தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டில் ‘இனப்படுகொலையின்’ அரசியல்

Published By: Vishnu

15 Apr, 2024 | 02:53 AM
image

மறைந்த மாமனிதர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்றபோது பலஸ்தீனமும் முள்ளிவாய்க்காலும் ஒரு ஒப்பீட்டு ஆய்வு எனும் தலைப்பில் எழில்ராஜன் அடிகளார் ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு,

பலஸ்தீனமும் முள்ளிவாய்க்காலும்

தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டில், பலஸ்தீனப் படுகொலை, நாங்கள் யாவரும் சாட்சிகளாய் பார்த்திருக்க அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. இஸ்ராயேல் - பலஸ்தீன போரை வெறும் இஸ்ராயேல்-பலஸ்தீன போராக மட்டுமே அவதானிக்க முடியாதென்பதை எல்லோருமே அறிந்திருக்கின்றோம். எனது ஆய்வு நோக்கம் கருதி இப் போரை மத்திய கிழக்கில் பேரரசு கட்டமைப்புக்கான, புவிசார் அரசியல் தளத்தில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்ற பலப்பரீட்சைக்கான போராகவே நான் பார்க்க விரும்புகின்றேன். 

இந்தப் பலப்பரீட்சையில் ஏகாதிபத்திய வல்லதிகாரப் பலம் மத்திய கிழக்கில் நிலைநாட்டப்படும். ஏகாதிபத்திய பேரரசு வல்லாதிக்க போட்டியில், உப ஏகாதிபத்திய வல்லாதிக்க நிலைநாட்டுதல் தவிர்க்கப்பட முடியாததான அபத்தத்தை தோற்றுவிக்கின்றது. 

தமிழினப்படுகொலையும், தற்போது அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பலஸ்தீனப் படுகொலையும், மக்களின் உயிர்களை பலியெடுத்தும் ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்புக்கு தயாராகும் ஓர் அரசியல் - இராணுவ கட்டமைப்பை அம்பலப்படுத்துவது மாத்திரம் அல்ல, இவ்வாறான பலப்பரீட்சையில் மக்களின் உயிர்கள் ஒரு பொருட்டே அல்ல என்பதோடு, புவிசார் அரசியல் நலன்களுக்காக வல்லாதிக்கப் பேரரசு எவ் உயரிய விலையையும் கொடுக்கத் தயாராய் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றது.

தமிழினப்படுகொலை அரசியல் வரலாற்றுப் பின்புலத்திலும், தற்போது நடந்தேறிக் கொண்டிருக்கும் பலஸ்தீன இனப்படுகொலை அரசியல் வரலாற்றுப் பின்புலத்திலும் ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்பு ஒன்றாகவே இருப்பதால், இரண்டு இனப்படுகொலைகளுக்கும் இடையே, இனங்களின் இருப்பை அழிக்கும் உத்திகள் தொடர்பில் ஒற்றுமைத் தன்னை இருப்பதை அவதானிக்க முடிகின்றது. தமிழினப் படுகொலை, பலஸ்தீனப் படுகொலை தொடர்பான ஒப்பீட்டு ஆய்வுகள் மைய நீரோட்ட ஆய்வுப் பரப்பில் செல்வாக்குச் செலுத்த முடியாவிட்டாலும், ஆய்வுப்பரப்பு வெளியை திறந்து விட்டிருப்பது என்பது மனநிறைவு தருவதாய் உள்ளது. 

இவ்விரண்டு இனப்படுகொலைகளின் மூலகாரணியாய் இருப்பது காலணித்துவம். காலணித்துவ அரசியல் கட்டமைப்பு நிலத்தையும், மக்களையும் இனவாத மையப்படுத்திய இயங்குநெறிக்குள் காலணித்துவ, பின்காலணித்துவ அரசியல் வரலாற்றுச் சூழலை நிர்ப்பந்தித்தது. அதுவே நாளடைவில் வரையறுக்கப்பட்ட நியதியாக்கப்பட்டது. 

இவ்விரண்டு இனப்படுகொலைகளிலும் பிரித்தானிய காலணித்துவத்தின் பங்கு மிக குறிப்பிடத்தக்கது மாத்திரமல்ல முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. இது தொடர்பில் பேராசியர் சுஜித் சேவியரின் ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. அவர் குறிப்பிடுகின்ற அல்லது அறிமுகப்படுத்துகின்ற இன-நிற முதலாளித்துவம் (ethno-racial capitalism) என்ற கருத்தியலின் காரணியாக்க வகிபாகம் முக்கியமானது. 

இனவாதம், முதலாளித்துவம், வன்முறை இவற்றுக்கிடையிலான தொடர்பு புறக்கணிக்கப்பட முடியாதது. அதேநேரத்தில் சர்வதேச சட்டம் மறைமுகமான இனவாத ஏற்றத்தாழ்வை, குறிப்பாக வெள்ளைத்தோல் மீயுயர்வை தக்கவைத்துக் கொண்டே இருக்கும். அவர் குறிப்பிடுகின்ற காலணித்துவத்திற்கும் வன்முறை வரலாற்றிற்குமான தொடர்பு இன-நிற முதலாளித்துவ வில்லைகளுக்கூடாக ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. 

இந்த ஆய்வு சர்வதேச சட்டங்களின் உள்நோக்கத்தையும் அது உருவாக்கும் கட்டமைப்பையும் சிக்கலுக்குட்படுத்துகின்றது. இன்னொரு சாரார் பிரித்தானிய புவிசார் அரசியல் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் ஒற்றையாட்சி அரச கட்டமைப்பை தமிழினப்படுகொலைக்கான காரணியாக்கி அதை கேள்விக்குட்படுத்துகின்றனர். மேற்கூறப்பட்டவை தமிழினப் படுகொலையின் அரங்கேற்றத்தில் பல்வேறு காரணிகள், உள்ளக, வெளியக சக்திகள் செல்வாக்குச் செலுத்தின என்பதை அம்பலப்படுத்துகின்றது.

அதேபோல் தற்போது அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பலஸ்தீன இனப்படுகொலையில் எவ்வாறு பல்வேறு சக்திகள் ஈடுபட்டுள்ளன என்பதை, ஏகாதிபத்திய வல்லாதிக்கம் கட்டமைத்த சட்டகமே அம்பலப்படுத்துகின்றது என்பது கேலிக்குரியது. இந்த அதிகாரப் போட்டியில் பல்வேறு முகத்திரைகள் கிழிக்கப்படுவது, தமிழினப் படுகொலையின் சூத்திரதாரிகளின் முகத்திரைகளையும் கிழிக்கின்றது என்பது ஐயமுற வெளிப்படுத்தப்படுகின்றது. பின்-காலணித்துவ வரலாற்றுச் சூழலில் உருவாக்கப்பட்ட அரச வடிவ கட்டமைப்புக்கும், அரங்கேற்றப்பட்ட, பட்டுக்கொண்டிருக்கும் இனப்படுகொலைகளுக்கும், காலணித்துவத்திற்கும், ஏகாதிபத்திய வல்லரசுக் கட்டமைப்புக்கும், இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

மேற்குறிப்பிட்ட இரண்டு இனப்படுகொலைகளுக்குமான புவிசார் வெளி என்பது தெளிவாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. கடலை அண்மித்த வெளி. முள்ளிவாய்க்கால், காசா இவை இரண்டுமே கடலை அண்மித்த புவிசார் வெளியை கொண்டுள்ளது. இதனூடாக மக்கள் ஓரங்கட்டப்பட்ட விதம் முக்கியமானது. வைத்தியசாலைகள் இரண்டு இனப்படுகொலைகளிலுமே தாக்குதல்களுக்குள்ளாகின, மனித நேயப்பணிகள் முடக்கப்பட்டன, உணவை ஆயுதமாக்கி பட்டினிச்சாவின் விளிம்பு வரைக்கும், போர் வலயத்திற்கு உட்பட்டோர் நிர்ப்பந்திக்கபட்டனர்.

மனித உரிமை காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் வல்லாதிக்க நாடுகளின் இனப்படுகொலை உடந்தைத்தன்மை. இனப்படுகொலை குற்றப்பொறுப்பில் உடந்தைத்தன்மை என்பது குற்றத்தில் பங்குகொள்ளுதலாக கணிக்கப்படுகின்றது. இனப்படுகொலை குற்றத்திற்கு உடந்தையான ஆனால் நேரடியாக தங்கள் கைகள் இரத்தம் தோயவில்லை என்று தப்பித்துக் கொள்ளும் மனித உரிமைக் காவல் நாடுகள், தங்களையும் காப்பாற்றிக்கொண்டு, இனப்படுகொலை குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களையும் காப்பாற்றிக்கொள்ளல் என்பது தண்டனை விலக்கீட்டுத் தன்மைக் கலாச்சாரத்திற்கு வலுச்சேர்க்கின்றது.

இந்த தண்டனை விலக்கீட்டுச் கலாச்சாரத்தில் நான் ஆய்வுக்குட்படுத்திய புதிய அலகான கதாநாயக தண்டனை விலக்கீட்டுத்தன்மை குறிப்பிடத்தக்கது (Heroic impunity) குற்றவாளிகளை கதாநாயகர்களாக விபரித்து அந்த கதாநாயக தன்மைக்குள் குற்றங்களுக்கான விலக்கீட்டுரிமை கொடுக்கின்ற செல்நெறியை தற்போதைய இனவாத கட்டமைப்பு உருவாக்கியுள்ளது. கதாநாயகத் தன்மைக்கும், இனப்படுகொலை குற்றத்திற்குமான முடிச்சு தண்டனை விலக்கீட்டுரிமை கலாச்சாரத்தை வலுவாக்கின்றது.

இவ் வலுவாக்கல் செயன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களின் பொறுப்புக்கூறலிற்கான கோரிக்கை அர்த்தமற்றதாகின்றது. பொறுப்புக்கூறல் செயன்முறைக் கட்டமைப்பு வலுவிழந்த நிலையில்தான், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்ந்து இடம்பெறுகின்றது. இது பலஸ்தீனத்தில் ‘வலிந்து குடியிருப்பதினூடு’ (settler colonialism) தொடர்ந்து நடக்கின்றது. 

வடக்கு-கிழக்கில் சிங்கள-பௌத்த மயமாக்கலூடாகவும், இராணுவ மயப்படுத்தலுக்கூடாகவும் இது தொடந்து அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது. பலஸ்தீனத்திலும், வடக்கு-கிழக்கிலும், விடுதலைக்கும், நிலமீட்புக்குமான தொடர்பு துண்டிக்கப்பட முடியாதது. தமிழின விடுதலையும், பலஸ்தீன மக்களின் விடுதலையும், நிலமீட்பும் உதிரியான இயங்குதள வெளி அல்ல.

ஒரு தேசத்தின் கூட்டிருப்பு என்பது நிலத்தில் தங்கியுள்ளது. நிலமின்றி தேசத்திற்கான கோரிக்கை செல்லுபடியற்றதாகின்றது. தேசத்திற்கான கோரிக்கையை நிராகரிப்பதற்கு, நிலக் கூட்டுரிமை கோரிக்கையை இல்லாது செய்தல், உத்தி சார்ந்து அவசியமாகின்றது. நிலக் கூட்டுரிமை கோரிக்கையை இல்லாது செய்வதற்கான உத்தியாகத்தான் வலிந்து குடியிருப்பது (settler colonialism) வடக்கு-கிழக்கை சிங்கள-பௌத்த மயமாக்குவதோடு இராணுவ மயப்படுத்துவதும் அவசியமாக்கப்படுகின்றது. கூட்டு நில உரிமைக் கோரிக்கையை “வாக்களிக்கப்பட்ட நாடு” என்ற சொல்லாடல்களுக்கூடாக பூசி மெழுகுதல் இலகுவானது. ஈழத்தழிழ், பலஸ்தீன, இரு தளங்களிலும் “வாக்களிக்கப்பட்ட நாட்டை மீட்டெடுத்தல்” சொல்லாடல்களுக்கூடாக மதச் சாயத்தைப் பூசி பேரரசுக் கட்டமைப்பு நலன்களை முன்னெடுத்தல் இலகுவான உத்தியாகப் பயன்படுத்தப்படுகின்றது. சிறிலங்காவில் புத்தர் வாக்களித்த தேசத்தை மீட்டெடுத்தல், பலஸ்தீனத்தில் யாவே வாக்களித்த தேசத்தை மீட்டெடுத்தல். வாக்களிக்கப்பட்ட தேசத்தை மீட்டெடுத்தல் சொல்லாடல் 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் சிறிலங்காவிலும் பலஸ்தீனத்திலும் காலணித்துவத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட காலணித்துவ உத்தி, காலணித்துவ மேலாண்மையை தக்கவைப்பதற்காக. 

நிலம் என்ற கருத்தியல் பூகோள வெளியை மட்டும் குறிப்பிடவில்லை. ஏகாதிபத்தியத்தில் பேரரசுக் கட்டமைப்புக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலம் என்பது புவிசார் அரசியலில் மிக முக்கியமானது. வடக்கு-கிழக்கின், பலஸ்தீனத்தின் கேந்திர முக்கியத்துவம் புவிசார் அரசியலில் மிக கணிசமான செல்வாக்குச் செலுத்துகின்றது. கேந்திர முக்கியத்துவம் சார்ந்த புவியியல் வெளிகளை கையகப்படுத்தி கட்டுப்படுத்தல், இங்கு நிலம் என்று குறிப்பிடுவது வெறும் நிலத்தை மட்டும் குறிப்பிடவில்லை, கடல் வெளியையும் சேர்த்தே குறிப்பிடுகின்றேன் வல்லாதிக்க முகாமைத்துவத்திற்கு அவசியமானது. பலஸ்தீனம், மத்திய கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தெற்காசியாவில் / ஆசியாவில் வடக்கு-கிழக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கின்றது, திருகோணமலை துறைமுகம் உள்ளடங்கலாக.

தமிழினப் படுகொலையிலும், பலஸ்தீனப் படுகொலையிலும் இனப்படுகொலை ஒரு வரலாற்று செயன்முறையாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. சிறிலங்காவில் 1815 கண்டி சாசனத்திலிருந்தும், பலஸ்தீனப்படுகொலை நக்பா 1948ல் இருந்தும் ஆரம்பமாகின்றது. இவ்விரு இனப்படுகொலைகளுக்கான உத்திகள் அரச இயந்திரத்தினூடாக நிறுவனமயப்படுத்தப்பட்டிருப்பதோடு, சாதாரண மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அசாதாரண இயங்குநெறி மக்களுக்கு சாதாரணமாக தென்படுகின்றது. இது ஒரு பண்பாடாகவே மாறிவிட்டுள்ளது எனக் கூறினால் மிகையாகாது என நினைக்கின்றேன்.

தமிழ்த்தேசிய நம்பிக்கையைச் சிதைத்தல்

ஆயர் இராயப்பு ஜோசப்பின் இனப்படுகொலைக்கான நீதிவேண்டிய கோரிக்கை 2009இற்கு பின்னரான அரசியல் வரலாற்றுச் சூழலில் மிக அவசியமானது. தமிழ்த் தேசிய நம்பிக்கை விழுமியங்களை சிதைப்பதற்கான முயற்சிகள், பல தசாப்தங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், 2009இற்குப் பின்னர் அதை ஒரு உளவியற் போராகவே சிறிலங்கா அரசு மிக வினைத்திறனோடு முன்னெடுத்திருந்தது. மிக அண்மையில் யாழில் ஒரு பாடசாலையில் நடந்த விளையாட்டுப்போட்டியில் காட்சிப்படுத்தப்பட்ட பூ கார்த்திகைப்பூவா? காந்தள் பூவா? என்ற விடயம். மாணவர்கள் அதை காந்தள் பூ என்றும் தாம் காவல்துறை குறிப்பிடும் கார்த்திகைப் பூவை வைக்கவில்லை என்பதும்;, அதை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் விசாரணையும் தமிழ்த் தேசிய நம்பிக்கையைச் சிதைத்தலின் மிக அண்மைய உதாரணமாகும். கார்த்திகைப் பூ தேசிய பூவாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அது தேசத்தின் குறியீடாக இருக்கின்றது. 

மீண்டும் நான் போர் நடத்தப்பட்ட புவியியல் வெளியைப் பற்றிய பொருள் விளக்கத்திற்கு செல்ல விரும்புகின்றேன். போர் அரங்கேற்றப்படுவதற்காக தெரிந்தெடுக்கப்பட்ட களம் இரு இனப்படுகொலைகளிலுமே கடலை அண்டிய பிரதேசம். போர் வலயத்திற்குள் அகப்பட்ட மக்களுக்கு வெளியேறுவதற்கான அல்லது தப்பிப்பதற்கான தெரிவைக் கொடுக்காது ஓரங்கட்டுதல் என்பது, அடக்கப்பட்ட மக்களுடைய விடுதலைக்கான போரின் நம்பிக்கையை சிதைத்தல் ஆகும். ஏவ்வாறெனில் அடக்கப்பட்ட மக்களுக்காக உருவான ஃ உருவாக்கப்பட்ட விடுதலைப் போராளிகளின் இயலாத்தன்மையில் மூலதனமிட்டு, விடுதலை வீரர்கள் தங்கள் சொந்த மக்களையே காப்பாற்ற முடியாதவர்களாய், உணவு கொடுக்க முடியாதவர்களாய், மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாய், ஒட்டுமொத்தத்தில் அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாய் காட்டுவதன் மூலம், விடுதலை வேண்டிப் போராடுபவர்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிக்கலுக்குட்படுத்துவதோடு, அவ் நம்பிக்கையை கட்டுடைப்பதுமாகும். 

நம்பிக்கைக் கட்டுடைப்பில் மிக மோசமான பாதிப்பை கொண்டுவரக்கூடியது, மக்கள் விடுதலைக்காக போராடுகின்ற கூட்டு நம்பிக்கையை உடைப்பதாகும். அடக்குமுறைக்குட்பட்ட சமூகம், அடக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கு கூட்டு நம்பிக்கை அவசியமாகின்றது. அந்த கூட்டு நம்பிக்கையே அவர்களின் போராட்ட இயங்குதளத்தை தக்க வைத்துக் கொள்ளும். கூட்டு நம்பிக்கையில் இருந்து தான் கூட்டுப் பிரதிநிதித்துவப்படுத்தல் உருவாகின்றது. கூட்டு பிரதிநிதித்துவப்படுத்தலில் கூட்டு முகவராண்மை (collective agency) தங்கியிருக்கின்றது. கூட்டு முகவராண்மையை அடக்குமுறைத் தளத்திலிருந்து வெளியகற்றல் பேரரசுக் கட்டமைப்புக்கு இன்றியமையாதது. அடக்குமுறைக்கு எதிராய் போராடும் மக்களிடமிருந்து கூட்டு விடுதலை முகவராண்மையை இல்லாது ஒழித்தல் மூலம் தமிழினத்திற்கான விடுதலை கொடுப்பவர்களாக, தெற்கிலிருந்தும், வேறு நாடுகளிலிருந்தும் வெள்ளை மீட்பர்களை இறக்குமதி செய்தல். இதனூடாக விடுதலை மையப்புள்ளியை களத்திலிருந்து அகற்றுதல். 

பிரதிநிதித்துவப்படுத்தல்; பின்காலணித்துவ, பெண்ணியற் கற்கை திறனாய்வுகளில் மிக முக்கியமான கருத்தியலாக கொள்ளப்படுகின்றது, ஒரு சமூகத்தின் வலுவாக்கற் பயணத்தில் அடக்குமுறைக்குட்பட்ட சமூகத்தின் முகவராண்மைத் தன்மையை அகற்றுதல் - புலிக்கு பல்லை பிடுங்குவதற்கு ஒப்பானது. முகவராண்மைத்தன்மை தான் பிரதிநிதித்துவப்படுத்தலை விடுதலை மையத்தை நோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கும், இது கட்டுடைக்கப்படும் போதுதான் பிரதிநிதித்துவப்படுத்தலை அடக்குமுறைக்குட்பட்ட மக்கள் சார்பாக அடக்குமுறைக்குட்பட்ட மக்கள் தவிர்த்து ஏனையோர் செய்ய முற்படுதல் நிகழ்கின்றது, இது இயல்பாக உருவாவதல்ல. மையத்தை உடைத்து, பரவலாக்கப்பட்ட பிரதிநிதித்துவப்படுத்தலின் பல்வகைத்தன்மையில், அதிகாரத்தை கையில் கொண்டுள்ளோரிடம் பிரதிநித்துவக் கட்டமைப்பு ஒப்படைக்கப்பட்டு, அவ் அதிகாரம் தான் உண்மை என நினைப்பதை, உண்மையாக கட்டமைத்து பொது வெளியில் அரசியல் நுகர்வுக்காக விடுகின்றது. அதிகாரம் கட்டமைக்கும் அரசியல் உண்மையில் மற்றமைகளின் சொல்லாடல்களுக்கான வெளி இல்லாமல் போகின்றது. மற்றமைகளின் விவரணம் என்பது மாற்று விவரணம், அது அதிகாரம் கட்டமைக்கும் உண்மையை சிக்கலுக்குட்படுத்துகின்றது.

 பூக்கோ, உண்மைக் கட்டமைப்பு, அதிகார வரம்புகளுக்கு அப்பாற்ப்பட்டதாக இருக்க முடியாது என குறிப்பிடுகின்றார். மேற்கூறப்பட்ட இரண்டுமே, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளது. மற்றமைகளின் கதைகள் எப்போதுமே அதிகாரத்தையும் அதிகாரம் கட்டமைக்கும் உண்மையை சவாலுக்குட்படுத்தும் போது அதிகாரத்தின் வலுச்சமநிலை கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. இவ்வாறானதொரு கொதிநிலை நிச்சயமற்ற தன்மையை கட்டமைத்துக் கொண்டே இருப்பதால், அச்சத்தை உருவாக்குகின்றது. அதிகாரம் தனது ஐயுறவிலா உண்மைக்குள் இருந்து தான், நிச்சயமற்ற தன்மையை அரசியல் நுகர்விற்காக பரப்புகின்றது. ஆனால் மற்றமைகள் கட்டமைக்கும் உண்மை, அதிகாரத்தின் ஐயுறவில்லாத உண்மையை கட்டவிழ்க்கின்றது. 

தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கை விழுமியங்கள் அதிகாரம் கட்டமைக்க முயலும், ஐயயுறவில்லா உண்மையின் நிச்சயத்தன்மையை கேள்விக்குட்படுத்திக் கொண்டே இருக்கப் போகின்றது. ஏனெனில் அது மற்றமைகள் தங்கள் அடக்குமுறைக்குட்பட்ட வாழ்ந்த, வாழ்கின்ற அனுபவத்தால் கட்டமைத்த உண்மை. இதனால் தான் தமிழினப்படுகொலை என்பது எப்போதுமே அதிகாரம் கட்டமைக்க முயலும் உண்மையை சிக்கலுக்குட்படுத்தும். ஆயர் இராஜப்பு ஜோசப்பின் தமிழினப் படுகொலைக் கோரிக்கையின் தீர்க்கதரிசனப் பார்வை, சாட்சியங்களின் விவரணங்களிலிருந்து உண்மையைக் கட்டமைத்தலை மையமாகக் கொண்டது. மற்றமைகளின் உண்மை, முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்ட இனப்படுகொலையிலிருந்து உயிர் பிழைத்த சாட்சியங்களிலிருந்து கட்டமைக்கப்பட்ட உண்மை, பொய்மையை தூங்கவிடாது நீதியை தட்டிஎழுப்பிக் கொண்டே இருக்கப்போவது. 

தமிழினப் படுகொலைக் கோரிக்கையூடாகத்தான் தேசக்கோரிக்கையையும், தமிழ்த்தேசிய நம்பிக்கையின் விழுமியங்களையும் மீட்டெடுக்க முடியும் என்பது ஆயர் இராஜப்பு ஜோசப்பின் நம்பிக்கையாக இருந்தது. ஈழத்தமிழர்கள் ஒரு தேசத்திற்குரியவர்கள் என்பதை, தமிழினப்படுகொலைக் கோரிக்கையூடான நீதிப் பயணத்தில்தான் நிறுவ முடியும் என நம்பினார். அந்த நம்பிக்கை தமிழ்த்தேசிய நம்பிக்கையிலிருந்து எழுகின்றது. 

தமிழினப்படுகொலையின் இயக்கிகள், தமிழ்த் தேசியத்தின் மீதான நம்பிக்கையை இல்லாது ஒழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். அது ஓர் உளவியல் போர் ஈழத்தமிழினம் எதிர்கொள்வது மட்டுமல்ல, விடுதலைக் கிளர்ச்சியை அடக்குவதற்கான ஓர் உழரவெநச iளெரசபநnஉல உத்தியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.  

தமிழினப்படுகொலை ஆய்வுமையத்தின் அவசியம்

தமிழினப்படுகொலையும், பலஸ்தீனப் படுகொலையும், இனப்படுகொலை கற்கை திறனாய்வு வெளியில் ஆய்வுப் பரப்பை திறந்துவிட்டுள்ளது. இனப்படுகொலைகளில் பொதுத் தன்மை இருந்தாலும் ஒவ்வொரு இனப்படுகொலையும் தனித்துவமானது. அந்த தனித்துவத்தை வெளிக்கொணர்தல் ஆய்வுகளுக்கூடாகத் முடியும் என நம்பிக்கை கொண்டால், தமிழினப்படுகொலை ஆய்வுமையத்தின் அவசியம் வரலாற்றுத் தேவையாகின்றது. 

முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்ட பேரவலம் இனப்படுகொலையா இல்லையா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இனப்படுகொலைச் சாசனத்தின் வரைவுகளை சட்டரீதியாக அணுகுவோர் இந்;த விவாதத்தின் கொதி நிலையை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துள் இருக்கின்றனர், காரணம் இனப்படுகொலை என்பது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டால் தமிழினத்தின் தேசக்கோரிகையை ஏற்றுக்கொண்டதாகிவிடும், அதுவே சுய நிர்ணய உரிமைக்கும் வழிவகுத்துவிடும். இனப்படுகொலை உள்நோக்கம் கொண்ட அரச கொள்கையோடு இன்னொரு இனம்-சமூகம் சேர்ந்திருக்க முடியாது.  தமிழினப்படுகொலைக்கான தனித்தன்மையை ஆய்வு செய்ய ஓரளவிற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், தற்போது பலஸ்தீனத்திற்கு திரட்டப்படுகின்ற அளவிற்கு முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இனப்படுகொலையின் ஒரு பரிமாணமே சட்டரீதியாக அணுகுதல், ஆனால் அதற்கு பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.

மிக அண்மையில் எடுக்கப்பட்ட முயற்சிகளில் தமிழினப்படுகொலைக்கு உடந்தையானவர்களை அடையாளம் காணுதலில் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா உட்பட்ட பல்வேறு நாடுகளின் பட்டியல் இனங்காணப்பட்டது. பொறுப்புக்கூறல் பொறிமுறையில் இவர்களுக்கான தண்டனை என்ன என்பதையும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். அதைவிட இனப்படுகொலையின்  சூத்திரதாரியாக அடையாளம் காணப்படும் காலணித்துவத்தின் பங்கில் அவர்களுக்குரிய தண்டனை போன்றன இன்னும் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை. தமிழினப்படுகொலையில் மதத்தின் வகிபாகம் ஆய்வுக்குட்படுத்தப்படுவதான முயற்சிகள் தெரிகின்றன. இராணுவமயப்படுத்தப்பட்ட பௌத்தம் பற்றிய அல்லது மதத்திற்கும் வன்முறைக்கும் இடையிலான தொடர்பு பற்றி ஆய்வுகள் வெளியாகி உள்ளன. ஆனால் தமிழினப்படுகொலைக்கும் பௌத்த மதத்திற்குமான தொடர்புகள் பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடங்கவில்லை.

 தற்போதைய இனப்படுகொலை ஆய்வுப் பரப்பில் இனப்படுகொலைச் சாசனத்தில் இருண்ட பக்கங்களும் அம்பலப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச சட்டம் எவ்வாறு இனவாதத்தை அடிப்படையாக கொண்டதோடு வெள்ளை மேலாண்மையை தக்கவைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது என்பதும் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது ஆய்வுகள் மூலமாக. இனப்படுகொலைக்கு பல்வேறு அணுகுமுறைகள் உண்டு. உதாரணமாக சமூகவியல், மானுடவியல், உளவியல் இ;ன்னும் பல. இவை இன்னும் ஆய்வு செய்யப்படாமலேயே உள்ளன. இவற்றை விட இனப்படுகொலையோடு தொடர்புடைய ஏனைய குற்றங்களும் இனங்காணப்பட்டுள்ளன அவையும் தமிழ் ஆய்வுப்பரப்பில் ஆய்வுக்குட்படுத்தப்படாத வெளியாகவே உள்ளது. உதாரணத்திற்கு மிக அண்மைக் காலமாகவே பேசு பொருளாகி உள்ள அரசியல் இனப்படுகொலை (Pழடவைiஉயட புநழெஉனைந), அரசியல் படுகொலை, பண்பாட்டுப் படுகொலை, நினைவுத்திறப் படுகொலை, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது.

ஒரு சமூகத்தின் இருப்பு என்பது நினைவுத்திறத்தை தக்கவைப்பதில் தங்கியுள்ளது. அதே நேரத்தில் தேவை, நோக்கம் கருதிய நினைவுத்திற மீள் வாசிப்பு தென்னிலங்கையில் அடிக்கடி நிகழ்கின்றது. உதாரணமாக தென்னிலங்கையில் “அபாயகரமான நினைவுத்திறம்” அடிக்கடி மீள்வாசிக்கப்படுகிறது, தொடர்ந்தும் ஈழத்தமிழர்களை சிங்கள-பௌத்த மக்களின் எதிரியாக தக்கவைப்பதற்கான முயற்சிகள் வரலாற்றில் தமிழ்நாட்டிலிருந்து வந்த படையெடுப்பை மேற்கோள்காட்டி. ஈழத்தமிழினம் அடக்குமுறைக்கெதிராக வெவ்வேறு வடிவங்களில் போராட்டத்தை முன்னெடுத்தது தொடர்பான நினைவுகள் எல்லாமே திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. தமிழின நினைவுத்திறத்தை ஆய்வு செய்வோரும் கூட பெரும்பாலுமே விடுதலை மைய அணுகுமுறையை தவிர்த்த தாராளவாத மையத்திலிருந்தே அணுக முற்படுகின்றனர். மேற்குலகிலிருந்து படையெடுக்கும் ஆய்வாளர்களுக்கென்று தனி அரசியல் நிகழ்ச்சித்திட்டம் உண்டு என்பது வெள்ளிடைமலை.

ஈழத்தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட பொருளாதார குற்றங்கள் தொடர்பில் 

இதுவரையும், எனக்குத் தெரிந்து, எந்த ஆய்வுமே முன்னெடுக்கப்படவில்லை. பொருளாதார குற்றங்கள் தமிழினப்படுகொலை சார்ந்து விவரணம் பெறவில்லை. அதே போல் மரபுரிமை சார் பக்கங்களும் இன்னும் புரட்டப்படாமலேயே உள்ளது. அதைவிட தமிழினப்படுகொலைச் சாட்சியங்களின் நேரடி அனுபவங்கள் எவையுமே தமிழினத்திடம் இல்லை. அவை பெரும்பாலுமே தமிழர் அல்லாத தனியார் அரச சார்பற்ற நிறுவனங்களிடமே உள்ளன, அவையே அதற்கான ஏகபோக உரிமையையும் வைத்துக்கொள்கிறது. 

நில அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர், பொருளாதார சுமையால் திருமணம் ஆகாமல் இருப்போர் அதனால் ஏற்படுத்தப்பட்ட தலைமுறையின்மை, நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்புணர்வு, தமிழ்ப்பெண்களுக்கெதிரான வன்கொடுமை, இராணுவமயமாக்கம் அதன் விளைவுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் இவை போன்றன தமிழினப்படுகொலை தொடர்பிலும், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்பிலும் ஆய்வு செய்யப்படவேண்டும். இவற்றிற்கான முயற்சி கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும் என்பது நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. போதைவஸ்து பாவனையின் அதிகரிப்புக்கும், வன்முறைக்கும், யுக்திய நடவடிக்கைக்கும், யுக்திய நடவடிக்கையால் சிறையில் தள்ளப்படும் ஏராளமான தமிழ் இளையோருக்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு. இனிதொரு தலைமுறை விடுதலை பற்றிய நம்பிக்கையை கொண்டிருக்கக்கூடாது என்பதற்காக இவை உருவாக்கப்படுகின்றது என்பதன் உள்நோக்கம் கவனிக்கப்பட வேண்டும்.

ஆய்வுகள் எல்லாவற்றிற்கான தீர்வைத் தரமுடியாவிட்டாலும், உண்மை நோக்கிய தேடலை உருவாக்கி நம்பிக்கைகளை உருவாக்குகின்றது. தமிழ்த்தேசிய விடுதலை மீதான நம்பிக்கையை தக்க வைப்பதன் மூலம் தான் விடுதலைப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை பிற்போடவேண்டுமென்பது ஐக்கிய தேசிய கட்சியின்...

2024-05-29 16:28:15
news-image

ஜனாதிபதி தேர்தலை பிற்போட நாட்டு மக்கள்...

2024-05-29 16:26:18
news-image

முச்சக்கரவண்டியுடன் பஸ் மோதி விபத்து; 03...

2024-05-29 20:36:22
news-image

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை...

2024-05-29 20:12:26
news-image

இந்நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் மாற்றத்திற்காக...

2024-05-29 20:06:26
news-image

தோல்வியை மறைக்கவே தேர்தலை பிற்போடத் திட்டம்...

2024-05-29 16:21:18
news-image

அடுத்தடுத்து 4 பேர் பலியாகிய சோகம்;...

2024-05-29 19:48:51
news-image

7 வயது சிறுவனை தலைகீழாக கட்டி...

2024-05-29 19:29:26
news-image

பிரபல்யமானவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் -...

2024-05-29 16:27:11
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 12 பெண்கள் உட்பட...

2024-05-29 18:04:40
news-image

மாலபே, பொரலஸ்கமுவ, மாகும்புர ஆகிய நடுத்தர...

2024-05-29 16:19:38
news-image

26 நாட்களில் 96,890 சுற்றுலாப் பயணிகள்...

2024-05-29 17:18:29