“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரத்தின் நினைவுப் பேருரையில் பேராசிரியர் சி. மெளனகுரு

Published By: Nanthini

16 Apr, 2024 | 01:15 PM
image

(மா.உஷாநந்தினி)

(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்) 

றைந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரம் - இரண்டாவது நினைவுப் பேருரை நிகழ்வு கடந்த 6ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. 

பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஞாபகார்த்த மன்றத்தின் தலைவர் பேராசிரியர் தை. தனராஜ் தலைமையில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பேராசிரியர் சி.மெளனகுரு 'தொலைத்த இடத்தில் தேடுவோம்' என்ற தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றினார்.

தொடர்ந்து, பேராசிரியர் சந்திரசேகரம் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் ச. அதிரதன் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய 'இலங்கையில் கல்வியின் வரலாற்றுச் செல்நெறிகள்' கட்டுரை தொகுப்பும், பேராசிரியர் சந்திரசேகரம் தனித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான 'சர்வதேச கல்வி முறைகளின் செல்நெறிகள்' நூலும் வெளியிடப்பட்டன. இவ்விரு நூல்களின் முதல் பிரதிகளை மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் ஏ. சிவஞானம், சமூக சேவையாளர் சாரதா பாலசுப்ரமணியம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

இருட்டுக்குள் நாம் தொலைத்தவை; வெளிச்சம் படாதவை!

பேருரையின்போது “சோ. சந்திரசேகரம் மனம் முழுவதிலும் இந்த மண்ணில் பேசப்படாத, வெளிச்சம் படாமல் என்றென்றும் இருட்டுக்குள்ளேயே வாழ்ந்த மக்களே வியாபித்து நின்றனர். 

அவரது மனதில் வியாபித்து நின்ற அந்த சாமானியர் பற்றிய கதைகளை கூறுகிறேன். இக்கதைகள் கற்பனைகள் அல்ல. இட்டுக்கட்டியவை அல்ல. நான் நேரில் கண்டு அனுபவித்த சம்பவங்கள். இருட்டுக்குள் நாம் தொலைத்தவை. வெளிச்சம் படாதவை..." எனக் கூறிய பேராசிரியர் மெளனகுரு தான் கண்ட மூன்று சடங்கு முறைகளை பற்றி கட்டங்கட்டமாக பகிர்ந்தார்.  

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும் மக்கள் 

“மட்டக்களப்பில் உள்ள கழுவன்கேணி என்ற கிராமத்தில் பழங்குடி மக்களான வேடர்களின் ஒரு சடங்கு முறையாக, இறந்துபோன மூதாதையர்களின் ஆன்மாக்களோடு மக்கள் இயல்பாக பேசும் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. 

மிகுந்த பிரயாணக் கஷ்டங்களின் பின்னர் நான் சடங்கு நடைபெறும் இடத்தை அடைந்தேன். 

கிராமத்தில் ஒரு அடர்ந்த காட்டை வெட்ட வெளியாக்கி, துப்புரவு செய்து, பந்தல்கள் அமைத்து, மடை பரப்பி இறந்த தம் முன்னோர்களை வரவழைக்க ஒரு பெரும் கூட்டம் நின்றுகொண்டிருந்தது. 

அவர்களின் நம்பிக்கையின்படி, இறந்துபோன மூதாதையர்கள் தினமும் காலையில் இருந்து மாலை வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், தெற்கிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கியும் ஆவி உருவில் வான்வெளியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். மண்ணில் வாழும் தம் சந்ததியினரின் நடவடிக்கைகளை கவனித்தபடி பிரயாணம் செய்துகொண்டிருக்கிறார்கள். 

"நாங்கள் அவர்களின் பாதுகாப்பில் வாழ்கிறோம்" என அங்கிருந்த ஒரு முதியவர் கூறினார். 

வேடர் குடிகளில் ஒன்றான பனுவளக்குடியின் ஆதித்தாயின் மரபுவழிப் புதல்வர்களே சடங்கு நிகழும் இடத்தில் கூடியிருந்தனர். 

பனுவளக்குடியைச் சேர்ந்த பொன்னி என்பவளின் உடலிலேயே இறந்துபோன முன்னோர்கள் வந்து புகுந்து, தம்முடன் உரையாடப் போகிறார்கள் என மக்கள் காத்திருந்தனர். 

கொட்டு என்கிற பறை வாசிப்போடு சடங்கு ஆரம்பமானது. முதலில் குடாநீலி, மாநீலி, கரடித்தெய்வம் ஆகிய தெய்வங்கள் பொன்னியின் உடலுக்குள் புகுந்தன. அவை, அங்கிருந்த மக்களை ஆசீர்வதித்தன. இந்த பெண் தெய்வங்கள் அம்பு, வில் பிடித்து ஆடின. தேன் எடுக்கச் சென்றன. தேன் எடுப்பதில் தங்களுடன் போட்டி போடும் கரடியை சாந்தப்படுத்தின. 

சடங்கு என்பது நிகழ்ந்த ஒன்றை மீளவும் நிகழ்த்திக் காட்டுதல் என்று படித்திருக்கிறேன். அங்கே அவர்கள் தமது புராதன வாழ்க்கையை நிகழ்த்திக் காட்டியது போல் எனக்குப்பட்டது. 

அதன் பின், அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த இறந்த முன்னோர்கள் ஒருவர் பின் ஒருவராக பொன்னியின் உடலுக்குள் புகுந்து அங்கிருந்த மக்களுடன் பேச ஆரம்பித்தனர். அவர்களை அந்த மக்கள் 'உத்தியாக்கள்' என அழைத்தனர். கன்னட மொழியில் 'உத்தி' என்றால் 'மேலே' என்று பொருள். 

முதலில், பொன்னி உடலில் அக்குடியின் ஆதித் தலைவன் கழுவன் வந்து, அங்கிருந்த தனது வாரிசுகளை அணைத்து மகிழ்ந்து ஆசீர்வதித்தான். அவர்களோடு உரையாடினான். 

அவன் தன் மனைவி கந்தியும் வந்திருக்கிறாள் என்று கூறிச் சென்றான். கந்தி, பனுவளக் குடியினரின் ஆதித்தாய். 

கந்தியும் வந்து வாரிசுகளை அணைத்து ஆசீர்வதித்தாள். அவளும் சென்ற பின்னர், இடைக்காலத்தில் அக்குடியின் தலைவனாக இருந்த தேவர் வந்தார். மக்களுடன் பேசி நலம் விசாரித்தார். அவரும், தன் மனைவி வந்திருப்பதாக கூறிச் சென்றார். அடுத்து, அவரது மனைவி ஆச்சி வந்து பேசினாள். 

அடுத்து, பல காலத்துக்கு முன்னர் இதே சடங்குகளை செய்து இறந்துபோன கணபதி என்பவர் வந்து உரையாடினார். அவர் ஒரு தலைமுறைக்கு முன்னர் பூசைகளை நடத்திய பூசாரியாரான ‘கப்புவனார்’ என அழைக்கப்படுபவர். 

அவருக்குப் பின், காத்தமுத்து வந்தார். அடுத்ததாக அண்மையில் இறந்துபோன அவரின் மகன் சாந்தலிங்கமும் வந்தார். 

சாந்தலிங்கத்தின் மனைவி பெயர் இராசம்மா. அவளும் அந்த மக்கள் கூட்டத்தில் ஒருத்தியாக அந்த சடங்கில் கலந்துகொண்டிருந்தாள். 

சாந்தலிங்கத்துக்கு மொத்தம் பதினான்கு (14) பிள்ளைகள். அவர்களில் ஒருவர்தான் ஆவிகள் புகுந்து ஆடிக்கொண்டிருந்த இந்த பொன்னி. 

வடிசாராயம் குடித்தே இறந்துபோனவர்தான் சாந்தலிங்கம். அவரது குடிப்பழக்கத்தால் மனைவி இராசம்மா கணவரோடு கடைசி வரை பேசவே இல்லையாம். இருவருக்கும் இடையே தகராறு. 

ஆனால், அன்று ஆத்மாவாக வந்த சாந்தலிங்கம் முதலில் கேட்டது, மனைவி இராசம்மாவைத்தான். அந்த மூதாட்டியோ கணவன் முகம் பார்க்க மறுத்துவிட்டாள். பிறகு அங்கிருந்த அனைவரும் சமாதானப்படுத்தி இராசம்மாவை அவளது கணவன் சாந்தலிங்கத்தின் ஆத்மாவோடு பேச வைத்தனர்….” என்றார். 

ஒரு சிறு இனக்குழுமம் தமக்கென தாமே உருவாக்கிய ஒரு கோயில் 

மட்டக்களப்பிலுள்ள புன்னைச்சோலையில் ஒரு சிறு சாதிக்குழுமத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கு சொந்தமான ஒரு சக்திவாய்ந்த காளிகோயிலின் வரலாற்றுக் கதையையும் சொன்னார். 

“மட்டக்களப்பில் அமிர்தகளியில் உள்ள மாமாங்கப் பிள்ளையார் கோயிலில் இச்சமூகத்தினருக்கு ஒரு திருவிழா நடத்தப்பட்டது. 

அப்போது அக்கோயிலின் குருக்கள் இவர்களுக்கு காளாஞ்சியை கையில் கொடுக்க மறுத்து, கீழே படியில் வைத்துள்ளார். இந்த சாதி ஒதுக்கல் மனப்பாங்கை கடுமையாக எதிர்த்த அக்குழுமத்தினர் “இப்படியாயின், இந்த திருவிழா எங்களுக்கு தேவையில்லை” என்று கூறி சுயமரியாதையுடன் அங்கிருந்து வெளியேறினர். 

வரும்போது அக்கோயில் ஆலமரத்தின் ஒரு கிளையை கோபத்தோடு ஒடித்துக்கொண்டு வந்து, இந்த காளி கோயிலின் முன்னால் நட்டு வைத்துள்ளனராம். 

தற்போது அந்த மரம் பருத்துச்சடைத்து வளர்ந்து நிற்கிறது. அதன் கீழே ஒரு சிறு பிள்ளையார் கோவிலை அமைத்து, அதற்கு முன்னால் மாமாங்கப் பிள்ளையார் கோயிலளவு ஒரு பெரிய கோபுரத்தையும் எழுப்பி வருகின்றனர். அதன் கட்டுமானப் பணியும் நிறைவடையவுள்ளது. சிறு தெய்வக்கோவில் மரபில் கோபுரத்துக்கு இடமில்லை அல்லவா? ஆனால், இங்கோ வழமை மாறுகிறது...” என்றார். 

அந்த கோயிலில் பிராமணர்களின்றி தாங்களாக பூணூல் அணிந்து, சமஸ்கிருத மொழியில் மந்திர சுலோகங்கள் சொல்லி இந்த குழுமத்தினரே அர்ச்சிப்பதையும் கண்டதாக சி.மெளனகுரு கூறினார்.

அடுத்து, கண்டியில், காகல மடவல டிவிஷன் நலந்தன்ன மலையில் நிகழ்த்தப்படும் சுடலை மாடன் வில்லுப்பாட்டின்போது, அங்கே ஒருவர் மாடசாமி உரு வந்து, கோழியின் குடலை பிய்த்து மாலையாக போட்டுக்கொண்டு ஆடிய காட்சியை கூறிய விதமும் சுவாரஸ்யமானது. 

நிறைவாக அவர், “கல்வெட்டு, புதைபொருள் எழுத்தாவணங்கள் போன்ற ஆதாரங்கள் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக ஒரு சமூகத்துக்கு வரலாறு இல்லாமல் போய்விடுமா?

மக்கள் நடத்தும் சடங்கு முறைகள், வழிபாட்டு முறைகள், சமூக நடைமுறைகளில் கூட அவர்களின் வரலாறும் பண்பாடும் மறைந்துள்ளது. அந்த வரலாற்றை அவர்கள் தம் நினைவுகளில் தேக்கி வைத்துள்ளனர்” என்றும் தனது பேருரையில் பதிவு செய்திருந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்­கை மெல்­லிசை மன்னர், இசை­ய­மைப்­பாளர் எம்.பர­மேஸின்...

2024-05-29 14:30:06
news-image

வெள்ளவத்தையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு...

2024-05-28 15:09:42
news-image

“சுவிஸ் தமிழ் ஊடக மையம்” அறிமுகம்

2024-05-28 15:18:33
news-image

புனித மரியாள் பழைய மாணவர் சங்க...

2024-05-28 11:25:21
news-image

பேராசிரியர் சி.பத்மநாதனின் 'ஆதிகால யாழ்ப்பாணம்' நூல்...

2024-05-29 13:36:14
news-image

திருகோணமலையில் அமரர் நந்தினி சேவியற்றின் 75ஆவது...

2024-05-25 23:32:39
news-image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு புறக்கோட்டையில் உலருணவுப்...

2024-05-25 17:59:04
news-image

மன்னாரில் 'போதை பொருளை புறக்கணித்து இயற்கையின்...

2024-05-25 16:17:02
news-image

புத்தம் சரணம் கச்சாமி : நவீனத்துவம்...

2024-05-25 14:12:22
news-image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் "கச்சேரி மேளா -...

2024-05-25 13:28:57
news-image

சிங்கப்பூரில் நடைபெறும் ரோட்டரி அறக்கட்டளையின் நன்கொடையாளர்...

2024-05-25 10:29:58
news-image

நிருத்ய நர்த்தனாலய நடனப்பள்ளி மாணவி கவிதாஞ்சலி...

2024-05-25 10:56:34