(எம்.சி.நஜிமுதீன்)

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச 71 நாட்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை. எனவே தனக்கான விடுதலை நீதிமன்றத்தினூடாக உறுதி செய்யப்படும் என்பதில் நம்பிக்கை இழந்துள்ளதனால் இன்று காலை முதல் அவர் உண்ணாவிரப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார். 

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அரசாங்கத்திற்கு மிகுந்த சவாலாக செயற்பட்டார். ஆகவே அவரை பழிவாங்குவதற்காகவே பிணை வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பொதுச்சொத்து தொடர்பிலான சட்டத்தினூடாக கைது செய்யப்பட்டவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவைத் தவிர வேறு எவருக்கும் மேல் நீதிமன்றினால் பிணை மறுக்கப்பட்டதாக நான் அறியவில்லை.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஒத்த  வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

எனினும் அத்தரப்பினர் பிணை வழங்குவதற்கு முன்வைத்த காரணங்களை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முன்வைத்துள்ள போதிலும் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் முன் சகலரும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.  எனவே நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பில் மக்களுக்குள்ள நம்பிக்கை இல்லாமல்போகுமாயின், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே நியாம் கிடைக்காதபோது தமக்கு நியாயம் கிடைக்குமா என்கின்ற மனோநிலை மக்கள் மத்தியில் ஏற்படுமாயின் அவர்கள் சட்டத்தை கையில் எடுப்பதற்கும் இடமுண்டு.

ஆகவே குறித்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுடன், மாத்திரம் தொடர்புடைய பிரச்சினையாக கருதாது சட்ட ஆட்சியுடன் தொடர்புபட்ட பிரச்சினையாகவே நோக்க வேண்டியுள்ளது.  

எனவே தனது விடுதலை தொடர்பில் விமல் வீரவன்ச எம்.பி. சிறைச்சாலைக்குள் போராடுவதுபோல் நாம் இதனை அரசியல் காரணியாக அடையாளப்படுத்திக்கொண்டு பாராளுமன்றுகுள்ளும் வெளியிலும் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதுடன் எஞ்சியுள்ள சட்ட முறைமைகளூடாகவும் அனுகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.