ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது

Published By: Vishnu

19 Apr, 2024 | 06:04 AM
image

(நெவில் அன்தனி)

மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது.

போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது.

எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது.

இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர்.

ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார்.

திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.

முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.)

எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.)

இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது.

ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார்.

அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.)

மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார்.

எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டி இன்று...

2024-05-26 10:41:17
news-image

MCA - ஹொண்டா ஜீ பிரிவு...

2024-05-26 09:38:45
news-image

 உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-25 20:58:29
news-image

வெற்றியைக் குறிவைத்து றக்பி அனுசரணையாளர்களை கௌரவித்த...

2024-05-25 18:27:17
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம்

2024-05-25 15:26:19
news-image

ரி20 உலகக் கிண்ண வர்ணனையாளர்கள் குழுவில்...

2024-05-25 14:18:01
news-image

வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் பி.பி.எல் கிரிக்கெட்...

2024-05-25 14:33:26
news-image

தினேஷுக்கு கிடைக்கவிருந்த வெள்ளி பறிபோனது

2024-05-25 11:43:21
news-image

ஜேர்மனியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில்...

2024-05-25 10:53:53
news-image

ராஜஸ்தானை இலகுவாக வீழ்த்திய ஹைதராபாத் இறுதிப்...

2024-05-25 00:36:22
news-image

உலக பரா ஈட்டி எறிதலில் உத்தியோகப்பற்றற்ற...

2024-05-24 21:35:49
news-image

இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்த்தாடுவது ஹைதராபாத்தா?...

2024-05-24 17:34:31