தமது நாட்டு வீரர்களைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வரும் விராட் கோலி, விளையாட்டு உலகின் டொனால்ட் ட்ரம்ப் என்று அவுஸ்திரேலியாவின் ‘டெய்லி டெலிகிராஃப்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கோலி ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், அவரது இந்த நடவடிக்கை குறித்து இந்தியா கிரிக்கெட் சபையோ, உலக கிரிக்கெட் சபையோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பைப் போலவே கோலியும் தனது தவறுகளை மறைப்பதற்காக ஊடகங்கள் மீது தொடர்ச்சியாகப் பழி கூறி வருகிறார். அவர் கூறும் கருத்துக்கள் நம்பத்தகுந்தவையல்ல” என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் களத்தில் இருந்தவாறே ஓய்வறையில் உள்ள சகாக்களிடம், நடுவரின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். ஆய்வுக்கான அறிவுரையைப் பெற்று வருவதாக கோலி குற்றம் சாட்டியிருந்தார்.

தான் சில தடவைகள் அப்படிச் செய்ததாக ஸ்டீவ் ஸ்மித் ஒப்புக்கொண்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றது. கோலி தோற்பட்டையில் காயமடைந்து களத்தை விட்டு வெளியேறினார். பின்னர் அதை குணப்படுத்திக்கொண்டு மீண்டும் களம் திரும்பினார். இதன் பின்னர் கோலி ஆட்டமிழந்தபோது, ஸ்டீவ் ஸ்மித் தனது தோற்பட்டையைத் தொட்டுக் காட்டி கேலி செய்ததான காட்சியொன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

எனினும், இதன்போது ஸ்மித்தின் தோற்பட்டையை சக வீரர் ஒருவரே தொட்டுக்கொண்டு நின்றதாகவும், தாம் படம் பிடித்த கோணத்தில் இருந்து பார்க்கும்போது ஸ்டீவ் ஸ்மித்தே தனது தோற்பட்டையைத் தொடுவது போல அமைந்திருந்ததாகவும் குறித்த தொலைக்காட்சி நிறுவனம் ஆதாரபூர்வமாக நிரூபித்திருந்தது.

ஆனால், பதிலுக்கு, வோர்னர் ஆட்டமிழந்து செல்லும்போது கோலி அவரைக் கேலி செய்யும் விதமாக களத்தில் ஓடியபடியே தனது தோற்பட்டையைத் தொட்டுக் காட்டினார். இது இந்திய ரசிகர்கள் உள்ளிட்ட பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

இதைக் குறிப்பிட்டிருக்கும் அப்பத்திரிகை, தவறாகச் சித்திரிக்கப்பட்ட காட்சி என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் கூட, அதற்காக அவுஸ்திரேலிய வீரர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய விராட் கோலி, வேண்டுமென்றே தான் செய்த கேலிக்காக மன்னிப்புக் கேட்க முன்வராதது, கிரிக்கெட் விளையாட்டின் மகத்துவத்தையே பழிப்பது போல் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.