ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

Published By: Vishnu

16 Apr, 2024 | 01:48 AM
image

ஆர்.ராம்

ஜனாதிபதி தேர்தலில் செல்வாக்குச் செலுத்தவல்ல பிரதான வேட்பாளர்களான ரணில், சஜித், அநுர ஆகியோர் போட்டுள்ள வாக்குவங்கியை மையப்படுத்திய அரசியல் கணக்கைப் போன்றே சிறுபான்மை தேசின இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகளும் தத்தமது செல்வாக்குகளுக்கு அமைவாக பேரம்பேசல்களுக்கான அரசியல் கணக்குகளை போட்டுள்ளன.

குறிப்பாக இந்தக் கட்சிகள் அனைத்துமே பாராளுமன்றத் தேர்தலில் தமது வெற்றிகளை உறுதிப்படுத்துவதையும், அமைச்சுப்பதவிகள், இராஜாங்க அமைச்சுப்பதவிகள் ஆகியவற்றையும் மையப்படுத்தித் தான் அரசியல் கணக்குகளை போட்டு இறுதியான தீர்மானத்தினை எடுக்கின்றன. 

அந்த வகையில், வடக்கில் டக்ளஸ் தேவானந்தா, நாடாளவிய ரீதியில் இருக்கின்ற அரசியல் கட்சிகளோ தனிநபர்களோ தீர்மானிப்பதற்கு முன்னதாகவே ரணிலை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்து விட்டார். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 

முதலாவது காரணம் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரி, ரணில் கூட்டாட்சிக்கு ஆதரவளித்தது. அதன்போது ரணில் டக்ளஸை இணைத்துக்கொள்ள விரும்பினாலும் கூட, கூட்டமைப்பு அதற்கு இடமளித்திருக்கவில்லை.

கூட்டமைப்பு தற்போது செயற்பாட்டில் இல்லாது விட்டாலும் கூட, அதன் அங்கத்துவக் கட்சிகள் இன்னமும் செயற்பாட்டில் இருப்பதால்; அவ்விதமான நிலைமைகள் மீண்டும் ஏற்படுவதற்கு முன்னதாகவே தீர்மானங்களை அறிவிப்பதும் பொருத்தமென டக்ளஸ் நினைத்திருக்கக் கூடும்.

இரண்டாவது காரணம், டக்ளஸைப் பொறுத்தவரையில் ‘மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி’ என்பது அவரது பிரதான கொள்கை. ஆகவே மத்தியில் கூட்டை நிலை நிறுத்துவதன் ஊடாக அவரது அரசியல் வாழ்க்கையின் இறுதி அங்கத்தினை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி உட்பட முறையாக நிறைவு செய்து கொள்ள முடியும் என்றும் அவர் கருதியிருக்கலாம். 

அடுத்து அங்கஜன் இராமநாதனைப் பொறுத்தவரையில், சுதந்திரக்கட்சி சின்னத்தில் வெற்றி பெற்ற ஒரேயொரு நபர். குழுக்களின் பிரதித்தலைவர் பதவியை வகிக்கின்றார். சமகாலத்தில் சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற நிலைமைகளால் அக்கட்சி நீதிமன்றிலிருந்து வெளிவருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தெரியாதுள்ளது.

அவ்வாறான நிலையில், அவருடைய அரசியல் எதிர்காலத்தினை மையப்படுத்தியும், தென்னிலங்கை அரசியல் போக்கின் அடிப்படையிலும் சு.கா.வின் சிரேஷ்ட உறுப்பினர்களைப் போன்று அங்கஜனும் ரணிலை ஆதிக்கலாம்.

அங்கஜன் அவ்விதமான ஆதரவை வெளியிட்டாலும், பாராளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் ஐ.தே.க.வில் போட்டியிடுவதற்கும், வெற்றிபெறுவதற்குமான வாய்ப்புக்கள் மிகக்குறைவாகவே உள்ளன. 

எனவே கட்சி மாறுவதால் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை உறுதி செய்துகொள்ள முடியும் என்ற அடிப்படையிலான அங்கஜனின் கணக்கு திரிசங்கு நிலையைத் தான் ஏற்படுத்தப்போகிறது. 

இந்நிலையில், வன்னி தேர்தல் மாவட்டத்தில் காதர் மஸ்தான் ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். அவர், பொதுஜன பெரமுவிலிருந்து வெளியேறி ஐ.தே.கவில் தான் சங்கமிக்கப் போகின்றார். 

அதனால் வன்னியில் ஐ.தே.க.விற்கு எவ்விதமான நெருக்கடிகளும் ஏற்படப்போவதில்லை. ஒருவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ரணிலை ஆதரித்து ஐ.தே.க.வுடன் இணைந்தாலும்கூட எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படப்போவதில்லை. 

காரணம், பாராளுமன்றத் தேர்தலில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத்தும், மஸ்தானும் இணைந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவதால் இருவருக்குமே நன்மைகளையே ஏற்படுத்தும் என்பதாலாகும்.

அதேபோன்று, வன்னி தேர்தல் மாவட்டத்தில் தற்போது பாராளுமன்ற உறுப்புரிமையைக் கொண்டிருக்கின்ற சாள்ஸ், செல்வம், வினோ போன்றவர்கள் பகிரங்கமாக எந்த வேட்பாளரை ஆதரிக்கின்றோம் என்பதை அறிவிப்பதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

ஆகவே, ரணில் கொண்டிருக்கும் கணக்குக்கு அமைவாக, அவர்களால் தனக்கான ஆதரவு அறிவிப்பு வெளிவராது விட்டாலும் நிச்சயமாக எதிர்ப்பு அறிவிப்பு வெளிவரப்போவதில்லை என்பது உறுதியானது. இந்த விடயம் குறித்த புரிதல் சஜித்துக்கும், அநுரவுக்கும் கூட மிகத் தெளிவாக உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், பிள்ளையானும் டக்ளஸ் போன்றே ரணிலை ஆதரிக்கும் அறிவிப்;பை வேளையோடு செய்துவிட்டார். 

அவரைப்பொறுத்தவரையில், ரணில் வெற்றி பெறுகின்ற பட்சத்தில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தனது கட்சியிலிருந்து இரண்டு உறுப்பினர்கள் தெரிவாகின்ற சந்தர்ப்பத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவியை கோருவது தான் திட்டமாக உள்ளது. 

அதேபோன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுகின்ற பட்சத்தில் முதலமைச்சர் வேட்பாளரையும் தன்னகப்படுத்துவது தான் அவருடைய நோக்கமாக உள்ளது. பிள்ளையானைப் பொறுத்தவரையில் ஏற்கனவே ரணிலுடன் நெருக்கமாக இருந்த தமிழ் உறுப்பினர்களாலும், முஸ்லிம் தரப்பினராலும் தனது நகர்வுகளுக்கு பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்.

அதேவேளை, வியாழேந்திரன், கூட்டமைப்பிலிருந்து பெரமுனவிற்குச் சென்று, இப்போது ரணிலை ஆதரிக்கும் லன்சா தலைமையிலான கூட்டணியுடன் கைகோர்த்துள்ளார். அந்தச் சங்கமும் கூட அடுத்த பாராளுமன்ற அங்கத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காகத் தான். 

அதுமட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் தற்கால பிரதிநிதிகளும், செல்வாக்கு மிக்க பிரமுகர்களும் ரணில் கொண்டிருக்கின்ற கணக்குக்கு அமைவாக அவரை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள்.

இதில், அதாவுல்லா, ஹிஸ்புல்லாஹ், நஸீர் அஹமட், ஹரீஸ், பைசல் காசீம் என்று பட்டியல் நீள்கின்றது. குறிப்பாக, இந்த நபர்களின் கட்சிகள் எவ்விதமான தீர்மானத்தினை எடுத்தாலும் தென்னிலங்கை அரசியல் களம் வெகுவாக மாறாத வரையில் தற்போதைய நிலைப்பாட்டையே தொடரவுள்ளனர்.

இவ்வாறான நிலையில் மு.கா.வின் தலைவர் ரவூப்பும், அ.இ.ம.கா.தலைவர் ரிஷாத்தும் சஜித்தின் கூட்டில் இருக்கின்றார்கள். அவர்கள் சஜித் தான் அதிகாரத்துக்கு வருவார் என்றும் வெகுவாக நம்புகின்றார்கள். 

ஆனால், அவர்கள் சார்ந்தவர்கள் மாறுபட்ட நிலைப்பட்டில் இருக்கையில், தலைவர்கள் இருவரும் மட்டும் சஜித்தை ஆதரிப்பதால் எவ்விதமான தாக்கமும் நிகழ்ந்து விடப்போவதில்லை. 

ஒன்றியில் ரவூப்பும், ரிஷாத்தும் ஒட்டுமொத்த கட்சியையும் கட்டுக்குள் கொண்டுவந்து சஜித் கூட்டில் வலுவாக தடம் பதிக்க வேண்டும். இல்லையேல் அங்கத்தவர்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்பட கூட்டிலிருந்து வெளியேற வேண்டும். 

இரண்டும் கட்டாத நிலையில் தலைவர்கள் ஒரு அணியும், அங்கத்தவர்கள் பிறிதொரு அணியும் இருப்பது ரவூப், மற்றும் ரிஷாத்தின் ‘அரசியல் நேர்மை’ தொடர்பான சந்தேகத்தினையே வலுக்கச் செய்கின்றது

மலையகக் கட்சிகளைப் பொறுத்தவரையில், இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ரணிலை ஆதரிக்கின்றது. இ.தொ.க.வின் நிலைப்பாட்டில் பெரிதாக எவ்விதமான மாற்றங்களும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

அதேநேரம், மற்றொரு கட்சியான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித்தின் கூட்டில் இருக்கின்றது. முற்போக்கு கூட்டணி அவ்வாறு இருந்தாலும்கூட சஜித்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. 

அத்தோடு, சஜித்தின் சமகாலச் செயற்பாடுகளால் ஏற்படும் சேதாரங்களையும் முற்போக்கு கூட்டணி உணர்ந்துள்ளது. அதனால் தான் அந்க் கூட்டணி ரணிலையும், சஜித்தையும் இணைக்கும் செயற்பாட்டையும் திரைமறைவில் தீவிரமாக முன்னெடுகின்றது. 

இவ்வாறான நிலைமையில் வடக்கு, கிழக்கை மையப்படுத்தி அரசியல் செய்யும் கட்சிகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதென்று அறிவித்துள்ளது. அதற்கான வியூகமும் பிராசரமும் அந்த தரப்பிற்கே வெளிச்சம்.

அதேநேரம், இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள்ளும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்குள்ளும், தமிழ் மக்கள் கூட்டணிக்குள்ளும் தமிழ் பொதுவேட்பாளர் பற்றிய உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

உரையாடல்களின் ஆரம்பத்திலேயே இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள்ளும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்குள்ளும் இருவேறு நிலைப்பாடுகள் தோற்றம் பெற்றுவிட்டன.

ஆகவே, இருவேறு நிலைப்பாடுகளை களைந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைவதென்பது மிகக் கடினமானதொரு காரியம். அவ்வாறு ஒன்றிணைந்தால் கூட, ஒன்றிணைந்த செயற்பாடுகள் என்பது முயற்கொம்பான விடயம். 

அவற்றையெல்லம் கடந்து தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதாக இருந்தால், வடக்கு, கிழக்கு முகமுடைய அந்த நபர் யார் என்பது மிகப்பெரும் கேள்வியாகும். 

முகந்தெரியாத ஒருவரை நிறுத்துவம், வாக்குச் சேகரிப்பது என்பதும் எவ்வளவு கடினமான விடயம் என்பதை தசாப்தங்கள் கடந்து அரசியல் செய்யும் மேற்படி கட்சிகள் அறியாத விடயமல்ல. விக்னேஸ்வரன் குறிப்பிடுவது போன்று வேலன் சுவாமிகள் போன்றவர்களை களமிறக்கினால் தமிழர்கள் மதத்தால் பிளவடைவதற்கே வாய்ப்புக்கள் அதிகம்.

அவ்விதமான முயற்சிகளால், பொதுவேட்பாளர் எதிர்பார்க்கப்பட்ட வாக்குகளை பெறாது விட்டால் குறித்த முயற்சி கேலிக்கூத்தாகிவிடும் என்பதற்கு அப்பால் அடுத்து நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் குறித்த விடயத்தினை ஆதரித்த அனைத்துக் கட்சிகளும் அரசியல் தற்கொலைக்குச் சமமான விளைவுகளையே தோற்றுவிக்கும். 

அவ்வாறு நிறுத்தப்படும் வேட்பாளர் வடக்கு, கிழக்கு முகமுடையவராக இருந்து அவரால் ஐந்து முதல் ஆறு இலட்சம் வரையில் வாக்குகளை பெறும் இயலுமை காணப்படுகின்றது என்று வைத்துக்கொண்டாலும், அனைத்துக் கட்சிகளின் முதலீட்டைப் பயன்படுத்தி தேர்தலின் பின்னர் அவர் பிறிதொரு அரசியல் சக்தியாக உருவெடுக்க மாட்டார் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதங்களும் இல்லை. 

இவற்றையெல்லாம் கடந்து, தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவதாக கொண்டாலும், அந்த முயற்சி வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை மையப்படுத்தியதாகவே இருக்கப்போகின்றது. ஏனென்றால் வடக்கு,கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களும், வடக்கு,கிழக்குக்கு வெளியில் உள்ள தமிழ் பேசும் மக்களும் மேற்படி முயற்சியை ஆதரிக்கப்போவதில்லை.

அதேநேரம், வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் கூட தெரியாத தேவதையை விடவும் தெரிந்த பிசாசே தேவலை என்ற வகையில் தீர்மானம் எடுப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. ஆக, தமிழ் பொதுவேட்பாளர் முயற்சி கரணம் தப்பினால் மரணம் தான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விரைவில் இலங்கை - பிரான்ஸ் பொருளாதார...

2024-05-24 18:17:40
news-image

பலஸ்தீன படுகொலைகளை ஆதரிக்கிறதா இலங்கை?

2024-05-24 18:03:49
news-image

பலஸ்தீன படுகொலைகளை ஆதரிக்கிறதா இலங்கை?

2024-05-24 13:26:57
news-image

வெசாக் தினம்

2024-05-22 20:08:47
news-image

வல்லரசு நாடுகளுக்கு சவாலாக உலகை தன்...

2024-05-22 10:53:56
news-image

நல்லிணக்கத்துக்கு ஜனாதிபதியின் உள்ளார்ந்த ஈடுபாடு அவசியம்

2024-05-21 12:45:05
news-image

கண்ணோட்டம் : சட்டம் பற்றிய அறிவினை...

2024-05-21 09:16:17
news-image

படையினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகள்...

2024-05-21 03:53:30
news-image

இரத்தினபுரி தும்பர தோட்ட சம்பவம்; பத்தோடு...

2024-05-21 03:42:15
news-image

சவால்களுக்கு மத்தியில் மீண்டுவரும் இலங்கை 

2024-05-20 18:35:04
news-image

இனவாதிகளை சந்தோஷப்படுத்தியுள்ள புலிகள் அமைப்பின் மீதான...

2024-05-20 17:33:41
news-image

சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்துக்கு தந்தை வழியில் தன்னை...

2024-05-21 14:14:48