(எம்.மனோசித்ரா)
பொருளாதார வளர்ச்சி வேகத்துக்கமைய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவே தெரிகிறது. ஆனால் அது முழுமையாக அவ்வாறு இடம்பெறத் தேவையில்லை என்று நாம் எண்ணுகின்றோம். எவ்வாறிருப்பினும் சர்வதேச கடன் வழங்னர்களுடன் எட்டப்படும் இணக்கப்பாட்டு ஒப்பந்தங்களில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையைப் பேண வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஏப்ரலுக்குள் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து, 12.7 பில்லியன் டொலர் கடன் தொகையை மறுசீரமைப்பதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகவிருந்தது.
அரசியலுக்கு அப்பால் சென்று நாம் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். யார் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தாலும், அவர்கள் இலங்கை மக்களுக்காகவே அதனை செய்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்னெடுக்கப்படும் இந்த பேச்சுவார்த்தைகளுக்கமைய 2040ஆம் ஆண்டு வரை நாம் செயற்பட வேண்டும்.
சுமார் 10 வருடங்களுக்கான இணக்கப்பாட்டை எட்டுவதே இதன் பொருளாகும். ஆனால் தற்போதைய அரசாங்கம் ஆகக் கூடியது இன்னும் 6 மாதங்கள் மாத்திரமே ஆட்சியிலிருக்கும். எனவே இதில் அரசாங்கத்துக்கு அப்பால், எதிர்க்கட்சியின் நிலைப்பாடும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.
உதாரணத்துக்கு மே மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் பின்னர், சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் அவரும் அந்த ஒப்பந்தத்துக்கமையவே செயற்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் நாம் மீண்டும் வங்குரோத்தடைந்த நாடாகி விடுவோம். எவ்வாறிருப்பினும் மீண்டுமொருமுறை கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் இலங்கைக்கு இல்லை.
ஆனால் சில அரசியல் கட்சிகள் இது தொடர்பான புரிதல் இன்றி தவறான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றன. மக்களை ஏமாற்றுவதற்கும் எல்லையொன்று உள்ளது. கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியமானதாகும். எனவே எந்தளவு விரைவாக கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றதோ, அந்தளவுக்கு சாதகமான விளைவுகள் முழு நாட்டு மக்களுக்கும் ஏற்படும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அடிப்படையாகக் கொண்டே கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என்று கடன் வழங்குனர்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் தற்போது நாம் எதிர்பார்ப்பதை விட பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகமாகக் காணப்பட்டால், அந்த நேர்மறையான வளர்ச்சியின் அதிக பங்கு தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர். உற்பத்தி பொருளாதார டொலர் அடிப்படையிலேயே மதிப்பிடப்படும். இது தொழிநுட்பக் காரணியாகும்.
எமது பொருளாதார வளர்ச்சி வேகத்துக்கமைய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவே தெரிகிறது. ஆனால் அது முழுமையாக அவ்வாறு இடம்பெறத் தேவையில்லை என்று நாம் எண்ணுகின்றோம். கடன் மறுசீரமைப்பில் பொருளாதார வளர்ச்சி வேகம் ஓரளவு தாக்கம் செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் நூறு வீதம் தாக்கம் செலுத்தினால் அது எமக்கு எதிர்மறையான தாக்கத்தை அதிகரிக்கும்.
இன்னும் 6 மாதங்களே தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என்பதால், எட்டப்படும் இணக்கப்பாடுகளில் வெளிப்படைத் தன்மையைப் பேணுமாறு வலியுறுத்துகின்றோம். சர்வதேசக் கடன்களில் ராஜபக்ஷர்கள் பாரியளவில் மோசடி செய்துள்ளனர். 8 டிரில்லியன் கடன் காணப்படுகிறது. ஆனால் சொத்து மதிப்பு 2 டிரில்லியனாகும். ஆனால் ராஜபக்ஷர்களால் கொள்ளையிடப்பட்ட ஒவ்வொரு டொலரும் எமது ஆட்சியில் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும். எனவே பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதற்கு நாம் தயாராக இல்லை. யதார்த்தத்தை நாம் தொடர்ந்தும் மக்களுக்கு தெளிவுபடுத்திக் கொண்டிருப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM