வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன் பலனாக இலங்கைக்கு சாதனை மிக்க வெற்றி

18 Apr, 2024 | 10:16 AM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக பொச்சேஸ்ட்ரூம் விளையாட்டரங்கில் புதன்கிழமை (17) இரவு நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனைகளுடன் இலங்கை 6 விக்கெட்களால் மகத்தான வெற்றியீட்டி வரலாறு படைத்தது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என இலங்கை சமப்படுத்தியது. அத்துடன் ஐசிசி சம்பியன்ஷிப் தொடருக்கான 2 புள்ளிகளைப் பெற்று 18 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அப் போட்டியில் தென் ஆபிரிக்க அணித் தலைவி  லோரா வூல்வார்ட் குவித்த ஆட்டம் இழக்காத 184 ஓட்டங்களை இலங்கை அணித் தலைவி சமரி அத்தப்பத்து குவித்த ஆட்டம் இழக்காத 195 ஓட்டங்கள் விஞ்சியதன் பலனாக இலங்கை வெற்றிபெற்றது.

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தின் அமேலியா கேர் (232 ஆ.இ.), அவுஸ்திரேலியாவின் பெலிண்டா க்ளாக் (229 ஆ.இ.) ஆகியோருக்கு அடுத்ததாக மூன்றாவது அதிகூடிய தனிநபர் எண்ணிக்கையாக சமரியின் ஆட்டம் இழக்காத  195 ஓட்டங்கள்    அமைந்தது.

தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்படட 302 ஓட்டங்களை கடந்து வெற்றிபெற்றதன் மூலம் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய வெற்றி இலக்கைக் கடந்த அணி என்ற சாதனையை இலங்கை படைத்தது. மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவே ஒரே ஒரு 300 ஓட்டங்களுக்கு மேற்பட்ட வெற்றி இலக்காகும்.

நோர்த் சிட்னி மைதானத்தில் 2012ஆம் ஆண்டு நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 289 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அவுஸ்திரேலியா கடந்திருந்ததே இதற்கு முந்தைய மிகப் பெரிய வெற்றி இலக்காக இருந்தது.

தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட இமாலய வெற்றி இலக்கான 302 ஓட்டங்ளை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 44.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இலங்கை மகளிர் அணி 300க்கும் மேற்பட்ட மொத்த எண்ணிக்கையைக் குவித்தது இதுவே முதல் தடவையாகும்.

ஆரம்பம் முதல் அதிரடியில் இறங்கிய சமரி அத்தபத்து, விஷ்மி குணரட்ன (26 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் 90 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அதன் பின்னர் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ப்ரசாதனி வீரக்கொடி (4), ஹன்சிமா கருணாரட்ன (3), காவிஷா டில்ஹாரி (0) ஆகிய மூவரும் ஆட்டம் இழந்தனர். (126 - 4 விக்.)

எனினும் சமரி அத்தபத்து, நிலக்ஷிகா சில்வா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் சாதனை மிகு 179 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இந்த இணைப்பாட்டமானது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் 5ஆவது விக்கெட்டுக்கான  அதிசிறந்த இணைப்பாட்டமாகும். 

சமரி அத்தபத்து 139 பந்துகளை எதிர்கொண்டு 26 பவுண்டறிகளையும் 5 சிக்ஸ்களையும் விளாசியிருந்தார்.

அவர் 128 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அவரது பிடியை சுனே லுஷ் 32ஆவது ஓவரில் தவறவிட்டார். அப்போது இலங்கையின் வெற்றிக்கு மேலும் 106 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதனை சாதகமாக்கிக்கொண்ட அத்தப்பத்து, நிலக்ஷிகாவுடன் இணைந்து வெற்றியை உறுதிசெய்தார்.

நிலக்ஷிகா சில்வா நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 71 பந்துகளில் 3 பவுண்டறிகள் அடங்கலாக 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 301 ஓட்டங்களைக் குவித்தது.

அணித் தலைவி லோரா வுல்வார்ட், லாரா குடோல் (31) ஆகிய இருவரும் 121 ஓட்டங்ளைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவை பலமான நிலையில் இட்டனர்.

தொடர்ந்து டெல்மி டக்கர் (1), சுனே லுஸ் (0) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஓரே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தனர். (124 - 3 விக்.)

எனினும் 4ஆவது விக்கெட்டில் மாரிஸ்ஆன் கெப் (36) உடன் 63 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் நாடின் டி க்ளாக் (35) உடன் 92 ஓட்டங்களையும் பகிர்ந்த வுல்வார்ட் அணியை பலமான நிலையில் இட்டார்.

லோரா வுல்வாட் 147 பந்துகளை எதிர்கொண்டு 23 பவண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 184 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். வுல்வார்ட் குவித்த தொடர்ச்சியான இரண்டாவது சதம் இதுவாகும்.

பந்துவீச்சில் காவிஷா டில்ஹாரி 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சமரி அத்தபத்து 59 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி விருதை சமரி அத்தபத்து வென்றெடுத்தார்.

இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான முதலாவது போட்டி மழையினால் இடையில் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் தென் ஆபிரிக்கா 7 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது.

அதற்கு முன்னர் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை கைப்பற்றியிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டி இன்று...

2024-05-26 10:41:17
news-image

MCA - ஹொண்டா ஜீ பிரிவு...

2024-05-26 09:38:45
news-image

 உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-25 20:58:29
news-image

வெற்றியைக் குறிவைத்து றக்பி அனுசரணையாளர்களை கௌரவித்த...

2024-05-25 18:27:17
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம்

2024-05-25 15:26:19
news-image

ரி20 உலகக் கிண்ண வர்ணனையாளர்கள் குழுவில்...

2024-05-25 14:18:01
news-image

வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் பி.பி.எல் கிரிக்கெட்...

2024-05-25 14:33:26
news-image

தினேஷுக்கு கிடைக்கவிருந்த வெள்ளி பறிபோனது

2024-05-25 11:43:21
news-image

ஜேர்மனியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில்...

2024-05-25 10:53:53
news-image

ராஜஸ்தானை இலகுவாக வீழ்த்திய ஹைதராபாத் இறுதிப்...

2024-05-25 00:36:22
news-image

உலக பரா ஈட்டி எறிதலில் உத்தியோகப்பற்றற்ற...

2024-05-24 21:35:49
news-image

இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்த்தாடுவது ஹைதராபாத்தா?...

2024-05-24 17:34:31