(நமது நிருபர்)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதா கட்சியானது, கச்சதீவு விவகாரத்தை பேசுபொருளாக்கியுள்ள நிலையில், வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் ‘கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’ என்று இந்திய மத்திய அரசாங்கத்தையும், தமிழக அரசையும் பகிரங்கமாக கோரியுள்ளனர்.
கச்சதீவை உரிமை கோருவது தொடர்பாக இலங்கை, இந்திய நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை 1921இலேயே முதன் முதலில் ஆரம்பமானது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பாக்கு நீரிணைக்கும், மன்னார் குடாவுக்கும் இடையில் ஓர் எல்லையை வகுப்பதற்கான மாநாடு ஒன்று கொழும்பில் இந்தியா மற்றும் இலங்கை குடியேற்ற நாட்டு அரசுகளிடையே 1921 ஒக்டோபரில் நடைபெற்றது.
இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் முரணான கோரிக்கைகளை முன்வைத்தனர். இலங்கை தூதுக் குழுவின் தலைவர் ஹோர்ஸ்பேர்க் அப்போதைய வட மாகாண அரச அதிபர் “எல்லை நிர்ணயமானது நடுக்கோட்டைப் பின்பற்றி அமைதல் வேண்டும். கச்சதீவுக்கு மேற்கே 3 மைலில் அந்த எல்லைக்கோடு அமைதல் வேண்டும்” எனக் கோரினார்.
இதற்கு இந்தியத் தரப்பு மறுத்துவிட்டது. கச்சதீவு இராமநாதபுரம் ராஜாவின் கீழ் உள்ளது என்றும் அவர் தமது விருப்பப்படியே குத்தகைக்கு கொடுத்து வருகிறார் எனவும் காட்டப்பட்டது. இது கச்சதீவு உரிமை தொடர்பான பிரச்சினைகள் உள்ளன என்பதை வெளிக்கொணர்ந்தது.
இதனால் இப்பிரச்சினைக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை. எனினும், கச்சதீவு உரிமை தொடர்பான பிரச்சினையை தவிர்த்துவிட்டு மீன்பிடி உரிமைகள் நிர்ணயிக்கப்பட்டன. ஆகவே, முன்னர் கூறியபடி 3 மைல் மேற்கு எல்லை நிர்ணயிக்கப்பட்டது. இதனால் மீன் பிடிக்கும் உரிமையை இந்தியா இழந்தது.
அதற்கு ஈடாக முக்கிய சங்குத்திட்டுப் பகுதிகள் இந்தியாவின் எல்லைக்குள் வீழ்ந்தன. ஆனால் பிரித்தானிய அரசு இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த மறுத்துவிட்டது. அதாவது இவ்வுடன்படிக்கை இந்திய இராஜாங்கச் செயலாளரின் அங்கீகாரம் பெறாமல் இருந்தது.
இதன் காரணமாக 1921ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிலையானதாகவும். உறுதிவாய்ந்ததாகவும் அமையவில்லை. இலங்கையும் இந்தியாவும் சுதந்திரமடைந்து 1974ஆம் ஆண்டில் இன்னொரு உடன்படிக்கை செய்துகொள்ளும் வரை கச்சதீவு தொடர்பான விவகாரம் தொடர்ந்தது.
இந்நிலையில், இலங்கை - இந்தியாவுக்கு இடையில் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் பாரம்பரிய நீர்ப்பரப்பு பகுதிகளில் ஒன்றான ஆதாம் பாலத்திலிருந்து பாக்கு நீரிணை வரையிலுமான பகுதிக்கு கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டது.
அகலாங்கு, நெட்டாங்கு அடிப்படையில் வகுக்கப்பட்ட கடல் எல்லைக்கோடானது நீண்டகாலமாக இவ்விரு நாடுகளுக்குமிடையில் கச்சதீவு தொடர்பாக இருந்து வந்த தகராறுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவியது.
இதனால் இவ்வுடன்படிக்கை முக்கியம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது. இவ்வுடன்படிக்கையில் உள்ள 5ஆவது, 6ஆவது சரத்துகள் கச்சதீவு இலங்கைக்குரியதாக இருந்தபோதிலும் இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிக்க வழிசெய்கின்றது.
5ஆவது சரத்தானது, “மேற்குறிப்பிட்டவற்றுக்குட்பட்டு இந்திய மீனவர்களும் யாத்திரிகர்களும் இதுவரை அனுபவித்தது போல கச்சதீவுக்குச் செல்லும் உரிமையைப் பெறுவர். தொடர்ந்தும் அவ்வுரிமையை அனுபவிப்பர். இந்த நோக்கங்களுக்காக பிரயாண ஆவணங்களோ விசாக்களோ இலங்கையிலிருந்து பெற வேண்டுமென தேவைப்படுத்த முடியாது. இதற்கு அவசியமும் இல்லை. இலங்கை இதற்கு நிபந்தனை விதிக்கவும் முடியாது” என்றுள்ளது.
6ஆவது சரத்தானது, “இலங்கையினதும் இந்தியாவினதும் படகுகள் மற்றவரின் நீர்ப்பரப்பினதும் ஒவ்வொருவரதும் நீர்ப்பரப்பினுள்ளும் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமைகளைத் தொடர்ந்தும் அனுபவிப்பர்” என்று குறிப்பிடுகின்றது.
இதன் பிரகாரம், 1974ஆம் ஆண்டு உடன்படிக்கையின் பிரகாரம் கச்சதீவானது இலங்கையின் எல்லைப் பகுதியினுள் வந்ததோடு இலங்கைத் தரப்பில் மகிழ்ச்சியும் வரவேற்பும் காணப்பட்டது.
வரலாற்றுப் பின்னணி இப்படியிருக்கையில், வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் கச்சதீவை மீண்டும் இந்தியா பேசுபொருளாக்குவதை விரும்பவில்லை என்பதோடு, குறித்த விடயத்தைப் பயன்படுத்தி அரசியல் முன்னெடுக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
அந்த வகையில், வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் தெரிவிக்கையில், “இந்திய, இலங்கை மீனவர்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கச்சதீவு உடன்பாடு எட்டப்பட்டது. அப்படியிருக்கையில், கச்சதீவை மீளப்பெறுவோம் என்று இந்திய அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு கருத்து தெரிவிப்பவர்கள் முதலில் கச்சதீவு எங்குள்ளது, இலங்கைக்கும் அந்தத் தீவுக்கும் எந்தளவு இடைவெளி காணப்படுகின்றது என்பது தொடர்பில் புரிதல் அவசியமாகின்றது.
அதேநேரம், கச்சதீவானது தற்போது இலங்கையின் இறையாண்மை எல்லைக்குள்ளேயே காணப்படுகின்றது. அவ்வாறிருக்கையில் இலங்கையின் இறையாண்மையை மீறி எவ்வாறு இந்தியா அந்தப் பகுதியை மீட்டுக்கொள்ள முடியும்?
ஏற்கனவே இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி எமது கடல் வளங்களை பறித்துக்கொண்டிருக்கையில் கச்சதீவை இந்தியா பெற்றுக்கொண்டால் எமது எதிர்காலம் எப்படியிருக்கும்? மனிதாபிமான முறையில் இந்தியா சிந்திக்க வேண்டும் என்பதோடு கச்சதீவை விட்டுக்கொடுப்பதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்” என்கிறார்.
இதேநேரம், வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவிக்கையில், “இந்திய மத்திய அரசியலிலும் தமிழக அரசியலிலும் புதிதாக ஒரு நிலைப்பாடாக கச்சதீவு விடயம் தோன்றியுள்ளது. இதை அவர்கள் அரசியலுக்கு பயன்படுத்தக் கூறி இருந்தாலும் அங்குள்ள மீனவர்களைக் குறிப்பாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளிலிருந்து மாற நினைக்கும் மீனவர்களை இந்தத் தொழிலில் உள்வாங்கி அவர்களை உற்சாகமூட்டுவதாக அமைகிறது.
கச்சதீவு விடயத்தைப் பல தடவைகள் தமிழக அரசு தான் மேலோங்கச் செய்துள்ளது. இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் கச்சதீவை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தியது தமிழக அரசு தான்.
தமிழக அரசாக இருந்தாலும், இந்திய அரசாக இருந்தாலும் அவர்கள் அரசியலுக்காக இந்த விடயத்தை மீண்டும் மீண்டும் பேசித் தமிழக மீனவர்களை உற்சாகப்படுத்துவதும் இந்த விடயத்தை கேலிக் கூத்தாக்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
இதேவேளை, அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவிக்கையில், “கச்சதீவானது இலங்கையின் இறைமைக்குள்ளான பிரதேசம் என்பதை விடவும், வடக்கு கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு அரணாக காணப்படுகின்றது. அதனைப் பறித்தெடுப்பதென்பது, வடக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்தெடுப்பதற்கு நிகரானதாகும் என்பதை இந்திய அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருகை தருவதற்கும், இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கும் கச்சதீவு எந்தவகையிலும் காரணமாகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே அரசியல் நோக்கத்துக்காக கடற்றொழிலாளர் பிரச்சினைகளை கச்சதீவு பிரச்சினையாக திசை திருப்ப வேண்டாம்” என்றார்.
அதேநேரம், யாழ். மாவட்ட கிராமிய அமைப்பின் பொருளாளர் செல்லத்துரை மகேசன் தெரிவிக்கையில், “ஆயிரக்கணக்கான வடக்கு,கிழக்கு மீனவர்கள் அன்றாடம் தமது நாட்டு மீனவர்களால் பாதிக்கப்படுகின்றார்கள் என்பது தொடர்பில் இந்திய அரசாங்கமோ, தமிழக அரசாங்கமோ எவ்விதமான கரிசனைகளையும் கொள்ளவில்லை.
அவர்கள் அரசியலுக்காக கச்சதீவு விடயத்தை கையெடுத்துள்ளார்கள். தேர்தல் நிறைவுக்கு வந்தவுடன் அதனை மறந்துவிடுவார்கள். ஆனால் மீனவர்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை எடுக்க முடியாதவர்கள் எவ்வாறு தமிழர்கள் விடயத்துக்கு தீர்வை வழங்குவார்கள்” என்று கேள்வி எழுப்புகின்றார்.
மேலும், அகில இலங்கை தொழிலாளர் சமூக கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம் கூறுகையில், “கச்சதீவை மீட்டே தீருவோம் என்று அரசியல் மேடைகளில் வெளியாகும் பேச்சுக்களை நம்பி மக்கள் வாக்குகளை வழங்குவார்கள் என்ற திட்டத்திலேயே தற்போதைய நிகழ்வு கள் நடைபெறுகின்றன.
பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி யிருக்கும் இலங்கையின் இரு செவிகளிலும் பிடித்திருக்கும் இந்தியா, அதனை தமது விருப்பத்துக்கு ஏற்ப ஆட்டிப்படைக்கலாம் என்று கருதுகின்றது. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் கச்சதீவு விடயம் மௌனிக் கப்படும் என்பதால் அது பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை” என்றார்.
தற்போது தமிழக அரசியல் மேடைகளில் கச்சதீவு விடயம் பேசப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் பாராளுமன்றத்துக்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. எனினும், தேர்தலின் பின்னரும், கச்சதீவு விவகாரம் நீடிக்காது என்ற எதிர்பார்ப்புகள் காணப்பட்டாலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது, “தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் கச்சதீவு விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பது எனக்குத் தெரியும்” என்றுரைத்தமையானது இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் தொடரப்போவதற்கான கட்டியங் கூறலாகவே உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM