சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் – ஒரு பார்வை

17 Apr, 2024 | 06:00 PM
image

பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் Ph.d

லங்கையில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்களில் ஒரு சாரார் மிக வேகமாக சிங்களவர்களாக ஒருங்கிணைதலை (Assimilation) அவதானிக்க முடிகிறது. ஒருங்கிணைப்பு என்பது ஒரு சிறுபான்மை சமூகம் பெரும்பான்மை சமூகத்துடன் ஒத்திருக்கும் மதிப்புகள், நடத்தைகள் மற்றும் நம்பிக்கைகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தமதாக்கிக்கொள்ளும் - ஒருங்கிணைக்கும் செயல்முறையாகும்.

ஒரு சமூகம் ஆதிக்கமுள்ள மற்றுமொரு சமூகத்துடன் ஒருங்கிணைதல் வழக்கமானது என்பது சமூகவியலாளர்களின் முடிவுகளாகும். உலகில் இவ்வாறான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக ஆரம்பகால அமெரிக்கர்கள் தங்கள் பழக்கவழக்கங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் மொழியை பூர்வீக அமெரிக்கர்கள் மீது திணித்தமை ஒரு எடுத்துக்காட்டாகும். இதன் விளைவாக, பூர்வீக அமெரிக்கர்கள் பெரும்பாலும் தங்களது பூர்வீக பழக்கவழக்கங்களை இழந்து அமெரிக்க பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டதை குறிப்பிடலாம். இந்தவகையில் குறிப்பாக இலங்கையின் தென்மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற இந்தியத்தமிழர்களிடம் காணப்படும் இன ஒருங்கிணைப்பினை மேலோட்டமாக எடுத்துக் கூறுவது இக்கட்டுரையின் பிரதானமான இலக்காகும்.

பல்வேறு  சந்தர்ப்பங்களில்  தெனியாய, எல்பிட்டிய, உடுகம. காலி. போன்ற இடங்களில் வாழ்கின்ற இந்திய தமிழர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இதன்போது அவதானிக்கப்பட்ட மாற்றங்களையே இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதனை இந்திய தமிழர்களின் இன ஒருங்கிணைதல் தொடர்பான சமூகவியல் ஆய்விற்கான ஒரு தொடக்கமாக பார்ப்பதே நல்லது. 

தென்னிலங்கையில் வாழ்ந்துவருகின்ற சிங்களமக்களை கூர்ந்து ஆராய்ந்த சமூகவியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களான Gananath Obeyesekere (1985) Michael Roberts (1989) பிற்காலத்தில் இந்த ஆய்வுகளை பல சந்தர்ப்பங்களில் தமது கட்டுரைகளில் வெளிக்கொண்டு வந்தவர்களான Asoka Bandarage (1999) K.T. Silva (2009)  மற்றும் Nihal Perera (1999) போன்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்றால் தென்னிலங்கையில் வாழ்ந்து வரும் சிங்களவர்களில் ‘சலாகம’, ‘துறவா’ மற்றும் ‘கரவா’  போன்றவர்கள் ஆரம்பத்தில்  தென்னிந்திய கரையோரங்களில் இருந்து குடிபெயர்ந்து வந்த ‘குருகுல’ மக்கள் தென்னிலங்கையின் கரையோரங்களில் வாழ்ந்து வந்த சிங்களவர்களுடன் ஒன்றிணைந்து உருவாகிய ஒரு புதிய சமூக அமைப்பு என்று கூறுகின்றனர். இவர்கள் பெருந்தோட்ட கட்டமைப்பு விஸ்தரிக்கப்படும் போது வர்த்தகம் மற்றும் தொழில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சிங்கள சமூகத்தில் உயர்நிலைகளில் செல்வசெழிப்புடன் காணப்பட்ட ‘றதல்ல’  சாதியினருக்கு இணையாக முன்னோக்கி நகர்ந்து விட்டனர் என்பதும் ஆய்வாளர்களின் கணிப்பீடாகும். 

இந்நிலையில தென்னிலங்கையில் வாழ்கின்ற இந்திய தமிழர்கள் அங்கு வாழ்கின்ற பெரும்பான்மை சிங்களவர்களுடன் ஒருங்கிணையும்போது கடந்த காலத்தில்; நிகழ்ந்தது போல ஒரு பலமான, ஒரு புதிய இனம் தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா? அல்லது எவ்வாறான நிலவரம் தோன்றலாம் என்பது இப்போதைய நிலையில் அது ஒரு அனுமானமாகவே இருக்கும். பெரும்பாலும் புதிதாக இணைக்கப்படுகின்ற  இனம் அல்லது சமூகக் குழுக்கள் ஏற்கனவே உள்ள சமூகத்தின் உயர் அடிக்கில் இணைந்துக்கொள்வதற்கு பதிலாக அந்த சமூகத்தில்  காணப்படும் கீழ் அடுக்கில் இணைந்து கொள்வதையே காணக்கூடியதாக இருப்பதை உலக வரலாறுகள் எடுத்துக்காட்டுகின்றன.

தென்னிலங்கையில் உள்ள மாவட்டங்களில் வாழ்கின்ற தமிழர்களில் (இலங்கை மற்றும் இந்தியத்தமிழர்கள்- இம்மாவட்டங்களில் இலங்கை தமிழர்களின எண்ணிக்கை மிக சிறியதாகவே உள்ளது) களுத்துறை மாவட்டத்தில்  46,252 (3.56வீதம்), காலி மாவட்டத்தில் 20,022 (1.99 வீதம்), மாத்தறை மாவட்டத்தில் 20,899 (2.39வீதம்) மொத்தமாக இம்மாவட்டங்களில் வாழ்கின்ற தமிழர்களின் எண்ணிக்கை 87,173 (7.94வீதம்) ஆகும். இவர்களும் இந்தியாவில் இருந்து பெருந்தோட்டத்திற்காக அழைத்தவரப்பட்டவர்களின் சந்ததிகள்தான் என்பதை யாவரும் அறிவோம் இவர்களில் கணிசமானோர் அங்கு வளர்ச்சியடைந்திருந்த தனியார் தோட்டங்களிலேயே வேலைக்கமர்த்தப்பட்டனர். எனினும் 1972–-75 காணிச் சீர்திருத்தத்தின் பின்னர் பெருந்தோட்டங்களை வைத்திருந்த  தனியார்  முதலாளிகள் தமது உடமைகளாக 50 ஏக்கர் பெருந்தோட்ட காணி மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற நிலை உருவானது.  காணிகளை பிரிக்கும்போது ஒரு பகுதியினர் பெருந்தோட்டங்களுக்கு உள்வாக்கப்பட்ட நிலையில் ஏனையோர் தனியார் காணியில் தொடர்ந்தும் தொழிலாளிகளாக தொழில் செய்து வருகின்றனர். இவ்வாறு தனியார் தோட்டங்களில் அல்லது சிறுதேயிலைதோட்ட உடைமையாளர்களிடம் சுமார் 50,000 இற்கும் அதிகமானோர்  தொழில்புரிவதாக அறியக்கிடைக்கின்றது.

மேற்குறிப்பிட்டவாறு களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வாழ்கின்ற தமிழர்களில் தோரயமாக 20 வீதமானவர்கள் தம்மீது சிங்கள மக்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த தாக்குதலை பொருத்துக்கொள்ள முடியாத நிலையில் வடபகுதிக்கு இடம்பெயர்ந்துவிட்டவர்களாகவும்  மேலும் தோரயமாக மற்றுமொறு 10 வீதத்தினர் இலங்கை இந்திய உடன்படிக்கையின்படி தாயகம் திரும்பியவர்களாகவும் இடம் பெயர்ந்துவிட்டனர். இப்போது இங்கு எஞ்சியிருப்போரில் அதிகமானவர்கள்  இங்கு சிறுதேயிலை தோட்டங்களில்  வேலை செய்பவர்களாகவும், மற்றுமொரு பகுதியினர் செம்பனை, கறுவா மற்றும் பல்வேறுபட்ட தொழில்களில் நாளாந்த வேதனத்திற்கு வேலை செய்பவர்களாகவும் காணப்படுகின்றனர். சிறுதேயிலைதோட்ட உடைமையாளர்களிடம் வேலை செய்பவர்களுக்கு  அடிப்படை சம்பளம் மட்டுமே வழங்கப்படுகின்றன. இவர்களில் அதிகமானோருக்கு சுகாதாரமிக்க குடியிருப்புகள் இல்லை, தற்காலிக குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். அநேகமான இத்தொழிலாளர்கள் சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்களிடம் கடன்பட்டடுள்ளவர்களாகவும், அந்தக் கடனை திருப்பி வழங்கும் வகையில் தோட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வேலை செய்ய வேண்டியவர்களாகவும் உள்ளனர். ஒரு வகையில் இலங்கையில் நாளாந்த வேலைக்கு  ஊழியம் செய்யும் தொழிலாளர்களில் படுபாதாளத்தில் இருப்பவர்களாக இம்மக்கள் தென்னிலங்கை மாவட்டங்களில் வாழ்ந்து வருவதாகவே காணமுடிகின்றது. 

நாம் ஏற்கனவே குறிப்பட்டதுபோல இம்மாவட்டஙகளில் சில இடங்களில் நாம் மேற்கோண்ட சந்திப்புகளின்போது அவர்களின் அனுமதியுடன் எடுக்கப்பட்ட நிழல் படங்கள் வாசகர்கள் காணலாம்.

படத்தில் காணப்படுபவர்கள் யாவரும் தமிழர்களாகும். ஆனால் இவர்களின் உடைகள் மற்றும் தோற்றம் என்பவற்றை அவதானிக்கும்போது கிராமங்களில் வாழ்கின்ற சிங்களவர்கள்போல தோற்றமளிக்கின்றனர். படங்களில் காணப்படும் ஆண்களை இவர் சிங்களவர் என்றோ  தமிழர் என்றோ வேறுபடுத்துவது கடினமாகும். தோற்றத்தில் இரு இனத்தவரும் பொதுவாக ஒரே தோற்றமுடையவர்களே. எனினும் இரு இனப்பிரிவிலும் காணப்படும் பெண்களை வேறுபடுத்தலாம். நாம் சந்தித்வர்களில் ஒரு பெண்னைத்தவிர வேறு எவரையும் தமிழர்கள் என்ற அடையாளத்திற்குள் கொண்டு வரமுடியவில்லை. பல நிலைகளில் இவர்கள் யாவரும் (ஆண், பெண்) இருபாலாரும் சிங்களவர்கள்போலவே இருக்கின்றனர். இவர்களிடம் ‘தங்களுடைய இன அடையாளம் என்ன என்று’ வினவியபோது இவர்கள் யாவரும் தங்களை ‘இந்தியத்தமிழர்’ என்ற இன அடையாளத்தையே வலியுறுத்துபவர்களாக உள்ளனர். இதற்கு உடுகமயில்  உள்ள ஸ்டொக்லேன்ட் டிவிசனைச்சேர்ந்த இராமகிருஸ்ணன் (வயது 60,) கூறும் காரணம் “ நாங்கள் மலையகத்தில் வாழ்பவர்களாக இல்லை, நாங்கள் வாழ்கின்ற இடம் தாழ் நிலங்களாகவே உள்ளன. அதனால் மலையகம் என்ற அடையாளம்  எங்களுக்கு பொருந்துவதாக இல்லை”.இராமகிருஸ்ணன் தொடர்ந்து குறிப்பிடும்போது தங்களுக்கென தமிழ் அரசியல் அமைப்புகளின் அரவணைப்பு கிடைப்பதில்லை, தாங்கள் தனித்து விடப்பட்டவர்களாகவே இருக்கின்றோம், இங்குள்ள சிங்கள மக்களுடன் சகோதரத்துவதுடன் வாழ்வதே சரியென்றும் எண்ணுகின்றோம்…. என்று கூறுகின்றார். இங்கு ஆரம்பகாலத்தில தோட்டங்களில் நிர்மானிக்கப்பட்ட மாரியம்மன் ஆலயங்கள் உள்ளன. இயன்ற வரையில் இந்து ஆலயம் பராமரிக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும் இங்குள்ள சிங்கள மக்களுடன் ஒன்று கலந்துவாழ்வதற்கான ஒரு இணைப்புபாலமாக கிறிஸ்தவ ஆலயங்கள் விளங்குவதாக அறிய முடிகின்றது. அதனால் இங்குள்ள தமிழர்கள் தாம்பொதுவாக  சந்திக்கின்ற இடங்கள் கிறிஸ்தவ ஆலயங்களாகவே உள்ளன. கிறிஸ்தவ பாதிரியார்களும் ஆலயங்களும் இங்குள்ள தமிழ் மக்களுக்கு தன்னிகரற்ற பாதுகாப்பு அரணாக இருந்து வருகின்றதை எவரும் மறுப்பதற்கில்லை.

மேலே எடுத்துக் காட்டியது போல இங்கு வாழ்கின்ற இந்தியத் தமிழர்கள் நலிவடைந்து செல்வதற்கான ஒரு காரணம் வடகிழக்கில் இடம்பெற்ற தனிநாடு போராட்டமாகும். அந்த போராட்டத்தின் போது இங்கு வாழ்கின்ற பெருபான்மை மக்கள் ‘தமிழர் என்றால்  தனிநாடு கேட்பவன் என்று இவர்களை பல நிலைகளிலும் துச்சமாக கருதி துன்புறுத்தி வந்தனர். இவர்கள் வாழ்ந்த வீடுகளுக்கு இரவு நேரங்களில் கல்வீசி ‘கொட்டியா’ ‘கொட்டியா…’ என்று கூச்சலிட்டனர். தோட்டத்தில் இருக்கும் இளம் தமிழ் பெண்களை வஞ்சிப்பது, பஸ் போன்ற பொது போக்குவரத்து சாதனங்களில் இருக்கையில் பயணம் செய்தால் இவர்களை  எழுப்பிவிட்டு பெரும்பான்மை மக்கள் இருந்து பயணம் செய்வது இப்படி கூறலாம். பொதுவாக தமிழர்கள்; தென்பகுதிகளில் பஸ்ஸில் நின்று கொண்டு பயணம் செய்வதையே  வழக்கமாக்கிகொண்ட நினைவுகளை அங்குள்ளவர்கள் மனம் நொந்து பகிர்ந்து கொண்டனர். தமிழர்கள் பஸ்ஸில் பொதிகள் கொண்டுபோவதை தடுப்பது,  அவ்வாறே பஸ்ஸில் ஏற்றினாலும் தமிழ் மாணவர்கள் தங்களுக்கு தமிழ் மொழியில் பேசுவதை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது போன்ற இன்னொரன்ன காரணங்களில் இங்கு வாழ்கின்ற இந்தியத் தமிழர்கள் பஸ் போக்குவரத்தின்போது பல்வேறு சவால்களை எதிர் நோக்குபவர்களாக காணப்பட்டனர் இந்நிலைமையை தவிர்த்துக் கொள்வதற்காக இயன்றவரை தமிழ் மாணவர்களை குறிப்பாக வயது வந்த மாணவிகள் தமிழ் இளைஞர்கள் போக்குவரத்தினை தவிர்த்துக் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அவ்வாறே பொது போக்குவரத்துகளில் பயணம் மேற்கொள்ளும்போது அல்லது பொது இடங்களில் வரும்போது தம்மை ஒரு பெரும்பான்மை இனமாக அலங்கரித்துக் கொண்டுவர வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். இது ஒரு வகையில் இவர்கள் பெரும்பான்மை மக்களுடன் ஒருங்கிணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக மாறியது. 

இரண்டாவதாக இவர்கள் அதிகமானோர் தோட்டங்களில் வேலை செய்பவர்களாகவும் அங்கு வழங்கப்படும் குறைந்தபட்ச வேதனத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய  கட்டாயத்தில் இப்பிரதேசத்தின் வறுமையில் வாழ்கின்றவர்களாக தனித்து காணப்பட்டனர். வறுமை காரணமாக போசாக்கின்மை போதுமானளவு சுகாதார பழக்கவழக்கங்கள் பின்பற்ற முடியாமல் போனமை, இளவயது திருமணம், போதுமான பராமரிப்பில்லாத குழந்தைகள் போன்றவற்றின் பிரதிபிம்பங்களாகவே கணிசமான இந்திய தமிழர்கள் நிலை காணப்படுகின்றது. இவர்களில் அதிகமானவர்கள் பொது இடங்களில் பெரும்பான்மையாக மொழியிலேயே தொடர் கொள்பவர்களாக காணப்படுகின்றனர்.  

மூன்றாவதாக இப்பகுதியில் வாழ்கின்ற யாவருக்கும் தாய்மொழி மூலக் கல்வியை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு யாவருக்கும் கிடைக்கவில்லை. இம்மாவட்டங்களில் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளாக அனின்;கந்த. என்சல்வத்த, என்போர்ட் போன்றலை மட்டுமே உள்ளன. இதைவிட புனித மெத்யூ பாடசாலை இருமொழி பாடசாலையாக உள்ளது. இப்பாடசாலைகளும். பல்லேகம, கொலவெனிகம இடங்களில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தமது பிள்ளைகளை இப்பாடசாலைகளுக்கு தினந்தோறும் அனுப்பிவைப்பதற்கு அவர்கள்  போதுமான வருமானத்தைப் பெற்றுக் கொள்பவர்களாக இல்லை.. இதனால் அவர்கள் சிங்களமொழி மூலமான பாடசாலைகளில் படிப்பவர்களாவும் அல்லது பாடசாலைக்கே செல்ல முடியாதவர்களாக வாழ்வதற்கு நிர்பந்திக்கப்படுகின்றனர். சில இடங்களில் ஆரம்பகாலப்பகுதியில் காணப்பட்ட தமிழ்மொழி மூலமான பாடசாலைகள் இப்போது  மூடப்பட்டுவிட்டன. உதாரணமாக உடுகமயில் உள்ள தமிழ் பாடசாலை மூடப்பட்டு இப்போது அது வியாபாரம் மத்திய நிலையமாக காணப்படுகின்றது. இதனால் உடுகம பகுதியில் வாழ்கின்ற தமிழர்கள் கடந்த பல வருடங்களாக தமக்கென தமிழ் மொழி மூலம் கல்வியை பெற்றுக்கொள்ளும் அடிப்படை உரிமையை இழந்து நிற்பவர்களாக உள்ளனர்.  பாடசாலகையின் இன்மையால் தமிழ்மொழியில் பேசுபவர்களாக இருப்பினும் எழுதவும் வாசிக்கவும் முடியாதவர்களாக இருக்கின்றனர். 

இங்குள்ள தமிழ்மக்களிடையே காணப்படும் மற்றுமொறு பண்பையும் அவதானிக்கலாம். புல தமிழ் இளைஞர்கள் சிங்கள மொழியில் மட்டமே பேசுகின்றனர் ‘தமிழ் பேச வாரது’ என்கின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது விட்டாலும் அவ்வாறான இளைஞர்கள் இதனை பெருமையுடன் குறிப்பிடுவது வேதனை தருவதாகவே உள்ளது. இங்கு அவதானிக்கப்படும் மற்றுமொறு விடயம் கலப்பு திருமணமாகும். தமிழ் இளைஞர்கள் பலர் சிங்களப் பெண்களை காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஆனாலும் மறுபுறத்தில்  தமிழ் பெண்களை காதலித்தாலும் அவ்வாறான உறவுகள் திருமணமாக நிறைவுகாண்பது அறிதாகவே நிகழ்ந்துள்ளன.

மேற்படி அவதானிக்கப்பட்ட பண்பாட்டு மாற்றங்களை காலி, மாத்தறை, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாத்திரம் இடம்பெற்று வருவதாக குறிப்பிட முடியாது. இந்நிகழ்வுகள் இரத்தினபுரி, கேகாலை மற்றும் மொனராகலை மாவட்டஙகளிலும் இடம்பெறுகின்றன. இங்குள்ளவர்கள் யாவரும் ஒட்டுமொத்தமாக சிங்களவர்களுடன் ஒருங்கிணைந்து விட்டனர்  என்ற முடிவிற்கும் வரமுடியாது. இங்கு வாழ்கின்ற கணிசமானவர்களுக்கு தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவது மிக்க சவாலானதாக இருந்தபோதும் தாம்வாழும் இடங்களில் நலன்புரி அமைப்புகள், ஆலயங்களில் அமைக்கப்படும் சமூக குழுக்கள் மற்றும் பாடசாலைகள் ஊடாக தமது இருப்பை பாதுகாத்துக் கொள்கின்றனர். இப்பிரதேசங்களில் இருந்து பல பட்டதாரிகள், வழக்கறிஞர்கள் (உதாரணமாக: இரத்தினபுரி திரு சுகுமார் விஜயகுமார்) உருவாகியுள்ளனர். நலன்புரி அமைப்புகள் என்ற வகையில் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் நிதி உதவியுடன் கோபியோ மேற்கொண்ட கல்வி அபிவிருத்தி பணிகள் (முன்னின்று நடத்தியவர்கள்: திருவாளர்கள் பி.பி.தேவராஜ், பாலா) மற்றும் மலையக கல்வி அபிவிருத்திமன்றம், மொனராகலையில் கண்டி சமூக அபிவிருத்தி நிலையம் என்பனவற்றை குறிப்பிடலாம். மேலும் இப்பிரதேசங்களில் கல்விகற்று தொழில்புரிபவர்களிடம் காணப்படும் இருமொழிதேர்ச்சியானது இவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு சிறந்த வளவாளர்களாகவும் பயன்படுகின்றனர்.

இருப்பினும் இம்மாவட்டங்களில் வசிப்பவர்களில் ஒருசாரார் அங்கு வாழ்கின்ற சிங்கள மக்களுடன் ஒருங்கிணைந்திருந்தாலும் அவ்வாறானவர்களை  தமக்கு இணையான கௌரவத்தினை வழங்கி ஏற்றுக்கொண்டுள்ளனரா? ஆப்படி இல்லாத நிலையில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல ஒரு புதியதொரு அடையாளம் தேன்றுமா? இவ்வாறானதொறு நகர்வினை இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் எவ்வாறு உணர்கின்றனர் ?. தென்னிலங்கையில் காணப்படும் இந்த மாற்றங்கள் இங்கு வாழ்கின்ற இந்தியத்தமிர்களிடம் மட்டுமே காணப்படுதாக கருதுவதற்கில்லை. தென்னிலங்கையில் வாழ்கின்ற இந்த மாற்றங்களில் கணிசமானவைகள் மலையகத்திலும் பரவியுள்ளன. அதன் சமகால போக்கினை மற்றுமெறு கட்டுரையில் அவதானிக்கலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில், தெற்காசிய அரசியலுக்கான புதிய பாடத்திட்டத்தை...

2024-05-29 14:45:07
news-image

அரசியல் தீர்வு இல்லாத நல்லிணக்கம் நம்பிக்கை...

2024-05-28 16:14:08
news-image

8 தடவை இடம்பெயர்ந்துள்ளோம் எத்தனை காலத்திற்கு...

2024-05-28 11:49:28
news-image

"ஒபறேசன் சஜப " ; பச்சைக்கட்சியை...

2024-05-28 10:50:31
news-image

விமானங்களில் ஏற்படும் திகில் அனுபவம் !...

2024-05-28 10:33:20
news-image

ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காக ஏங்கும்...

2024-05-27 16:39:16
news-image

ஒப்பந்த முறை கொடுப்பனவுகளுக்கு பழக்கப்பட்டுவிட்ட தோட்டத்...

2024-05-27 11:22:09
news-image

ஜனாதிபதித் தேர்தலும் மலையக மக்களும்..!

2024-05-27 14:16:32
news-image

ஈரான் ஜனாதிபதியின் மரணத்திற்கு யார் காரணம்?

2024-05-26 18:57:01
news-image

அஷ்ரப் அருங்காட்சியகமும் வாயால் சுட்ட வடைகளும்

2024-05-26 18:54:31
news-image

ஸ்லோவாக்கிய பிரதமர் கொலை முயற்சியும் மேற்குலகின்...

2024-05-26 18:53:55
news-image

நுணலும் தன் வாயால் கெடும்

2024-05-26 18:10:34