(லியோ நிரோஷ தர்ஷன்)

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாது நீர்த்துப்போக செய்யும்  நிலைமை இலங்கையில் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. திருகோணமலை மாணவர் படுகொலை மற்றும் மூதுர் மனிதாபிமான தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை என்பவற்றை முக்கிய உதாரணங்களாக கருத முடியும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 

2006 ம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அதே ஆண்டில்  மூதூரில் 17 மனிதாபிமான தொண்டு நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் போன்றன தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யவோ தண்டிக்கப்படவோ இல்லை .

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை தற்போது இணைந்து செயற்பட்டு வருகின்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயமென்றாலும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை இன்னமும் நீடித்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளது.