் பெறுதியைப் பதிவுசெய்யவேண்டும்.
இதேவேளை, ஆசிய சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் (52.61 செக்.) வென்ற நதீஷா ராமநாயக்க இதனை விட மிகச் சிறந்த நேரப் பெறுதியைப் பதிவுசெய்தாக வேண்டும்.
28 வயதான அவரால் இதனைவிட வேகமாக ஓட முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். க்ரோன் ப்றீயில் 50.95 செக்கன்களில் அல்லது அதனைவிட குறைந்த நேரத்தில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியை நதீஷா நிறைவுசெய்தால் அவரது பாரிஸ் ஒலிம்பிக் கனவு நனவாகும்.
ஒரு வாரத்துக்கு முன்னர் இத்தாலியில் 150 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெற்றிபெற்ற யுப்புன் அபேகோன் அங்கிருந்து நேரடியாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தனது பயிற்றுநர் மற்றும் உடற்கூற்று மருத்துவர் ஆகியோருடன் செல்லவுள்ளார். அவர்களுக்கான செலவினங்களை ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் ஏற்றுள்ளது.
பேர்மிங்ஹாம் 2022 பொதநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியை 10.14 செக்கன்களில் நிறைவு செய்த யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
அப் போட்டியின் முதலாவது தகுதிகாண் சுற்றை யுப்புன் அபேகோன் 10.06 செக்கன்களில் நிறைவுசெய்திருந்தார்.
அதே வருடம் அதற்கு முன்னர் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுநர் போட்டியை 9.96 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார். ஆனால் காற்றின் நேர்த்திசை வேகம் மணிக்கு 1.6 கிலோ மீட்டராக இருந்ததால் அவரது அந்த நேரப் பெறுதி சாதனையாக அங்கீகரிக்கப்படவில்லை.
இத்தாலியில் கடைசியாக கடந்த வருடம் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.04 செக்கன்களில் ஓடிமுடித்து 2ஆம் இடத்தைப் பெற்றார்.
அதன் பின்னர் சுமார் ஒரு வருடத்தின் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் 150 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய யுப்புன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்றார்.
எவ்வாறாயினும் ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீ போட்டியை 10.00 செக்கன்களுக்குள் ஓடி முடித்தால் மாத்திரமே ஒலிம்பிக்கில் பங்குபற்ற அவர் தகுதி பெறுவார்.
எனவே இந்த நான்கு மெய்வல்லுநர்களுக்கும் ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீ போட்டி பெரும் சவாலைத் தோற்றுவிக்கும் என்பது உறுதி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM