சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு

Published By: Vishnu

15 Apr, 2024 | 11:55 PM
image

(நெவில் அன்தனி)

பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற இண்டியன் பிறீமியர் லீக் 30ஆவது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவை 25 ஓட்டங்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றிகொண்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் இரண்டு சாதனைகளுடன் 3 விக்கெட்களை இழந்து 287 ஓட்டங்களைக் குவித்தது.

முன்வரிசை வீரர்கள் ஐவரும் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் சாதனைகளில் பங்காற்றியிருந்தனர்.

ஐபிஎல் வரலாற்றில் ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸ்கள், அதிகூடிய எண்ணிக்கை ஆகிய இரண்டு சாதனைகளையே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிலைநாட்டியது.

தனது சொந்த சாதனைகளையே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புதுப்பித்தது.

இந்தப் போட்டியில் 22 சிக்ஸ்களையும் 19 பவுண்டறிகளையும் சன்ரைசர்ஸ் விளாசியிருந்தது.

ஹைதராபாத்தில் மார்ச் 27ஆம் திகதி நடைபெற்ற மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான போட்டியில் 19 சிக்ஸ்களை விளாசியதுடன் 277 ஓட்டங்களை மொத்தமாக குவித்தது. இவை இரண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிலைநாட்டப்பட்டிருந்த முன்னைய சாதனைகளாகும்.

இதே போட்டியில் மொத்தமாக குவிக்கப்பட்ட 38 சிக்ஸ்கள் திங்கட்கிழமை போட்டியில் சமப்படுத்தப்பட்டது.

றோயல் செலஞ்ர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ஆரம்பம் முதல் கடைசிவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி தொடர்ந்த வண்ணம் இருந்தது.

துடுப்பெடுத்தாடிய ஐவருமே பவுண்டறிகளையும் சிக்ஸ்களையும் விளாசியமை மற்றொரு சாதனையாகும்.

மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் மொத்த எண்ணிக்கையில் 208 ஓட்டங்கள் பவுண்டறிகள் மற்றும் சிக்ஸ்கள் மூலம் பெறப்பட்டது.

அத்துடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இண்டியன்ஸ் போட்டியில் இரண்டு அணிகளாலும் பெறப்பட்ட ஒட்டு மொத்த எண்ணிக்கையான 523 ஓட்டங்கள் என்ற சாதனை திங்கட்கிழமை போட்டியில் முறியடிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள்  ஐபிஎல் வரலாற்றில் அதிகூடிய 549 ஓட்டங்களை மொத்தமாக குவித்து சாதனை படைத்தன.

அபிஷேக் ஷர்மா, ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 49 பந்துகளில் 108 ஓட்டங்களைக் குவித்து மிகவும் பலமான ஆரம்பத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு இட்டுக்கொடுத்தனர்.

முதலாவதாக ஆட்டம் இழந்த அபிஷேக் ஷர்மா 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து ட்ரவிஸ் ஹெட், ஹென்றி க்ளாசன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 26 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

உலகக் கிண்ண இறுதி ஆட்ட நாயகன் ட்ரவிஸ் ஹெட் மிகவும் அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 41 பந்துகளில் 9 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 102 ஓட்டங்களைக் குவித்தார்.

அதன் பின்னர் க்ளாசனும் ஏய்டன் மாக்ராமும் ஜோடி சேர்ந்து 3ஆவது விக்கெட்டில் 27 பந்துகளில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

க்ளாசன் 31 பந்துகளில் 2 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைக் குவித்தார்.

கடைசி 3 ஓவர்களில் ஏய்டன் மார்க்ராம், அப்துல் சமாத் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர, ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் சாதனைமிகு மொத்த எண்ணிக்கையைக் குவித்தது.

மார்க்ராம் 17 பந்துகளில் தலா 2 பவுண்டறிகள், சிக்ஸ்கள் உட்பட 32 ஓட்டங்களுடனும் அப்துல் சமாத் 10 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 37 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் லொக்கி பேர்கஸன் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 288 ஓட்டங்கள் என்ற சாதனை மிகு வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 262 ஓட்டங்களைப் பெற்று கௌரவமான தோல்வியைத் தழுவியது.

எதிரணி வீரர்களைப் போன்றே ஆரம்பத்திலேயே அதிரடியில் இறங்கிய விராத் கோஹ்லி, அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் ஆகிய இருவரும் பவர் ப்ளேயில் (6 ஓவர்கள்) 79 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அடுத்த ஓவரில் மொத்த எண்ணிக்கை 80 ஓட்டங்களாக இருந்தபோது விராத் கோஹ்லி ஆட்டம் இழந்தார்.

20 பந்துகளை எதிர்கொண்ட கோஹ்லி 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களைப் பெற்றார்.

அடுத்து களம் புகுந்த வில் ஜெக்ஸ் 7 ஓட்டங்களுடன் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். பவ் டு ப்ளெசிஸ் தரையோடு அடித்த பந்து, ஜெய்தேவ் உனத்கட்டின் கையில் பட்டு விக்கெட்டைப் பதம் பார்க்க வில் ஜெக்ஸ் ஒரு மீற்றர் எல்லைக்கு வெளியே நின்றதால் ரன் அவுட் ஆனார்.

அவரைத் தொடர்ந்து ரஜாத் பட்டிடார் 9 ஓட்டங்களுடன் வெளியேற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. (111 - 3 விக்.)

அதேவேளை மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த பவ் டு ப்ளெசிஸ் 28 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களைப் பெற்று பெட் கமின்ஸின் பவுன்சர் பந்தில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் சௌரவ் சௌஹான் ஓட்டம் பெறாமல் நடையைக் கட்டினார். (122 - 5 விக்.)

அத்துடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றி இலக்கை நோக்கிய விரட்டல் வேகமும் சற்று குறைந்தது.

ஆனால், தினேஷ்  கார்த்திக், மஹிபால் லொம்ரோ ஆகிய இருவரும் துணிச்சலை வரவழைத்து 6ஆவது விக்கெட்டில் 25 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய அளவில் தெம்பைக் கொடுத்தனர்.

லொம்ரோ 19 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பெட் கமின்ஸின் இன்சைட் எஜ் பந்தில் போல்ட் ஆனார்.

எவ்வாறாயினும் தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 28 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

38 வயதான தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 5 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 83 ஓட்டங்களைக் குவித்து ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினார்.

அனுஜ் ராவத் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மயான்க் மார்கண்டே 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராஜஸ்தானை இலகுவாக வீழ்த்திய ஹைதராபாத் இறுதிப்...

2024-05-25 00:36:22
news-image

உலக பரா ஈட்டி எறிதலில் உத்தியோகப்பற்றற்ற...

2024-05-24 21:35:49
news-image

இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்த்தாடுவது ஹைதராபாத்தா?...

2024-05-24 17:34:31
news-image

லங்கா பிறீமியர் லீக் திட்டமிட்டவாறு நடத்தப்படும்...

2024-05-23 19:27:01
news-image

லங்கா பிறீமியர் லீக் திட்டமிட்டவாறு நடத்தப்படும் ...

2024-05-23 17:10:57
news-image

பெங்களூருவின் தொடர் வெற்றிகளுக்கு முடிவுகட்டிய ராஜஸ்தான்...

2024-05-23 00:33:02
news-image

தம்புள்ள தண்டர்ஸின் உரிமையாளரின் உரிமைத்துவம் முடிவுறுத்தப்பட்டுள்ளது

2024-05-22 23:11:12
news-image

அவுஸ்திரேலியாவின் பன்முக கலாசார தூதுவர்களில் ஒருவராக...

2024-05-22 20:34:29
news-image

தொடர் தோல்விகளுடன் ராஜஸ்தானும் தொடர் வெற்றிகளுடன்...

2024-05-22 15:55:38
news-image

லங்கா பிறீமியர் லீக் அணி உரிமையாளர்...

2024-05-22 15:14:04
news-image

ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வீழ்த்தி இறுதிப்...

2024-05-22 01:15:35
news-image

LPL 2024 அதிக விலைக்கு ஏலம்...

2024-05-21 23:34:51