இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும் கழுவன்கேணி மக்கள்! 

Published By: Nanthini

21 Apr, 2024 | 10:26 AM
image

"தொலைத்த இடத்தில் தேடுவோம்" - ‍பேராசிரியர் சி. மெளனகுரு (01)

(மா. உஷாநந்தினி)

றைந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரம் இரண்டாம் நினைவுப் பேருரை நிகழ்வு கடந்த 6ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 'தொலைத்த இடத்தில் தேடுவோம்' என்ற தலைப்பில் பேராசிரியர் சி. மெளனகுரு ஆற்றிய பேருரையின் ஒரு பகுதியாக, அவர் 'உத்தியாக்கள்' சடங்கு முறையை பற்றி வர்ணித்தார். 

இந்த சடங்கு முறையை பற்றி கூற முற்பட்டபோது, அவர் "இழந்துபோன ஒரு பொருளை தேட வேண்டுமானால், முதலில் அதை தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும். வெளிச்சத்தில் மாத்திரமே பொருள் இருக்கும் என்ற பொதுக் கட்டமைப்புக்குள் இருந்து வெளியே வந்து, இருட்டினிலும் பொருள் தெரியும் என்ற மாற்றுக் கருத்தையும் ஏற்க வேண்டும் என்கிற கருத்தை ஆய்வாளர்களுக்கு, குறிப்பாக, வரலாற்று ஆய்வாளர்கள், பண்பாட்டு ஆய்வாளர்கள், அரசியல் விஞ்ஞான ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றுத் தகவல்களை தேடித் திரிபவர்களுக்கு எடுத்துரைத்தார். இது சிந்திக்கவேண்டிய ஒரு செய்தி.

அத்துடன், அவர் இந்த சடங்கு முறையை ஒரு கதை வடிவில் சொன்ன விதம் சுவாரஸ்யமானது. 

"இவை கதைகள்தான். ஆனால், கற்பனைகள் அல்ல. இட்டுக்கட்டியவை அல்ல. நான் நேரில் கண்டு அனுபவித்த சம்பவங்கள். இருட்டுக்குள் நாம் தொலைத்தவை. வெளிச்சம் படாதவை" என்று கூறி கதை சொல்ல ஆரம்பித்தார். 

மட்டக்களப்பில் வேடுவ பழங்குடிகள்  

"கிழக்கு மாகாணத்தில் பழங்குடி மக்களான வேடர்களின் ஒரு சடங்கு முறையாக, இறந்துபோன மூதாதையர்களின் ஆன்மாக்களோடு மக்கள் இயல்பாக பேசும் சடங்கு காணப்படுகிறது. 

 மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கழுவன்கேணி என்கிற கிராமத்தில் இந்த சடங்கு நடத்தப்பட்டு வருகிறது. 

கழுவன்கேணி மட்டக்களப்பில் பழங்குடிகளான வேடுவ குல மக்கள் வதியும் பூமி. வேடர்கள் இலங்கையின் பூர்வீக குடிகள் மாத்திரமன்றி கிழக்கு மாகாணம் எங்கும் பரவி வாழ்ந்துள்ளனர். 

இயக்கர் என அழைக்கப்படும் பூர்வீக குடிகளே இவர்கள் என்பது பொது அபிப்பிராயம். 

மஹாவம்சம் அவர்களை விஜயனின் மனைவி குவேனி வழித்தோன்றல்களாக கூறுகிறது. அவர்களை பற்றி செலிக்மான், வில்லியம் ஹெய்கர் போன்ற ஆய்வாளர்கள் தந்த கருத்துக்கள் அவர்களை ஒரு பூர்வீகக் குடிகளாக, அநாகரிக  மாந்தர்களாக, கையில் வில்லுடன் வாழும் காட்டு மனிதர்களாக சித்திரிக்கும்.

 அன்று ஆய்வாளர்களால் அவர்கள் கட்டமைக்கப்பட்ட விதம் அது. ஆனால், மானிடவியல் ஆய்வாளரான பேராசிரியர் கணநாத் ஒபயசேகர இந்த வேடுவ குல மக்களிடம் செழிப்பான ஒரு புராதன பண்பாட்டினை காண்கிறார். 

இந்த வேடுவர்கள் கண்டி மன்னர் பிரித்தானியருடன் செய்த போரில் மன்னனுக்கு உதவியவர்களாகவும், பெரும் நில உரிமை பூண்டவர்களாகவும் காண்கிறார். அவரிடம் இதற்கான ஆதாரங்களும் ஆவணங்களும் உண்டு என அந்த ஆய்வாளர் கூறுகிறார். ஆனால், கிழக்கு மாகாண வேடர்கள் பற்றிய ஆய்வுகள் இங்கே மிகக் குறைவு. 

இந்த பின்னணியில்தான் கிழக்கில் இந்த கடுவன்கேணி வேடர்கள் நிகழ்த்திய சடங்கு பற்றிய கதையை நாம் அணுக வேண்டும். 

என்னிடம் கற்ற மாணவன் ஒருவன் அக்குடியில் வந்தவன். கழுவன்கேணி வேடர் நிகழ்த்திய சடங்கைக் காண என்னை அவன் அழைத்திருந்தான். மிகுந்த பிரயாணக் கஷ்டங்களின் பின்னர் நான் சடங்கு நடைபெறும் இடத்தை அடைந்தேன். 

முன்னோர் ஆவிகள் மீதான மக்களின் நம்பிக்கை 

அந்த கிராமத்தில் ஒரு அடர்ந்த காட்டை வெட்டவெளியாக்கி, துப்புரவு செய்து, பந்தல்கள் அமைத்து, மடை பரப்பி தம் முன்னோரை வரவழைக்க ஒரு பெரும் கூட்டம் நின்றுகொண்டிருந்தது. 

இறந்துபோனவர்கள் மீண்டும் வருவார்களா, உரையாடுவார்களா, எப்படி உரையாடுவார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். ஆனால், அந்த பழங்குடி மக்களை பொறுத்தவரையில் சந்தேகத்துக்கே இடமில்லை. அவர்களுக்கு அது நிஜம். அசைக்க முடியாத உண்மை. 

நம் பார்வையில் அதனை பார்க்காமல் அவர்கள் பார்வையில் அவர்கள் மனோ நிலையில் இருந்து பார்த்தால்தான் அதை புரிந்துகொள்ள முடியும். 

அங்கு சென்ற என்னை அவர்கள் அன்போடு வரவேற்று இலைக்கஞ்சி கொடுத்தனர். மதிய உணவும் தந்தனர். உணவு உறவை ஏற்படுத்தியது. அவர்களோடு அளவளாவினேன். பின்வரும் தகவல்கள் கிடைத்தன. 

அவர்களின் நம்பிக்கையின்படி, இறந்துபோன மூதாதையர்கள் தினமும் காலையில் இருந்து மாலை வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், தெற்கிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கியும் ஆவி உருவில் வான்வெளியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். மண்ணில் வாழும் தம் சந்ததியினரின் நடவடிக்கைகளை கவனித்தபடி பிரயாணம் செய்துகொண்டிருக்கிறார்கள். 

"நாங்கள் அவர்களின் பாதுகாப்பில் வாழ்கிறோம்" என அங்கிருந்த ஒரு முதியவர் கூறினார். அவரிடம் அந்த பாதுகாப்பு நம்பிக்கையை கண்டேன். 

வேடுவக் குடிகளில் 'பனுவளக்குடி' 

கிழக்கிலங்கையில் வேடர்கள் மத்தியில் ஏழு குடிகள் இருந்தன. அவையாவன:

பனுவளக்குடி, செல்லாப்பத்துக்குடி, திருதக்காகணிகுடி, செல்லாயன்குடி, ஆக்கமுத்துக்குடி, வெல்லம்பாணன்குடி, வெரிஹடிகத்தேகுடி. 

இந்த ஒவ்வொரு குடிக்கும் ஒரு ஆதித்தாய் உண்டு. அந்த ஆதித்தாயின் மரபுவழிப் புதல்வர்கள் தான் அந்த குடியினர். 

அங்கு அந்த ஏழு குடிகளுள் ஒன்றான பனுவளக் குடியினரே கூடியிருந்தனர். அக்குடியில் வந்தவளும் இப்போது இருப்பவளுமான பொன்னி என்பவள் உடலில் இறந்துபோன முன்னோர்கள் வந்து புகுந்து தம்முடன் உரையாடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் அக்குடியினர் காத்திருந்தனர். 

சடங்கு ஆரம்பம் - பெண்தெய்வங்களின் ஆட்டம் 

கொட்டு எனப்படும் பறையை ஒருவர் வாசிக்கத் தொடங்கினார். சடங்குச் சூழல் உருவாகிவிட்டது. சடங்குகளும் ஆரம்பமாகின. 

குடாநீலி, மாநீலி, கரடித்தெய்வம் ஆகிய தெய்வங்கள் பொன்னி உடலுக்குள் புகுந்தன. அவை, அந்த மக்களை ஆசீர்வதித்தன. இந்த பெண்தெய்வங்கள் அம்பு, வில் பிடித்து ஆடின. தேன் எடுக்கச் சென்றன. தேன் எடுப்பதில் தங்களுடன் போட்டி போடும் கரடியை சாந்தப்படுத்தின. 

சடங்கு என்பது நிகழ்ந்த ஒன்றை மீளவும் நிகழ்த்திக் காட்டுதல் என்று படித்திருக்கிறேன். அங்கே அவர்கள் தமது புராதன வாழ்க்கையை நிகழ்த்திக் காட்டியது போல் எனக்குப்பட்டது. 

'உத்தியாக்கள்'

அதன் பின், அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த இறந்த முன்னோர்கள் ஒருவர் பின் ஒருவராக பொன்னியின் உடலுக்குள் புகுந்து அங்கிருந்த மக்களுடன் பேச ஆரம்பித்தனர். 

இறந்த முன்னோர்களின் ஆத்மாக்களை அந்த மக்கள் 'உத்தியாக்கள்' என அழைத்தனர். கன்னட மொழியில் 'உத்தி' என்றால் 'மேலே' என்று பொருள். 

மக்களோடு பேசும் ஆத்மாக்கள்

முதலில், பொன்னி உடலில் அந்த குடியின் ஆதித் தலைவன் கழுவன் வந்தான். அவன் தனது வாரிசுகளை அணைத்து மகிழ்ந்து ஆசீர்வதித்தான். அவர்களோடு உரையாடினான். 

அவன் தன் மனைவி கந்தியும் வந்திருப்பதாக கூறிச் சென்றான். கந்தி, சடங்கு நடத்திக்கொண்டிருந்த அந்த பனுவளக் குடியினரின் ஆதித்தாய். கந்தியும் வந்து வாரிசுகளை அணைத்து ஆசீர்வதித்தாள். 

அவளும் சென்ற பின்னர், இடைக்காலத்தில் அக்குடியின் தலைவனாக இருந்த தேவர் வந்தார். மக்களுடன் பேசி நலம் விசாரித்தார். அவரும், தன் மனைவி வந்திருப்பதாக கூறிச் சென்றார். அடுத்து, அவரது மனைவி ஆச்சி வந்து பேசினாள். 

அதன் பின்னர், பல காலங்களுக்கு முன்னர் இதே சடங்குகளை செய்து இறந்துபோன கணபதி என்பவர் வந்தார். அவர் ஒரு தலைமுறைக்கு முன் பூசைகளை நடத்திய பூசாரியாரான 'கப்புவனார்' என அழைக்கப்படுபவர். 

அவருக்குப் பின்னர், காத்தமுத்து என்றொருவர் வந்தார். அடுத்து, அண்மையில் இறந்துபோன அவரின் மகன் சாந்தலிங்கமும் வந்தார்.

கணவரின் ஆத்மாவோடு பேச மறுத்த மனைவி! 

இந்த சாந்தலிங்கத்தின் மனைவி பெயர் இராசம்மா. அவளும் அந்த மக்கள் கூட்டத்தில் ஒருத்தியாக அந்த சடங்கில் கலந்துகொண்டிருந்தாள். இன்றும் அவள் அந்த ஊரில் வசிக்கிறாள். 

சாந்தலிங்கத்துக்கு மொத்தம் பதினான்கு (14) பிள்ளைகள். அவர்களில் ஒருவர்தான் ஆவிகள் புகுந்து ஆடிக்கொண்டிருக்கும் இந்த பொன்னி. எனக்கு இது பெரும் ஆச்சரியமாகவும் வினோதமாகவும் இருந்தது. 

பண்டைக் காலத்தில் இருந்த கழுவன் அவனது மனைவி, இடைநடுவே தலைவனாக இருந்த தேவர், அவரது மனைவி ஆச்சி, பின்னர் கப்புவனாராக இருந்த கணபதி, காத்தமுத்து, காத்தமுத்துவின் மகன் சாந்தலிங்கம் என பண்டைக்காலம் தொடக்கம் இன்று வரையான ஒரு குடும்ப வரலாறு அங்கு எனக்கு தெரிந்தது. 

தமது சமூகத்தின் வரலாற்றை (Family History) இந்த ஒரு சடங்கிலே அந்த பழங்குடி மக்கள் தேக்கி வைத்துள்ளனர். 

மட்டக்களப்பு பூர்வீக சரித்திரத்தில் அல்லது 'யாழ்ப்பாண வைபவமாலை'யில், 'மஹாவம்ச'த்தில் எல்லாம் இலங்கையை ஆண்ட மன்னர்கள் பேசப்படுகின்றனர். அவை ஏட்டிலும் எழுத்திலும் உள்ளன. 

இந்த சடங்கு மூலம் தம் முன்னோரின் பெயர்கள் நினைவுகூரப்படுகின்றன. இச்சடங்கு அந்த மரபுகளுக்கு சற்றும் குறைந்தது அல்ல. அதே செயல் இந்த சடங்கில் நிகழ்கிறது. அவ்வளவுதான். சடங்கை வாசிக்க நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். 

இந்த சாந்தலிங்கம் வடிசாராயம் குடித்தே இறந்துபோனார். அவரது குடிப்பழக்கத்தால் மனைவி இராசம்மா கணவரோடு பேசுவதில்லை. இருவருக்கும் இடையே தகராறு. சாந்தலிங்கம் இறக்கும் தருணத்தில் கூட இராசம்மா கணவரிடம் பேசவில்லையாம். 

ஆனால், அன்று ஆத்மாவாக வந்த சாந்தலிங்கம் முதலில் கேட்டது, மனைவி இராசம்மாவைத்தான். அந்த கிழ மூதாட்டியோ கணவன் முகம் பார்க்க மறுத்துவிட்டாள். பிறகு அங்கிருந்த அனைவரும் சமாதானப்படுத்தி இராசம்மாவை அவளது கணவன் சாந்தலிங்கத்தின் ஆத்மாவோடு பேச வைத்தனர்.

இது ஒரு உளநோய் சிகிச்சை முறை 

இது ஒரு உளநோய் சிகிச்சை முறை போல எனக்குப்பட்டது. இதற்குள் இரண்டு விடயங்கள் மேற்கிளம்புகின்றன.

ஒன்று, இந்த சடங்கு புராதன இனக்குழுவின் ஒரு விரிவான தொடர்ச்சியான வரலாறு ஆகிறது. மற்றது, அது அவர்களுக்கு வாழும் நம்பிக்கையையும் உள நோய் சிகிச்சையையும் அளிக்கும் முறையாகவும் உள்ளது. அவ்வாறே அந்த வரலாற்றை அம்மக்கள் தம் நினைவுகளில் தேக்கி வைத்துள்ளனர். 

மனித மனங்களில் புதைந்துள்ள பழைய வரலாறு 

கல்வெட்டையும் புதைபொருட்களையும் தேடித் தேடி, பூதக்கண்ணாடி கொண்டு திரியும் தொல்பொருள் ஆய்வாளர்களும் வரலாற்றாசிரியர்களும் மனித மனதில் ஆழ்ந்து புதைந்துள்ள இந்த நினைவுகளை கணக்கில் எடுப்பதில்லை. எடுத்தால் ஒரு பெரும் பழைய சமூக வரலாறு, பண்பாடு கிடைக்கும் அல்லவா? 

கிழக்கு பல்கலைக்கழகம் ஒரு பேராசிரியர் தலைமையில் அண்மையில் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுக்களையும் புதைபொருள் ஆய்வுகளையும் மட்டக்களப்பில் பலத்த பிரயாசத்தின் பின் கண்டெடுத்தனர்.

அதன் அடிப்படையில் அந்த மக்கள் நாகர் குலத்தவர்கள் என இனங்காணப்பட்டனர். 

நாகரே இரும்புப் பானையையும் வேளாண்மையையும் மட்டக்களப்புக்கு கொண்டு வந்தனர் என நிறுவினர். மட்டக்களப்பு வரலாறு நாகருடன் ஆரம்பிக்கிறது என நிரூபித்தனர். பெரும் பெரும் நூல்களை எழுதினர். அவர்கள் உழைப்பும் தேடலும் மிகுந்த வரவேற்புக்குரியதுதான். 

எனினும், நாகருக்கு முந்தியவரான இயக்கர் வழிவந்த பழங்குடியினரான வேடர் குலம் கல்வெட்டு, புதைபொருள், எழுத்து சான்றுகளின்றி தம் வரலாற்றை தம் நினைவுகளிலும் சடங்குகளிலும் பதித்து வைத்துள்ளதை கவனிக்கத் தவறிவிட்டனர். இது அவர்களின் பிழையன்று. அவர்களின் முறையியல் அவர்களை அப்படி வழிநடத்தியது. 

மட்டக்களப்பின் பூர்வீக வரலாறு இருட்டுக்குள் கிடக்கிறது. ஆய்வாளர்களோ வெளிச்சத்தில் தேடுகிறார்கள். எனவே, தொலைத்த இடத்தில் தேடுவோம்..." 

இவ்வாறு பேராசிரியர் சி. மெளனகுரு தான் நேரில் கண்டு வியந்த உத்தியாக்கள் சடங்கை பற்றி சுவாரஸ்யம் மேலிடக் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15
news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17
news-image

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது...

2024-12-28 12:49:25
news-image

திருமண தடையை அகற்றி, மங்கல்ய யோகம்...

2024-11-15 16:38:08
news-image

இழப்பிலிருந்தே படைப்பு பீறிட்டுக் கிளம்புகிறது! –...

2024-11-06 05:11:38